காக்கும் கார்த்திகைச் செல்வன் - 38

கந்தனின் திருத்தலங்கள் - 30.கட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில்
கட்டி சுப்பிரமணிய சுவாமி
கட்டி சுப்பிரமணிய சுவாமி

முருகப்பெருமான் கோயில் கொண்ட தலங்களுள், கர்நாடக மாநிலம், தொட்டபல்லாபூர் தாலுகா, துபாகெரே அருகே பெங்களூரு புறநகர் பகுதியில் அமைந்துள்ள கட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பெங்களூருவில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள இத்தலத்தில், முதன்மைக் கடவுளான கார்த்திகேய சுவாமி, நரசிம்ம சுவாமியுடன் ஒன்றாக சேர்ந்து அருள்பாலிக்கிறார்.

புகழ்பெற்ற மூன்று நாக தலங்களில் இத்தலம் மத்ய சுப்ரமண்யா என்று அழைக்கப்படுகிறது. (ஆதி சுப்ரமண்யா - தட்சிண கன்னடா - சுல்லியா தாலுகாவில் உள்ள குக்கே சுப்பிரமணியா கோயில், மத்ய சுப்பிரமண்யா - பெங்களூரு கிராமம் - தொட்டபல்லாபூர் தாலுகாவில் உள்ள கட்டி சுப்ரமண்யா, அந்நிய சுப்ரமண்யா - தும்கூர் மாவட்டம் - பாவகடா தாலுகா - நாகலமடிக்கே சுப்ரமண்யா கோயில்)

பிரபல யாத்திரைத் தலமாகவும் விளங்கும் இத்தலம், தென்னிந்தியாவில் நாகர் வழிபாட்டுக்கான முக்கிய மையமாகவும் போற்றப்படுகிறது. சுப்பிரமணிய சுவாமி, லட்சுமி நரசிம்ம சுவாமி விக்கிரகங்கள் பூமியில் இருந்து தோன்றியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. 600 ஆண்டுகளுக்கும் மேலான பதிவு செய்யப்பட்ட வரலாற்றுத் தகவல்களைக் கொண்டுள்ள இக்கோயில் முதன்முதலில் சந்தூர் பகுதிகள், பெல்லாரியின் சில பகுதிகளை ஆட்சி புரிந்த கோர்படே ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது.

தல வரலாறு

முன்பொரு காலத்தில் திரிபுராசுரன் என்ற அசுரன், முனிவர்கள் மற்றும் தேவர்களுக்கு பல இன்னல்கள் அளித்து வந்தான். அவனை சிவபெருமான் அழித்தார். இதைத் தொடர்ந்து அசுரனின் மகன்கள் தகாசுரன், சிம்மவக்ரா, கஜஸ்யா, சூரபத்மன் ஆகியோர் முனிவர்கள், தேவர்கள் மற்றும் மனிதகுலத்துக்கு இடையூறு அளித்த வண்ணம் இருந்தனர். தேவர்களும், மக்களும் பிரம்மதேவரிடம் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கும்படி வேண்டினர்.

பிரம்மதேவரும் இதுதொடர்பாக மகாவிஷ்ணுவிடமும், சிவபெருமானிடமும் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகக் கூறுகிறார். மேலும், சிவபெருமானின் மகனாக அவதரிக்கும் சண்முகன் அரக்கர்களை மாய்த்துவிடுவார் என்று தேவர்களிடமும், மக்களிடமும் உறுதியளிக்கிறார். பிரம்மதேவர் வாக்கின்படி, சிவபெருமான் - பார்வதி தேவி திருமணம் நடைபெறுகிறது. பின்னர் சண்முகர் அவதாரம் எடுத்து அசுரர்களை மாய்க்கிறார்.

இச்சம்பவம் நடைபெற்று பல காலம் கழித்து சிவபெருமானை தரிசிப்பதற்காக பிரம்மதேவர் கைலாய மலைக்கு வருகிறார். அப்போது முருகப் பெருமான் அவரிடம் பிரணவ மந்திரத்தின் (ஓம்காரம்) பொருளை விளக்கும்படி கூறுகிறார். பிரம்மதேவர் சரியான விளக்கம் அளிக்கத் தவறியதால், கோபமுற்ற முருகப்பெருமான், அவரை சிறையில் அடைக்கிறார். தனக்கு உதவுமாறு பிரம்மதேவர், சிவபெருமானை வேண்டுகிறார். முருகப்பெருமானின் உதவியுடன், சிவபெருமான் பிரம்மதேவரை சிறையில் இருந்து விடுவிக்கிறார்.

இதுதொடர்பான குற்ற உணர்வில் இருந்த முருகப் பெருமான், கட்ட சர்ப்ப (நாகர் - பாம்பு) வடிவில் பூலோகம் வருகிறார். பாம்பு வடிவத்தில் இருந்ததால், தனக்கு கருடனால் ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த முருகப்பெருமான், தன்னைக் காக்கும்படி திருமாலை வேண்டுகிறார். திருமாலும் லட்சுமியுடன் கூடிய நரசிம்ம மூர்த்தியாக வடிவம் கொண்டு சுப்பிரமணியரைக் காக்கிறார்.

அச்சமயத்தில் கதிகேசுரன் என்ற அசுரன், முருகப் பெருமான் வந்திறங்கிய இடத்தில் வாழ்ந்து வந்தான். அவ்விடத்தில் தவம் மேற்கொண்ட முனிவர்களுக்கும், வாழ்ந்து வந்த மக்களுக்கும் கதிகேசுரன் இன்னல்கள் விளைவித்து வந்ததால் அவர்களைக் காப்பதற்கு முருகப்பெருமான் திருவுள்ளம் கொண்டார். கதிகேசுரனுடன் போரிட்டு அவனை வீழ்த்தினார். அதனால் இத்தலம் ‘கட்டி சுப்பிரமணியம்’ என்று அழைக்கப்பட்டது. மேலும், சுப்பிரமணிய சுவாமியின் சுயம்பு விக்கிரகம் இங்கு காணப்பட்டதால், இத்தலம் ‘சுப்ரமண்ய சேத்ரம்’ என்று அழைக்கப்படுகிறது.

கதிகேசுரன் என்ற அரக்கனை வீழ்த்துவதற்காக இப்பகுதிக்கு எழுந்தருளிய முருகப்பெருமான் ஏழு முகமுள்ள பாம்பின் வடிவமாக இத்தலத்தில் அமர்ந்து தவம் செய்வதாக ஐதீகம். அதே கோலத்தில் இங்கு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும், மகாவிஷ்ணுவின் வாகனமான கருடனிடம் இருந்து, நாகர்கள் (பாம்புகள்) குடும்பத்தைக் காப்பாற்றும்படி முருகப் பெருமான், நரசிம்ம மூர்த்தியிடம் வேண்டினார். கதிகேசுரனை வீழ்த்திய இடம் என்பதால் இத்தலம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. நாகர் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் பெற்ற கோயிலாக இக்கோயில் விளங்குகிறது.

சந்தூர் வம்சத்தைச் சேர்ந்த கோர்படே மன்னரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், சுப்பிரமணிய சுவாமி விக்கிரகம் இருக்கும் இடத்தை அவருக்கு வெளிப்படுத்தினார். உள்ளூர்வாசிகளின் உதவியுடன், சுப்பிரமணிய சுவாமியின் விக்கிரகத்தை கண்டுபிடித்து, அதே இடத்தில் மன்னர் கோயில் எழுப்பினார்.

ஏழு தலை நாகரைக் கொண்ட சுப்பிரமணிய சுவாமியின் விக்கிரகம் ஒரே கல்லால் ஆனது. சுப்பிரமணிய சுவாமியின் விக்கிரகம் கிழக்கு நோக்கியும், நரசிம்ம சுவாமியின் விக்கிரகம் மேற்கு நோக்கியும் உள்ளன. இருவரையும் ஒரே சமயத்தில் தரிசிப்பதற்காக, கருவறையின் பின்புறத்தில் ஒரு பெரிய கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு சேவைகள்

கட்டி சுப்பிரமணிய சுவாமிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், ஏக வார ருத்ராபிஷேகம், ஏகாதச வார ருத்ராபிஷேகம், பால் அபிஷேகம் (க்ஷீராபிஷேகம்), பிரகாரோத்சவம், குங்கும அர்ச்சனை, சஹஸ்ரநாம அர்ச்சனை, சிக்கரோத்சவம், பூச்சரபிஷேகம், அபிஷேகதா சாஸ்வத சேவை, அன்னதான சாஸ்வத சேவை, பேலே (டால்), இரு / நான்கு சக்கர வாகன பூஜை, துலாபார சேவை, சர்வ சேவை (சுகானாசி சேவைக்கு பதிலாக), முதல் நாள் அன்னபிரசாதம், நவக்கிரக சாந்தி (ஆஷ்லே சாந்தி), சர்ப்ப சம்ஸ்காரா, கல்யாண உற்சவம், மாஸ் ஆஷ்லேஷா பலி (சாமூஹிகா), மாஸ் சர்ப்ப சம்ஸ்காரா (சாமூஹிகா), அக்கி (அரிசி) சேவை, பெல்லா (வெல்லம்) சேவை ஆகிய சேவைகள் நடைபெறுகின்றன.

பக்தர்கள் அவர்களது வேண்டுதல்களுக்கு ஏற்ப இச்சேவைகளில் ஏதாவது ஒன்றை செய்து வழிபாடு செய்கின்றனர். பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் இத்தலத்துக்கு வந்திருந்து துலாபாரம், அக்‌ஷர அப்யாசம், அன்னப்ராசனம், நாமகரணம், காது குத்துதல் உள்ளிட்டவற்றைச் செய்கின்றனர்.

கட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். காலை 8.30 மணிக்கு நடைபெறும் அபிஷேகத்திலும், காலை 10.30 மணி மற்றும் இரவு 8.30 மணிக்கு நடைபெறும் மகா மங்கள ஆரத்தியிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வர். சுற்றுலா பயணிகள், பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் தினமும் இங்கு மதியத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

திருவிழாக்கள்

புஷ்ய மாத பிரம்மோற்சவம் (டிசம்பர் 24 முதல் ஜனவரி 21 வரை), நரசிம்ம ஜெயந்தி உற்சவம் ஆகியன இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பிரம்மோற்சவ சமயத்தில் சஷ்டி தினத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதுசமயம் எண்ணற்ற பக்தர்கள் வந்திருந்து, நேர்த்திக் கடன் செலுத்தி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டி பக்தர்கள் நாகர் சிலைகளை நிறுவுவது ஒரு சம்பிரதாயமாகக் கொள்ளப்படுகிறது.

குஜ (செவ்வாய்) தோஷம், கால சர்ப்ப தோஷம், ராகு - கேது தோஷம் உள்ளவர்கள் இத்தலத்துக்கு வந்திருந்து சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர். பெரும்பாலான நாட்களில் சர்ப்ப தோஷ பூஜை அல்லது சர்ப்ப சம்ஸ்காரம் செய்யப்படுகிறது. செவ்வாய்க்கிழமை, சஷ்டி, ஆஷ்லேஷ நட்சத்திர தினங்கள் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுவதால், அன்றைய தினம் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. கட்டி சுப்பிரணிய ஜாத்ரே (ரதோத்சவம்) டிசம்பர், ஜனவரி மாதங்களில் (புஷ்ய மாதம் - சுத்த சஷ்டி நாட்கள்) நடைபெறுகிறது.

நாக பஞ்சமி (ஷ்ரவண மாதம் - ஜூலை / ஆகஸ்ட்), தெப்போற்சவம் (கிரு சஷ்டி - மாக மாச சுத்த பஞ்சமி - ஜனவரி / பிப்ரவரி), சம்ப சஷ்டி (மார்கசிர மாச சுத்த சாஸ்திரி (நவம்பர் / டிசம்பர்), குமார சஷ்டி (ஸ்கந்த சஷ்டி - மாக மாச ஷ்ரத்தா ஸ்ருஷ்டி - ஜனவரி / பிப்ரவரி) தினங்களில் இங்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

டிசம்பர் மாதத்தில் நடைபெறும் கால்நடை கண்காட்சியில், தமிழகம், ஆந்திரம் கேரளம், மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் கால்நடைகளுடன் வந்து பங்கேற்பது வழக்கம். இக்கண்காட்சியைக் காண எண்ணற்ற மக்கள் வருகின்றனர். சுற்றுலா பயணிகளும் அந்த சமயத்தில் வந்திருந்து, அது தொடர்பான ஆவணப் பட தயாரிப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

அமைவிடம்: தொட்டபல்லாப்பூரில் இருந்து 15 கி.மீ தொலைவிலும், பெங்களூரு கெம்பேகவுடா பேருந்து நிலையத்தில் இருந்து 55 கி.மீ தொலைவில் உள்ளது கட்டி சுப்பிரமணியா கோயில். பெங்களூருவில் இருந்து தொட்டபல்லாப்பூர் நோக்கி கர்நாடக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தொட்டபல்லாப்பூரில் இருந்து கோயிலுக்குச் செல்ல ஆட்டோ அல்லது டாக்ஸிகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in