கண்ணன் குடியிருக்கும் கோயில்கள் - 4

குருவாயூரும், கிருஷ்ணனாட்டமும்
குருவாயூர் கோயில்
குருவாயூர் கோயில்

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற கிருஷ்ண கோயில் குருவாயூரில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா குழந்தையாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவருக்கு குழந்தை கிருஷ்ணன் என்ற பொருள்படும்படியாக மலையாளத்தில் ‘உன்னி கிருஷ்ணன்’ என்பது திருப்பெயர். குருவாயூரப்பன் என்றும் அழைக்கப்படுகிறார்.

‘உன்னி கிருஷ்ணன்’ எனும் குருவாயூரப்பன்
‘உன்னி கிருஷ்ணன்’ எனும் குருவாயூரப்பன்

உன்னி கிருஷ்ணன் விக்ரகம் பாதாள அஞ்சனம் என்ற மருந்துக் கலவையால் உருவானது. பாதாள அஞ்சனம் என்பது பல்வேறு மூலிகைகளால் தயார் செய்யப்படுவது. குரு பகவானும், வாயு பகவானும் சேர்ந்து பிரதிஷ்டை செய்த கோயில் இது. இதனாலேயே இது குருவாயூர் எனவாயிற்று. கோயில் கொடிமரத்துக்கு அருகிலுள்ள பலிபீடம், குரு மற்றும் வாயுவின் அதிஷ்டானம் என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் இத்தலத்தை காட்டிக் கொடுத்த சிவபெருமான், குருவாயூருக்கு அருகிலேயே 1 கி.மீ. தூரத்தில் மம்மியூர் என்ற இடத்தில் கோயில் கொண்டுள்ளார். குருவாயூரப்பனை வழிபட்ட பின்னர் மம்மியூர் மகாதேவர் கோயிலிலும் பக்தர்கள் தரிசனம் செய்து திரும்புகிறார்கள்.

தினமும் 12 அலங்காரம்

குருவாயூர் கோயிலில் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். அப்போது முதல்நாள் இரவில் ஸ்ரீ உன்னிகிருஷ்ணர் சூடியிருந்த ஆடைகள், மாலைகள், ஆபரணங்கள் ஆகியவற்றோடு தீபாராதனை நடைபெறும். இதற்கு நிர்மால்ய தரிசனம் என்று பெயர். இதனை தரிசிக்க ஒவ்வொரு நாளும் இரவு விடிய விடிய பக்தர்கள் காத்திருப்பார்கள். காலை முதல் இரவு வரை குருவாயூரப்பனுக்கு 12 முறை அலங்காரம் செய்யப்படுகிறது. இரவு 10 மணிக்கு நடையடைப்புக்கு முன்பாக நடைபெறும் ‘திருப்புக்கா’ தரிசனத்தின் போது, ‘அஷ்டகந்தம்' என்னும் எட்டுவிதமான வாசனைப் பொருட்களால் சுவாமிக்கு தூபமிடுவார்கள். இதனை தரிசிப்பதும் பெரும் பாக்கியமாக கருதப்படுகிறது.

குருவாயூர் கோயில்
குருவாயூர் கோயில்

எளிய தரிசனம்

கருவறை நுழைவாயில் சிறிதாக இருந்தாலும், வெகுதூரத்தில் இருந்து கூட சுவாமியை தரிசிக்கும் விதத்தில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. தீபஸ்தம்பம், துவஜஸ்தம்பம் (கொடிமரம்) பலிபீடம் ஆகியவை மூலவரை மறைப்பதில்லை. இங்கு பூஜை செய்யும் மேல்சாந்தி ஆறுமாத காலம் குடும்பத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என்ற நியதி பின்பற்றப்படுகிறது. குழந்தைக்கு சோறூட்டுவது, துலாபாரமாக வாழைப்பழம், இளநீர், வெல்லம், கயிறு ஆகியவற்றைக் கொடுப்பது ஆகிய நேர்த்திக்கடன்கள் முக்கியமானவை.

கிருஷ்ணனாட்டம்

குருவாயூர் கோயிலின் புகழ்பெற்ற நேர்த்திக் கடன்களில் ஒன்று கிருஷ்ணனாட்டம். செவ்வாய்க் கிழமை தவிர மற்ற எல்லா நாட்களிலும் குருவாயூர் கோயிலில் இரவு நடை அடைத்த பின்னர், இரவு விடிய விடிய நடைபெறும் கிராமிய நடனத்துக்கு கிருஷ்ணனாட்டம் என்று பெயர். தலையில் மயில் தோகைகளாலான கிரீடத்தை சூட்டிக்கொண்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் லீலைகளை எண்ணி கலைஞர்கள் நடனமாடுவார்கள்.

வங்க மொழியில் ஜெயதேவ என்ற கவிஞர் கீதாகோவிந்தம் என்ற கவிதை நூலை எழுதினார். இவை முழுக்க பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் புகழ்பாடக்கூடிய பாடல்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு, கோழிக்கோடு மகாராஜாவும், சிறந்த கவிஞருமான மானதேவா என்பவர் கிருஷ்ணகீர்த்தி என்ற கவிதை நூலை எழுதினார். இந்தப் பாடல்களைப் பாடியபடி, குருவாயூர் கோயிலில் இரவு முழுக்க கலைஞர்கள் நடனமாடும் வழக்கத்தை மகாராஜா மானதேவா உருவாக்கினார்.

இளம்பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடவும், திருமணமாகி பிரிந்த தம்பதியர் மீண்டும் சேர்ந்து வாழவும், எதிரிகள் தொல்லைகள் நீங்கவும், விருப்பங்கள் நிறைவேறவும் வேண்டி இந்த நடன நிகழ்ச்சியை பக்தர்கள் நடத்துகிறார்கள். இதற்கு ரூ. 3,000 வரை கட்டணம். இதனை நடத்த விரும்புவோர் முதல் நாளே கோயில் தேவஸ்வம் அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

குருவாயூர் கோயில்
குருவாயூர் கோயில்

நாராயணீயம்

குருவாயூரப்பனை மனதில் கொண்டு, சுவாமி நாராயண பட்டத்திரி சமஸ்கிருதத்தில் எழுதிய புகழ்பெற்ற நூல் நாராயணீயம். இதனை தினமும் பாராயணம் செய்பவர்கள் இருக்கிறார்கள். எவ்வித நோயையும் தீர்க்கும் வல்லமை நாராயணீய பாராயணத்துக்கு உண்டு. தமிழிலும் இந்நூல் வெளிவந்திருக்கிறது. இதுபோல் பூந்தானம் என்ற மஹான் எழுதிய ‘ஞானப்பானை’ என்ற மலையாள நூல் குருவாயூரின் தலச் சிறப்பை விளக்குகிறது.

குருவாயூரப்பன்
குருவாயூரப்பன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in