திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது - 30ம் தேதி சூரசம்ஹாரம்!

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் கூட்டம் (கோப்புப் படம்)
திருச்செந்தூர் சூரசம்ஹாரம் கூட்டம் (கோப்புப் படம்)படம்: என்.ராஜேஷ்

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டிவிழா இன்று தொடங்கியது. விழாவில் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 30ம் தேதி நடக்கிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடாகப் போற்றப்படுகிறது. இங்கு கந்த சஷ்டி விழா இன்று காலை முதல் தொடங்கியது. இதனால் கோயில் திருநடை இன்று அதிகாலை ஒரு மணிக்கே திறக்கப்பட்டது. தொடர்ந்து யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. தொடர்ந்து மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இன்று நண்பகல் யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது.

நடை பூட்டப்பட்டு, மீண்டும் திறப்பு!

இன்று சூரியகிரகணம் என்பதால் மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோயில் நடை பூட்டப்பட்டுவிடும். சூரியகிரகணம் முடிந்ததும் மாலை 6.45க்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும்.

கந்த சஸ்டி விழாவின் சிகர நிகழ்வான சுவாமி சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வரும் 30 ம் தேதி மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் கடற்கரையில் நடக்கிறது. வழக்கமாகவே சூரசம்ஹாரத்திற்கு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவது வழக்கம். அதிலும் நிகழாண்டில் சூரசம்ஹாரம் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால் கூடுதல் பக்தர்கள் வருவதற்கு வசதியாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. தொடர்ந்து 31ம் தேதி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடக்கிறது. அதோடு கந்த சஷ்டி விழா நிறைவடைகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in