யாமிருக்க பயமேன் என்பதையே அருள்வாக்காகக் கூறி முருகப் பெருமான் அருள்பாலிக்கிறார். எளியோரைக் காக்கும் இறைவனாக விளங்குகிறார். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமே என்பதற்கு ஏற்ப, முருகப் பெருமான் குன்றுகள் தோறும் கோயில் கொண்டுள்ளார்.
தமிழ்க் கடவுள் என்று போற்றப்படும் கந்தன், ஐந்திணை வழிபாடுகளில் சேயோனாக உள்ளார். தொல்காப்பியர், தமிழர்களின் தொன்மையான வழிபாடுகள் குறித்து கூறும்போது முருகப்பெருமான் குறித்து குறிப்பிடுகிறார். குறிஞ்சி நிலத் தலைவராக சேயோன் போற்றப்படுகிறார். முல்லை நிலத் தலைவராக, மாயோன் (திருமால்), மருத நிலத் தலைவராக இந்திரன், பாலை நிலத் தலைவராக கொற்றவை, நெய்தல் நிலத் தலைவராக வருண பகவான் ஆகியோர் இருந்தாலும், முருகப் பெருமானை வழிபடுபவர்கள் அதிக அளவில் உள்ளனர். இதனாலேயே கந்தன் தமிழ்க் கடவுள் என்று அழைக்கப்படுகிறார்.
அழகு தெய்வமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் முருகப் பெருமான், கந்தன், கடம்பன், முத்துக்குமரன், சுப்பிரமணியன், தண்டாயுதபாணி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். முருகப்பெருமானை வழிபடும் இந்து சமயப் பிரிவு ‘கௌமாரம்’ என்று அழைக்கப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ருத்ரபிரயாக், இலங்கை, மலேசியா உள்ளிட்ட இடங்களிலும் முருக வழிபாடு நடைபெறுகிறது.
முருகனை வழிபட்டால் நினைத்த செயல்கள் வெற்றியுடன் முடியும் என்பது ஐதீகம். பக்தர்கள் கார்த்திகைச் செல்வனை பல கோலங்களில் சிலை வடித்து போற்றி வணங்குகின்றனர். வேலவனை பல வடிவங்களில் தரிசனம் செய்தாலும், முதன்மையானதாக 16 திருக்கோலங்களில் அவர் பக்தர்களுக்கு காட்சி அருள்கிறார். ஞானசக்திதரர், கந்தசுவாமி, ஆறுமுக தேவசேனாபதி, சுப்பிரமணியர், கஜவாகனர், சரவணபவர், கார்த்திகேயர், குமாரசுவாமி, சண்முகர், தாரகாரி, சேனானி, பிரம்மசாஸ்தா, வள்ளி கல்யாண சுந்தரர், பாலசுவாமி, கிரவுஞ்சபேதனர், சிகிவாகனர் ஆகிய கோலங்களில் முருகப் பெருமான் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
முருகனின் பெருமைகளை உரைக்கும் ‘ஸ்ரீ தத்துவநிதி’ என்ற நூலிலும், ‘குமார தந்திரம்’ என்ற நூலை அடிப்படையாகக் கொண்ட ‘திருத்தணிகை புராணம்’ என்ற நூலிலும் முருகப் பெருமானின் 16 திருக்கோலங்கள் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன.
ஞானசக்திதரர்
ஐந்தாம் படைவீடான திருத்தணிகையில் ‘ஞானசக்திதரர்’ வடிவத்தில் எழுந்தருளியுள்ள கந்தனைத் தரிசித்தால், நினைத்த செயல்களில் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம். ஒரு முகம், இரண்டு திருக்கரங்கள் கொண்டவராக ஞானசக்திதரர் அருள்பாலிக்கிறார். வலது கையில் சக்தி வேல் உள்ளது. பகைவரை அழிக்கும் தன்மை படைத்ததாக உள்ள இடது கையை தொடை மீது வைத்துள்ளார். சக்தி வேல் மூன்று இலைகள் கொண்டதாக அமைந்துள்ளது. இவை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய முப்பெரும் சக்திகளைக் கொண்டதாக உள்ளன.
கந்தசுவாமி
பழநி மலை மீது இருந்து அருளும் பால தண்டாயுதபாணி சுவாமியின் திருவடிவம் ‘கந்தசுவாமி’ வடிவமாகப் போற்றப்படுகிறது. கந்தசுவாமியை வழிபட்டால் அனைத்து காரியங்களும் சித்தியாகும் என்பது ஐதீகம். ஒரு முகம், இரண்டு கைகளைக் கொண்டவராக கந்தசுவாமி அருள்பாலிக்கிறார். இடது கரத்தை இடுப்பில் ஊன்றியுள்ளார். கையில் தண்டாயுதம் கொண்டும், இடையில் கோவணம் தரித்தும் காட்சி அருள்கிறார். முருகனிடம், பல கடவுளர்களின் வலிமை ஒன்று சேர்ந்திருப்பதாலும், அவர் தண்டாயுதம் ஏந்தியிருப்பதாலும் கந்தன் என்று அழைக்கப்படுகிறார். கந்த புராணம், கந்தர் அனுபூதி, கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்த சஷ்டி கவசம் ஆகியன கந்தப் பெருமானின் புகழ் உரைக்கின்றன.
ஆறுமுக தேவசேனாபதி
சென்னிமலை முருகப் பெருமான் கோயிலின் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் ‘ஆறுமுக தேவசேனாபதி’ கோலத்தை தரிசிக்க முடியும். இவரை வழிபட்டால் மங்கலகரமான வாழ்வு அமையும் என்பது ஐதீகம். ஆறு முகமும், பன்னிரு கரங்களும் கொண்ட வடிவத்துடன், இடது மடியில் தெய்வயானையை அமர்த்திக் கொண்டு கந்தன் அருள்பாலிக்கிறார். திருத்தணிகை புராணம் இவரது கோலத்தை விவரித்து உரைக்கிறது.
சுப்பிரமணியர்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவிடைக்கழியில் அருள்பாலிக்கும் முருகன் ’சுப்பிரமணியர்’ கோலம் கொண்டவராக உள்ளார். பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தத்தை அளிப்பவாக இருக்கிறார். ஒரு முகமும், இரண்டு கரங்களும் உடையவர். ஒரு கை இடுப்பின் மீது ஊன்றியபடி உள்ளது. மற்றொரு கரம் அபயஹஸ்தமாக பக்தர்களுக்கு அருள் வழங்குகிறது. இந்த வடிவத்தை ஆகமங்களும், சிற்ப சாஸ்திரங்களும் விவரிக்கின்றன.
கஜவாகனர்
திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் ஆகிய தலங்களில் கஜவாகனராக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். கீழைக் கோபுரத்தில் யானை மீது அமர்ந்திருக்கும் முருகப் பெருமானை தரிசித்தால் துன்பங்கள் விலகி ஓடும் என்பது ஐதீகம். ‘களிறு ஊர்திப் பெருமான்’ என்று அழைக்கப்படும் இவர் ஒரு முகம், நான்கு கரங்களை உடையவர். இடது கரங்களில் ஒன்றில் சேவல் உள்ளது. மற்றொரு கரம் வரத முத்திரை காட்டும். மற்ற இரண்டு கரங்களில் வேலும் வாளும் ஏந்தியிருப்பார்.
சரவணபவர்
சென்னிமலை, திருப்போரூர் கந்தசுவாமி கோயில்களில் ‘சரவணபவர்’ கோலத்தைக் காணலாம். சரவணபவரை பக்தர்கள் வழிபட்டால் கொடை, சாத்வீகம், வீரம் ஆகிய குணங்கள், கல்வியில் சிறப்பு, புகழ் ஆகியன கிட்டும் என்பது ஐதீகம். சரவணப் பொய்கையில் அவதரித்ததால் முருகனுக்கு இப்பெயர் கிட்டியது. ஆறு முகங்கள், பன்னிரு கரங்கள் கொண்டவராக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். குமார தந்திரம் என்ற நூல், இவர் மஞ்சள் நிறத்தவர் என்று தெரிவிக்கிறது. ஸ்ரீ தத்துவ நீதி என்ற நூல் இவர் மூன்று முகமும், ஆறு கரங்களும் கொண்டவர் என்றும், புஷ்ப அம்பு, கரும்பு வில், கட்கம், கேடயம், வஜ்ரம், முக்கூடம் ஆகியன ஏந்தி சிம்ம வாகனத்தில் எழுந்தருளியுள்ளார் என்றும் தெரிவிக்கிறது.
கார்த்திகேயர்
குடந்தை கும்பேஸ்வரர் கோயில் மற்றும் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் ‘கார்த்திகேயர்’ கோலத்தில் முருகப் பெருமான் அருள்பாலிக்கிறார். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபட்டால் அனைத்து செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம். இவர், 6 முகங்களும், 6 தோள்களும் கொண்டவர் என்று குமார தந்திரம் என்ற நூல் தெரிவிக்கிறது. ஸ்ரீ தத்துவ நீதி என்ற நூல், இவர் ஒரு முகம், 3 கண்கள், 10 கரங்கள் கொண்டு மயில் வாகனத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் என்று தெரிவிக்கிறது.
குமாரசுவாமி
கங்கை கொண்ட சோழபுரம் சிவன் கோயில் மற்றும் நாகர்கோவில் அருகே உள்ள குமாரமங்கலம் கோயிலில் உள்ள முருகப் பெருமான் ‘குமாரசுவாமி’ கோலத்தில் அருள்பாலிக்கிறார். ஒரு முகம், நான்கு கரங்களுடன் அருள்பாலிக்கும் குமாரசுவாமியை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும் என்பது ஐதீகம். குமாரசுவாமியின் வலது கரங்களில் சக்தி ஆயுதம், கத்தி, இடது கரங்களில் குடம், கேடயம் உள்ளன.
சண்முகர்
திருச்செந்தூரில் உள்ள சண்முகர் கோலத்தில் அருள்பாலிக்கும் முருகனை வழிபட்டால் சிவன் - சக்தியை வழிபட்ட பலன் கிட்டும் என்பது ஐதீகம். ஆறு முகங்கள், பன்னிரு கரங்களுடன் மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானை ஆறுமுகன் என்று அழைப்பதுண்டு. வலது கரங்களில் வேல், அம்பு, வாள், திகிரி, பாசம், அபயம் ஆகியவையும், இடது கரங்களில் குலிசம், வில், கேடயம், சேவல், அங்குசம், வரதம் ஆகியவையும் உள்ளன.
தாரகாரி
தாரகாசுரன் என்ற அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் தாரகாரி என்று அழைக்கப்படுகிறார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழி செய்யும் தாரகாரி கோலம் (தார காந்த முக்தி) விராலிமலை முருகன் கோயிலில் காணப்படுகிறது. இவருக்கு 12 கரங்கள் உண்டு. இடது கரங்களில் வரத ஹஸ்தமும், அங்குசம், வல்லி, கடகம், வில், வச்சிரம் ஆகிய ஆயுதங்களும் உள்ளன. வலது கரத்தில் ஒன்று அபய ஹஸ்தமாக உள்ளது. மற்ற கரங்களில் பாசம், சக்கரம், கட்கம், உலக்கை, சக்தி ஆகிய ஆயுதங்கள் உள்ளன.
சேனானி
வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள தேவிகாபுரம் கோயிலில் உள்ள சேனானி (தேவசேனாபதி) கோலத்தை வழிபட்டால் பகை அழியும், வெற்றி கிடைக்கும், பொறாமை நீங்கும் என்பது ஐதீகம். துன்பங்களில் இருந்து தேவர்களைக் காத்ததால் தேவசேனாபதி என்று முருகப் பெருமான் அழைக்கப்படுகிறார். இவருக்கு 12 கரங்கள் உள்ளன. வலது கரங்களில் அபய ஹஸ்தமும், முசலம், வாள், சூலம், வேல், அங்குசம் ஆகிய ஆயுதங்களும், இடது கரங்களில் வரத ஹஸ்தமும், குலிசம், வில், தாமரை, தண்டம், குக்குடம் ஆகிய ஆயுதங்களும் உள்ளன.
பிரம்மசாஸ்தா
காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம், செங்கை - ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் முருகப் பெருமான் பிரம்மசாஸ்தா கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் அனைத்து செயல்களும் வெற்றி கிட்டும், கல்வியில் தேர்ச்சி பெறலாம் என்பது ஐதீகம். பிரம்மதேவரை சிறையில் அடைத்து, படைப்புத் தொழிலை தானே மேற்கொண்டதால் முருகப் பெருமானுக்கு இப்பெயர் கிட்டியது. தனது 4 கரங்களில் வரதம், கமண்டலம், அட்சய மாலை, அபயம் ஆகியவற்றை தாங்கி, வள்ளியோடு சேர்ந்து அருள்பாலிக்கும் இவருக்கு அருகில் பிரம்மதேவர் உள்ளார்.
வள்ளி கல்யாண சுந்தரர்
திருப்போரூர் கோயில் தூணில் வள்ளி மணாளர் (வள்ளி கல்யாண சுந்தரர்) கோலம் காணப்படுகிறது. இவரை வணங்கினால் திருமணத் தடைகள் விரைவில் விலகும் என்று குமார தந்திரம் கூறுகிறது. 4 கரங்களுடன் வள்ளியுடன் அருள்பாலிக்கும் இவருக்கு அருகில் பிரம்மதேவர் திருமண சடங்குகளை நடத்திக் கொண்டிருப்பார். திருமால் தன் கையில் தீர்த்தச் சொம்பு ஏந்தி தாரை வார்த்துத் தர தயாராக இருப்பார். சிவபெருமான் - பார்வதி தேவி ஆகியோர் ஆசி வழங்க, தேவர்கள் தெய்வீக திருமணத்தை தரிசிக்கின்றனர். முருகப் பெருமான் சிவந்த நிறத்திலும், வள்ளி கரிய நிறத்திலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பால சுவாமி
திருச்செந்தூர், திருக்கண்டியூர், ஆண்டார்குப்பம் கோயில்களில் உள்ள பாலசுவாமி கோலத்தை தரிசித்தால் அங்கக் குறைபாடுகள் நீங்கும், நீண்ட நாளாக உள்ள நோய்கள் விலகும் என்பது ஐதீகம். அழகு, இனிமை, இளமை பொருந்தி பால் வடியும் முகத்துடனும், இரு கரங்களுடனும் அருள்பாலிக்கும் முருகப் பெருமான், பாலமுருகன் என்றும், பாலசுப்பிரமணியன் என்றும் அழைக்கப்படுகிறார். வலது கையில் தாமரை மலர் ஏந்தியும், இடது கையை இடுப்பில் வைத்துக் கொண்டும் காட்சி அருள்கிறார்.
கிரவுஞ்சபேதனர்
திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநனிபள்ளி கோயில்களில் உள்ள கந்தனின் கிரவுஞ்சபேதனர் கோலத்தை வணங்கினால் துன்பங்கள் விலகும், மனச்சஞ்சலம் நீங்கும் என்பது ஐதீகம். சூரசம்ஹாரத்தின்போது கிரவுஞ்சம் என்ற மலையைப் பெயர்த்ததால் முருகன் இப்பெயரைப் பெற்றார். ஆறு முகங்கள், எட்டு கரங்களில் பலவித ஆயுதங்களுடன் காட்சி அருள்கிறார்.
சிகிவாகனர்
பெரும்பாலும் அனைத்து கோயில்களிலும், மயில் வாகனராக அருள்பாலிக்கும் முருகப் பெருமானை வணங்கினால் இன்பமான வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம். மயில்வாகன மூர்த்தி, மயிலேறும் பெருமாள், சிகிவாகனர் என்று அழைக்கப்படும் முருகப் பெருமான் சூரனோடு போரிட்டு அவரை இரு துண்டுகளாக்கினார். ஒரு துண்டு சேவலாகவும், மற்றொரு துண்டு மயிலாகவும் மாறின. சேவலை கொடியாகவும், மயிலை வாகனமாகவும் முருகப்பெருமான் ஏற்றுக் கொண்டார்.
மயிலோடு விளையாடும் கந்தய்யா..
அந்த ஒயிலோடு கோலம் தா வேலய்யா...
பக்தர்களுக்கு ஆனந்த வாழ்வளிக்கும் முருகப் பெருமானை போற்றி வணங்குவோம்.
(நிறைவுற்றது)
(அடுத்த வாரம் ‘சிவனருள் பெற்ற அடியார்கள்’ என்ற புதிய தொடர் ஆரம்பமாகிறது. 63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை படித்து சிவனின் அருள் பெறுவோம்)