காக்கும் கார்த்திகைச் செல்வன் - 48 

கந்தனின் பெருமைகள் - 1.இலக்கியங்கள் போற்றும் முருகன் 
காக்கும் கார்த்திகைச் செல்வன் - 48 

கைலாய மலையில் சிவபெருமானும் பார்வதி தேவியும் வீற்றிருக்க, சூரபத்மனால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் குறித்து தேவர்கள் அவர்களிடம் முறையிடுகின்றனர். அந்த சிக்கலை தீர்க்க சிவபெருமான் ஆறுமுகப் பெருமானை தோற்றுவிக்கிறார்.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தீப்பொறிகள் வெளிப்பட்டபோது, வெப்பம் தாங்காமல் பார்வதி தேவி அங்கிருந்து வெளியேறினார். பார்வதி தேவியின் பாதச் சிலம்பில் இருந்து நவ சக்திகள் தோன்றினர். அவர்கள் மாணிக்க வல்லி, தாள வல்லி, புஷ்பராக வல்லி, கோமேதக வல்லி, வைடூரிய வல்லி, வச்சிர வல்லி, மரகத வல்லி, பவள வல்லி, நீல வல்லி ஆவர். சிவபெருமானின் அருள்பார்வையால் ஒன்பது வீரர்கள் தோன்றினர்.  

மாணிக்க வல்லியிடம் இருந்து வீரபாகுத்தேவர், தாள வல்லியிடம் இருந்து வீரகேசரி, புஷ்பராக வல்லியிடம் இருந்து வீரமகேந்திரர், கோமேதக வல்லியிடம் இருந்து வீரமகேசர், வைடூரிய வல்லியிடம் இருந்து வீரபுரந்தரர், வச்சிரவல்லியிடம் இருந்து வீரராக்கதர், மரகத வல்லியிடம் இருந்து வீரமார்த்தாண்டர், பவள வல்லியிடம் இருந்து வீராந்தகர், நீல வல்லியிடம் இருந்து வீரதீரர்  தோன்றினர். 

நவசக்திகளின் வியர்வையில் இருந்து லட்சம் வீரர்கள் தோன்றினர். சிவபெருமானின் ஆணைப்படி நவ வீரர்கள் முருகப் பெருமானுக்கு தம்பியாகவும், லட்சம் வீரர்கள் அவருக்கு பரிவாரங்களாகவும் விளங்கினர். கயிலை மலையிலேயே தேவதச்சன் மயன் மூலம் மணி மண்டபம் கட்டப்பட்டு, அதில் செவ்வேலை எழுந்தருளச் செய்தனர். தேவசேனாதிபதியாக முருகப் பெருமானுக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. அந்தக் குன்று ‘கந்தகிரி’ என்று பெயர் பெற்றது.  

ஆட்டுக்கிடாவை தனது வாகனமாக்கிக் கொண்டது, பிரம்மதேவரை சிறையிட்டது, சிவபெருமானுக்கு உபதேசம் செய்தல் என்று பல திருவிளையாடல்களை முருகப்பெருமான் புரிந்தார்.   

தந்தையின் ஆணைக்கிணங்க சூரனை அழிக்கப் புறப்பட்டார் முருகப்பெருமான். பதினோரு ருத்திரர்களையும், பதினோரு படைக் கலங்களையும் மகனுக்கு அளித்தார் சிவபெருமான். விந்தகிரிச்சாரலில் மாயமாபுரம் என்ற நகரை அமைத்து, நிருதியின் மகள் கவுரியை மணந்து கொண்டு, மகன் அசுரேந்திரனுடன் வாழ்ந்து வந்த தாரகாசுரனை (சூரனின் தம்பி) அழிக்கச் சென்றார் வீரபாகுத்தேவர்.  பல மாயங்கள் புரிந்த தாரகாசுரன், வீரபாகுத்தேவருடன் வந்த படையை கிரவுஞ்ச மலையில் மயங்கச் செய்தான். உடனே ஆறுமுகப் பெருமான் போரில் இறங்கி, வேலை எடுத்து கிரவுஞ்ச மலையைப் பிளந்து வீரபாகுதேவர் உள்ளிட்டோரை உயிர்பெற்று எழச் செய்தார்.   

அங்கிருந்து தென் திசை பயணம் மேற்கொண்ட முருகப்பெருமான், திருச்செந்தூரில் கோயில் கொண்டார். சூரன் முதலான அசுரர்களின் வரலாறைக் கேட்க விரும்பிய முருகப் பெருமான், இதுதொடர்பாக வியாழ பகவானை வினவினார். அவரும் அசுரர்களின் வரலாறைக் கூறலானார்.  

சூரன் வரலாறு  

அசுரர்களின் அரசன் அசுரேந்திரன். அசுரர்கள் 66 கோடி பேர் உள்ளனர். இவர்களின் தந்தை காசிப முனிவர். அசுரேந்திரன் - மங்கல கேசி தம்பதிக்கு சுரசை (மாயை) என்ற மகள் உண்டு. அசுர குரு சுக்கிராசாரியாரிடம் பல கலைகள் கற்றாள் சுரசை. அசுரர்கள் 66 கோடி பேரும் தீய செயல்களையே செய்ததால், பிரம்மதேவர் மற்றும் திருமாலின் சீற்றத்துக்கு ஆளாகி, அழிந்தனர். அசுரகுலம் ஒழிந்ததால், வருத்தம் கொண்ட அசுரேந்திரன், சுரசையிடம் இதுதொடர்பாக ஆலோசனை செய்தான். அதன்படி காசிப முனிவரை தன் வலையில் சிக்க வைத்தாள் சுரசை.  

சூரபதுமன், சிங்கமுகன், தாரகன், அஜமுகி ஆகிய நால்வரையும், இருநூறாயிரம் வெள்ளம் அசுரர்களையும் பெற்றாள் சுரசை. தனது தவறு குறித்து காசிப முனிவர் வருந்தினார். காசிப முனிவரின் அறிவுறுத்தலின்படி, சிவபெருமானை நோக்கி சூரபதுமன் தவம் செய்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு 1,008 அண்டங்களையும், 103 யுகங்கள் ஆட்சி புரிய வரம் அளித்தார். வச்சிரம் போன்ற உடல், ஒரு நொடியில் உலகம் எங்கும் சென்று வரத்தக்க தேர்,  சிங்க வாகனம், பத்தாயிரம் கோடி சேனை ஆகியவற்றையும் வழங்கிய சிவபெருமான், தன் சக்தியை அன்றி வேறு யாராலும் சூரபதுமனை வெல்ல இயலாது என்றும் வரம் அருள்கிறார்.   

வீரகேந்திரபுரி என்ற நகரை தனக்காக தென் கடலில் அமைத்துக் கொண்டான் சூரபதுமன். தேவ தச்சனின் மகள் பதும கோமளையை மணந்தான். இத்தம்பதிக்கு பானுகோபன், அக்னி முகாசுரன், இரணியன், வச்சிரவாகு ஆகிய மகன்கள் உண்டு. மற்ற மனைவியர் மூலமும் 100 பிள்ளைகளைப் பெற்றான் சூரபதுமன்.  

வடகடலில் ’ஆசுர நகரம்’ என்ற நகரம் அமைத்து ஆட்சி புரிந்தான் சிங்கமுகாசுரன். யமனின் மகளை மணந்த சிங்கமுகாசுரனுக்கு ஆதிசூரன் என்ற மகன் உண்டு. மற்ற மனைவிகள் மூலம் அவனும் நூறு பிள்ளைகளைப் பெற்றான். 

அஜமுகி, துர்வாச முனிவரை துராக்ருதம் செய்து வாதாபி, வில்லவன் ஆகியோரைப் பெற்றாள். அகத்திய முனிவரை துன்புறுத்தியதால், இருவரும் மாண்டனர்.  

தேவர்களுக்கு துன்பம் விளைவித்த சூரபதுமன், அவர்களை தனக்கு வேலை செய்ய நியமித்தான். இந்திராணிக்கு துன்பம் விளைவித்த அஜமுகியின் கைகள், காவலர் மகாகாளரால் வெட்டப்பட்டது. இதைக் கண்டு சினம் கொண்ட சூரபத்மன், அமராவதி நகரை தீக்கிரையாக்கினான். இந்திரன் மகனான ஜெயந்தன் மற்றும் தேவர்களை சிறைவைத்து பல கொடுமைகள் இழைத்தான்.  

இவ்வாறு வியாழ பகவான் கூறி முடித்ததும், சூரபதுமனுடனான போருக்குத் தயாரானார் முருகப்பெருமான். வீரபாகுத் தேவரை தூது அனுப்பினார். ஆனால், எதற்கும் செவிசாய்க்காத சூரபதுமன், வீரபாகுத்தேவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டான்.

தன்னை எதிர்த்தவர் அனைவரையும் வீழ்த்திவிட்டு, செந்தில் மாநகர் திரும்பி, நடந்தவற்றை முருகப்பெருமானிடம் தெரிவித்தார் வீரபாகுத்தேவர். இதைத் தொடர்ந்து இலங்கையின் ஒரு பகுதியான ஏமகூட மலையில் முகாமிட்டார் முருகப் பெருமான். இந்த இடமே கதிர்காமம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு முருகப்பெருமானுக்கும் சூரபதுமனுக்கும் பத்து நாட்கள் போர் நடைபெற்றது. சூரபத்மன் பற்பல மாயங்கள் புரிந்து, நிறைவாக கடலில் ஒளிந்து கொண்டான். முருகப்பெருமான் வேலாயுதத்தை ஏவினார். கடல் வற்றியது. லட்சம் யோசனை பருமன் உள்ள மாமரமாக நின்றான் சூரபதுமன். வேலாயுதம், மாமரத்தைப் பிளந்து இரு கூறாக்கி, மீண்டும் முருகப் பெருமானை வந்தடைந்தது.  

இரு கூறில்  மாமரத்தில் ஒன்று சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறின. கந்தப்பெருமான் கருணையுடன் நோக்கி, மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஏற்றுக் கொண்டார். அசுரர் குலம் அழிந்தது. பின்னர் தேவேந்திரன் மகளான தெய்வயானையைக் கரம் பிடித்தார் முருகப்பெருமான். பின்னர் வள்ளி மலை சென்று வேடுவர் தலைவராகிய நம்பிராஜன் மகளான வள்ளியை மணந்தார்.

வள்ளியுடன் திருத்தணிகைக்கு எழுந்தருளிய முருகப்பெருமான், சில தினங்கள் கழித்து, கந்தகிரிக்குச் சென்றார். தெய்வயானையும், வள்ளியும் முருகப்பெருமானுடன் கலந்து மகிழ்ந்தனர். முருகப்பெருமானின் வலது புறம் வள்ளியும், இடது புறம் தெய்வயானையும் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.  

கந்தன், கடம்பன், சரவணன், மால் மருகன், சண்முகன், கார்த்திகேயன், சுப்பிரமணியன் என்று அழைக்கப்படும் முருகப் பெருமான், சங்க இலக்கியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்களில் போற்றப்படுகிறார். குறிஞ்சி நிலக் கடவுளாக வழிபடப்படும் முருகப்பெருமான் மீது பிள்ளைத் தமிழ் இலக்கியங்களும் உண்டு. அருணகிரிநாதர் தனது திருப்புகழில், முருகப்பெருமானை பலவாறு புகழ்ந்து பாடியுள்ளார். ஆதிசங்கரரும் முருகப்பெருமான் மீது பாடல்கள் புனைந்துள்ளார்.  

சங்க இலக்கியங்கள் போற்றும் சரவணன்  

சிலப்பதிகாரம், திருமந்திரம், பரிபாடல் (நல்லந்துவனார், குன்றம் பூதனார், கேசவனார், நல்லழி சியார், நப்பண்ணனார், நல்லச்சுதனார் பாடல்கள்), கல்லாடம், குறுந்தொகை, திருமுருகாற்றுப்படை ஆகிய இலக்கியங்கள் முருகப் பெருமானைப் போற்றிப் புகழ்கின்றன.  

புராணங்கள் போற்றும் முருகன்  

கந்த புராணம், தணிகை புராணம், தணிகாசலப் புராணம், திருச்செந்தூர் தல புராணம், திருப்பரங்கிரிப் புராணம், பழநி தலபுராணம், கந்த புராணச் சுருக்கம், திருவிரிஞ்சைப் புராணம், சேக்கிழார் புராணம், திருவாதவூரர் புராணம், காஞ்சிப் புராணம், திருக்கூவப் புராணம், திரு ஏரக புராணம், சீகாளத்தி புராணம்,  கோயில் புராணம், திருக்குற்றாலப் புராணம், சீகாழித் தலபுராணம், புள்ளிருக்கும் வேளூர் புராணம், அருணகிரி புராணம், கூர்ம புராணம், விநாயக புராணம், வாட்போகிப் புராணம், சேது புராணம், லிங்க புராணம், அருணாசல புராணம், திருவாடானை புராணம், காசி காண்டம், திருநாகை காரோணப் புராணம், சிதம்பர சபாநாத புராணம் ஆகியன முருகப் பெருமானின் அவதாரம், பெருமைகள், புகழ் குறித்து உரைக்கின்றன.  

சிற்றிலக்கியங்கள் போற்றும் சிங்கார வேலன்  

தணிகை ஆற்றுப்படை, செந்தில் கலம்பகம், தணிகை பதிற்றுப்பத்து அந்தாதி, தணிகாசல அநுபூதி, தணிகைச் சந்நிதி முறை, தணிகை தயாநிதி மாலை, தணிகைத் திருவிருத்தம், போரூர் சந்நிதி முறை, உபதேச காண்டம், முத்துகுமார சுவாமி திருவருட்பா, திருச்செந்தூர் அகவல், சண்முக கவசம், யாப்பருங்கல விருத்தி, பாரதம், தணிகை உலா, இலஞ்சி முருகன் உலா, திரு அருட்பா, கந்தர் சஷ்டி கவசம், கந்தர் கலி வெண்பா, தணிகைத் துதிகள், கந்தர் சரணப் பத்து, சத்ரு சம்ஹார வேல் பதிகம், சுப்பிரமணியர் விருத்தம், அகத்திய பஞ்சகம், செந்தில் வேலவன் தோத்திரம், பழநி வேலவன் தோத்திரம், திருவிசையப்பா, பெருவேண்டுகோள், திருத்தணிகைச் செவ்வேள் பதிகம், திருப்பள்ளி எழுச்சி, குமாரஸ்தவம், ஸ்ரீ சுப்பிரமணிய த்ரிசத அர்ச்சனை ஆகியன முருகப் பெருமானின் பெருமைகளை எடுத்தியம்புகின்றன.   

முருகனுக்கு பிள்ளைத் தமிழ்  

பிள்ளைத் தமிழ் என்பது தமிழ் மொழியில் உள்ள 96 வகை பிரபந்தங்களில் ஒன்று. காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில் சிதைத்தல், சிறு பறைமுழக்கல், சிறுதேர் உருட்டல் ஆகிய பருவங்களை முன்னிலைப்படுத்தி பாட்டுடைத் தலைவனை குழந்தையாகக் கொண்டு பாடப் பெறுவதாகும்.   

திருமலை முருகன் பிள்ளைத் தமிழ், தணிகைப் பிள்ளைத் தமிழ், மயிலம் முருகன் பிள்ளைத் தமிழ், பழநி பிள்ளைத் தமிழ், சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ், போரூர் முருகன் பிள்ளைத் தமிழ், திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ்,  திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ், க்ஷேத்ரக் கோவை பிள்ளைத் தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் ஆகியன முருகனைப் போற்றும் பிள்ளைத்தமிழ் இலக்கியங்களாகும்.  

அருணகிரிநாதரின் பாடல்கள்  

திருப்புகழ் பாடல்கள், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, கந்தர் அந்தாதி, திருவகுப்பு சீர்பாத வகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு, வேல் வகுப்பு, திருவேளைக்காரன் வகுப்பு, பெருத்த வசன வகுப்பு, திருஞான வேழ வகுப்பு, வேல் வாங்கு வகுப்பு, கொலு வகுப்பு, திரு எழு கூற்று இருக்கை, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம் ஆகியவை முருகனின் புகழ் உரைக்கும் படைப்புகளாக அமைந்துள்ளன.  

ஆதிசங்கரரின்  சுப்பிரமணிய புஜங்கம் முருகப்பெருமானின் பெருமைகளையும் தேனூர் வரகவி சொக்கலிங்க சுவாமிகளின் சேய்த் தொண்டர் புராணம், கந்தனின் திருவருள் பெற்ற அடியார்கள் 66 பேர் மற்றும் தொகையடியார்கள் 12 பேர் குறித்து உரைக்கின்றன. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in