காக்கும் கார்த்திகைச் செல்வன் - 49 

கந்தனின் பெருமைகள் - 2.முருகன் அடியார்கள் 
முருகப்பெருமான்
முருகப்பெருமான்

எந்நேரமும் கந்தனை எண்ணி, அவர் மீது பாடல்கள் புனைந்து அவரது அருளைப் பெற்றவர்கள் பலர். முருகப்பெருமானை நினைத்து மனமுருகி தவம் செய்து அவர் அருளைப் பெற்றவர்களும் உண்டு. கார்திகைச் செல்வன் மீது தெரிந்தோ, தெரியாமலோ பக்தி செலுத்தும் அன்பர்களும் உண்டு. பக்தர்களின் தன்மைக்கு ஏற்ப முருகப்பெருமான் அருள்புரிகிறார். அவ்வாறு முருகன் மீது பக்தி கொண்ட அடியார்கள் சிலரின் வாழ்க்கைக் குறிப்பைப் பார்ப்போம். 

அருணகிரிநாதர்  

திருவண்ணாமலையில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய அருணகிரிநாதர், வடமொழியிலும், தென்மொழியிலும் வல்லவர். இசை நுட்பம் மட்டுமல்லாமல் அனைத்து சாஸ்திரங்களையும், இதிகாச புராணங்களையும் அறிந்தவர். நாட்டியக் கலை பயின்றவர். உலக இன்பத்தை வெறுத்து, திருவண்ணாமலை கோயிலின் கோபுரத்தின் மீது ஏறினார். கீழே குதித்து உயிர்விடத் துணிந்தபோது, கந்தப் பெருமான் தடுத்தாட்கொண்டார். அருணகிரியாரைத் தன் கையில் ஏந்தி, கீழே விழாமல் ஏற்றுக் கொண்டார்.  

அருணகிரிநாதர்
அருணகிரிநாதர்

“அருணகிரி நாதா” என்று அவரை அழைத்து அவரது நோய் நீக்கி, திருநீறு அளித்தார் கந்தப் பெருமான். கூடவே அவருக்கு ஜபமாலை கொடுத்து தன் மீது பாடப் பணித்தார். ‘முத்தைத்தரு’ என்று முதல் அடியை எடுத்துக் கொடுத்தார். அன்று முதல் அருணகிரி நாதர் முருகனின் மெய்யடியார் ஆனார். திருப்புகழ் பாடத் தொடங்கினார். முருகன் தலங்கள்தோறும் சென்று தரிசனம் செய்தார். அருணகிரியாரின் புகழ் நாடெங்கும் பரவியது.  

விஜய நகரப் பேரரசின் பிரதிநிதியாக திருவண்ணாமலையில் இருந்த பிரபு தேவராயன் என்ற அரசன், சம்பந்தாண்டான் என்ற சாக்தனை வெற்றி கொண்ட அருணகிரியார் மீது பேரன்பு கொண்டார். அருணகிரியாருக்கும் பிரபு தேவராயனுக்கும் முருகப்பெருமான் காட்சி அருளினார். தேவராயனுக்கு காட்சி அருளிய முருகப் பெருமான், திருவண்ணாமலையில் ‘கம்பத்திளையனார் கோயில்’ என்ற சிறு கோயிலில் வீற்றிருக்கிறார்.  

திருச்செந்தூர் சென்று அருணகிரியார், சுவாமி தரிசனம் செய்யும்போது, வில்லிபுத்தூர் ஆழ்வாருடன் வாதிட நேர்ந்தது. அருணகிரியார் கந்தர் அந்தாதியைப் பாட, ஒவ்வொரு பாட்டுக்கும் வில்லிப்புத்தூர் ஆழ்வார் பொருள் கூறிவந்தார். 54-வது செய்யுளுக்கு பொருள் கூற இயலாமல் தோற்றுப் போனார். வில்லிபுத்தூராரை அரவணைத்துச் சென்ற அருணகிரியார், ‘கருணைக்கு அருணகிரி’ என்று புகழப் பெற்றார்.   

மீண்டும் சம்பந்தாண்டான் அருணகிரியார் மீது பகையை செலுத்தினான். தேவர் உலகில் உள்ள பாரிஜாத மலரைக் கொண்டு வர, அருணகிரியாரை அனுப்புவது குறித்து பிரபு தேவராயனிடம் கூறினான். அரசனின் விருப்பத்துக்கு ஏற்ப, அருணகிரியார், கூடுவிட்டுக் கூடு பாயும் யோக சித்தியால் தன் உடலைவிட்டு கிளியின் உடலில் புகுந்து பறந்து சென்றார். அவரது உடலை சம்பந்தாண்டான் எரிக்கச் செய்ததால், பாரிஜாத மலருடன் திரும்பி வந்த அருணகிரியார், பார்வதியின் கையில் கிளியாகவே அமர்ந்தார்.   

திரிசுதந்திரர்  

திருச்செந்தூர் வாழ் அந்தணர்கள் ‘திரிசுதந்திரர்’ என்ற பெயர் பெற்றனர். இவர்கள் கங்கைக் கரையில் தவம் செய்து சிவபெருமான், திருமால், பிரம்மதேவர் ஆகியோரிடம் வரம் பெற்று, பூலோகம், சொர்க்கலோகம், சத்திய லோகம் ஆகியவற்றில் சுதந்திரமாக வசிக்கும் பேறு பெற்றவர்கள். முக்காணியர் என்று அழைக்கப்படும் இவர்கள் (2,000 பேர்) முருகப் பெருமானுக்கு பூஜைகள் செய்யும் அருள் பெற்றவர்கள். இவர்களை அன்புடன் நினைத்தால், மும்மூர்த்திகளை பூஜித்த பலன் கிடைக்கும் என்று திருச்செந்தூர் புராணம் கூறுகிறது. முருகப் பெருமான் திரிசுதந்திரர்களுடன் வேறுபாடின்றி நின்று அருள்புரியும் காரணத்தால் ‘திரிசுதந்திர அபேத மூர்த்தி’ எனும் பெயர் பெற்றதாக சுப்பிரமணிய பராக்கிரமம் தெரிவிக்கிறது.  

அகத்தியர்  

சிவஞானமோடு செந்தமிழையும் போதித்து அருள வேண்டும் என்று அகத்திய முனிவர் சிவபெருமானை வேண்டினார். தணிகைக்கு சென்று ஞானசக்திதரரை வழிபட்டால் அகத்தியரின் எண்ணம் ஈடேறும் என்று சிவபெருமான் திருவாய் மலர்ந்தார். அதன்படி திருத்தணிகை சென்று முருகப்பெருமானை வழிபட்டு செந்தமிழ் அறிவும் சிவஞானமும் பெற்றார். இதைத் தொடர்ந்து அகத்திய முனிவர், பழநி, குன்றக்குடி உள்ளிட்ட தலங்களுக்கும் சென்று வழிபாடு செய்தார். 

அகத்தியர்
அகத்தியர்

முசுகுந்தர் 

குரங்கு முகமும், குந்தம் என்ற ஆயுதமும் கொண்ட மன்னர், கரூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர். ஆதித்தன் குலத்தில் பிறந்தவர். அரிச்சந்திரன் வழியில் வந்த இவர் கந்த சஷ்டி விரதத்தை தவறாது கடைபிடித்தார். முருகப் பெருமான் காட்சி அருளியபோது, பகைவரை வெல்ல தனக்கு படைத்துணை அருளுமாறு முசுகுந்தர் வேண்டினார்.

முருகப் பெருமானின் கட்டளைப்படி  வீரபாகுத் தேவர் உள்ளிட்டோர் மனித உருவம் பெற்று முசுகுந்தருக்கு துணை புரிந்தனர். அசுரர்களை அழித்ததால் மகிழ்ந்த இந்திரன், முசுகுந்தருக்கு தான் வழிபட்டுவந்த சோமாஸ்கந்த மூர்த்தியையும்,  சோமாஸ்கந்தரைப் போல் இருக்கும் மற்ற 6 சோமாஸ்கந்த மூர்த்திகளையும் பரிசளித்தார். இந்திரன் பூஜித்த விடங்கரை (வி + டங்கர் - உளி படாமல் உருவானவர்) திருவாரூரிலும், மற்ற மூர்த்திகளை நாகப்பட்டினம், திருநள்ளாறு, வேதாரண்யம், திருகாறாயில், திருவாய்மூர், திருக்கோவில் ஆகிய இடங்களிலும் எழுந்தருளச் செய்தார்.  

முசுகுந்தர்
முசுகுந்தர்

ஔவையார்  

ஔவையாரின் பாடல்களை விரும்பிய முருகப்பெருமான், மாடு மேய்க்கும் சிறுவனாக உருவம் கொண்டு, நாவல் மரத்தின் மீது ஏறி அமர்ந்தார். அவ்வழியே வந்த ஔவையார், அந்த மரத்தடியில் அமர்ந்தார். நாவல் பழம் உண்ண எண்ணிய ஔவையார், சிறுவனை நாவல் பழம் பறித்துப் போடுமாறு கேட்டார். “சுடுகிற பழம் வேண்டுமா... சுடாத பழம் வேண்டுமா?” என்று சிறுவன் வினவ, ஏதும் புரியாத ஔவையார் சுடுகிற பழத்தையே பறித்துப் போடும்படி கூறினார்.

நன்கு கனிந்த பழங்களையே சிறுவன் பறித்துப் போட்டதும், அவற்றில் மண் ஒட்டிக் கொண்டதால், மணலை ஊதினார் ஔவையார். “சுடுகிற பழம் கேட்டதால், அதை ஊதி ஊதி ஆற வைத்து உண்ண வேண்டியிருக்கிறதா?” என்று சிறுவன் வினவியதும், அவனது மதிநுட்பத்தைக் கண்டு ஔவையார் வியந்து போனார். உடனே கந்தப் பெருமான் அவருக்கு காட்சி அருளினார்.  மேலும் கொடியது எது? இனியது எது? பெரியது எது? அரியது எது? என்று முருகப் பெருமான் கேள்விகள் கேட்டு, ஔவையார் அவற்றுக்கு பதிலளித்து பாடிய பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தார். 

ஔவையார்
ஔவையார்

முருகம்மையார் 

முருகா, முருகா என்று எந்நேரமும் முருகப் பெருமானின் திருநாமத்தையே சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. அவருக்கு திருமணம் ஆன பின்பும், அவர் முருகப் பெருமானின் திருநாமத்தையே உச்சரித்துக் கொண்டிருந்தார். கணவர் இச்செயலைக் கண்டித்தார். இருப்பினும் அவர் முருகன் பெயரை உச்சரிப்பதை நிறுத்தவில்லை. கோபமடைந்த கணவர், மனைவியின் கையை வெட்டினார். வலியால் துடித்த மனைவி முருகப் பெருமானின் பெயரை உச்சரிக்க, முருகப் பெருமான் எழுந்தருளினார். மனைவியின் வெட்டுப்பட்ட கை ஒன்று சேர்ந்தது. மீண்டும் முருகனின் பெயரை மனைவி உச்சரிக்க, அம்மையாரை மயில் மீது ஏற்றிக் கொண்டு கந்தகிரியில் சேர்த்தருளினார் முருகப் பெருமான். இச்சம்பவம் சுப்பிரமணிய பராக்கிரமம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.  

பொய்யாமொழி புலவர் 

தஞ்சைவாணன் கோவை என்ற நூலை எழுதிய பொய்யாமொழி புலவர், சிவபெருமானைப் பாடும் வாயால் சிவகுமரரைப் பாட மறுத்தார். அவருக்கு தக்க பாடம் புகட்ட எண்ணிய முருகப் பெருமான், முரட்டு வேடன்  வேடத்தில் தோன்றி, காட்டில் சென்று கொண்டிருந்த புலவரை விரட்டினார். தான் ஒரு புலவர் என்று அவர் கூறியபோது, தன் மீது ஒரு பாடல் பாட பணித்தார் ‘முட்டை’ என்ற பெயர் கொண்ட வேடன்.

புலவர் பாடலைப் பாடி நிறைவு செய்ததும், “கோழியைப் பாடிய வாயால் குஞ்சைப் பாடுவேனோ என்று கேட்ட தாங்கள், தற்போது முட்டையைப் பற்றி பாடிவிட்டீரே?” என்று வேடன் வினவ, வந்திருப்பது வேடன் அல்ல, வேலன் என்பதை புலவர் உணர்ந்துகொண்டார்.  தன் தவறுக்கு புலவர் வருந்தியபோது, முருகப் பெருமான் தோன்றி, தனக்கும் தன் தந்தைக்கும் வேற்றுமை இல்லை என்று கூறி அருள்புரிந்தார்.

குணசீலர்
குணசீலர்

 குணசீலர்  

திருச்செங்கோட்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவரான குணசீலர், முருகப் பெருமான் மீது இடையறாத அன்பு கொண்டவர். பிரதிவாதி பயங்கரன் என்ற புலவர், ஆழ்வார் திருநகரியில் இருந்து வந்து இவரிடம் வாதம் செய்தார். இதுதொடர்பாக குணசீலர், முருகப் பெருமானிடம் முறையிட்டார். நாகாசலத்தை நோக்கிய வண்ணம் நின்றார் முருகப் பெருமான்.

பிரதிவாதி பயங்கரனுக்கு ஏதும் புரியவில்லை. பார்வைக்கு இம்மலை நாகம் போல் இருக்கிறது. ஆனால் படம் எடுத்து ஆடவில்லை என்று ஆச்சரியப்பட்டார். இதையே திரும்பத் திரும்பக் கேட்டு பாடலாகப் பாடினார். அவர் அருகில் இருந்த மாடு மேய்க்கும் சிறுவனாக வந்த முருகப் பெருமான் அதற்கு விடையளிக்கும் விதமாக, “படம் எடுத்து ஆடினால், முருகனுடைய வாகனம் மயில் கொத்திவிடும் என்று பயந்துதான் அது ஆடவில்லை” என்றார்.

ஆச்சரியம் தாங்காமல் சிறுவனைப் பார்த்து, “நீ யார்?” என்று பிரதிவாதி பயங்கரம் வினவ, அதற்கு சிறுவனாக நின்ற கந்தன், “நான் குணசீலர் வீட்டு மாட்டை மேய்க்கும்போது, அவர் பாடியவற்றைக் கேட்டேன். அந்த அறிவைக் கொண்டுதான் நான் பாடினேன்” என்று பதிலளித்தார். முருகப் பெருமானின் கருணையை வியந்து போற்றினார் குணசீலர். 

பாம்பன் சுவாமிகள் 

பாம்பன் சுவாமிகள் என்று அழைக்கப்படும் குமரகுருதாச சுவாமிகள், இறைவனைக் காணும் ஆவலில் 1894-ம் ஆண்டு ராமேஸ்வரம் அருகே பிரப்பன் வலசை என்ற கிராமத்தில் மயான வெளியில் 35 நாட்கள் தியானத்தில் அமர்ந்தார். பல சோதனைகளைக் கடந்து ஆறாம் நாள் அவரது மனம் அமைதி அடைந்தது. 7-ம் நாள் அவர் நாடிய உபதேசம் கிடைத்தது. 35-ம் நாள் முருகப் பெருமானின் ஆணைப்படி வெளியே வந்தார்.   

முதன் முதலாக இவர் சென்னைக்கு பயணித்தபோது, இவரது வருகை குறித்து முருக பக்தியுடன் வாழ்ந்து வந்த ஓர் அம்மையாரின் கனவில் தெரிவிக்கப்பட்டது. எழும்பூர் ரயில் நிலையத்தில் ஒருவர் வந்து சுவாமிகளை அழைத்துச் சென்று அம்மையாரின் வீட்டில் விட்டு மறைந்தார்.

1923-ம் ஆண்டு சுவாமிகள் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு முருகப் பெருமானின் தரிசனம் கிடைத்தது. இரண்டு மயில் ஆடிய வண்ணம் இருந்தது. சண்முகக் கவசம் பாடிய அநுபூதிச் செல்வர், முருகனை நேரில் தரிசனம் கண்டு, 1929-ம் ஆண்டு சென்னை திருவான்மியூரில் சமாதி எய்தினார்.  

பாம்பன் சுவாமிகள்
பாம்பன் சுவாமிகள்

வள்ளிமலை சுவாமிகள்  

கோவை பூனாச்சிபுதூரில் சிதம்பர ஐயரின் மகனாக அவதரித்த அர்த்தநாரி, தீராத வலியில் துடித்தார். அந்த பிணி நீங்க பழநிக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். வயிற்று வலி தீர்ந்ததும், முருகப் பெருமானுக்கு தொண்டு செய்யத் தொடங்கினார். பல தலங்களுக்கு யாத்திரை சென்று நிறைவாக திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகளை சந்தித்து உபதேசம் பெற்றார். அவரது ஆலோசனைப்படி வள்ளிமலை சென்று தங்கினார். திருப்புகழ்களைப் பாடிப் பரப்புவதையே தனது குறிக்கோளாகக் கொண்ட இவர், வள்ளிமலை சுவாமிகள் என்றும் சுவாமி சச்சிதானந்தா என்றும் அழைக்கப்பட்டார்.  

சிகண்டி முனிவர் 

திருவேங்கட மலையில் முருகப் பெருமானை நோக்கி தவம் இருந்து அருள் பெற்றவர் சிகண்டி முனிவர். இவர் ஒரு சமயம் கதிர்காமம் சென்றபோது, மதயானை ஒன்று எதிரே வந்தது. உடனே, அருகே இருந்த வெற்றிலையைக் கிள்ளி, முருகப் பெருமானை நினைத்து யானை வரும் திசையில் வீசினார். அது முருகப் பெருமானின் வேலாக மாறி யானையை வீழ்த்தியது.   

நக்கீரர்  

மதுரை கடை சங்கத்தில் வீற்றிருந்த 49 புலவர்களுள் தலையாயவர் நக்கீரர். இவர், நாள்தோறும் திருப்பரங்குன்றம் சென்று சரவணப் பொய்கையில் நீராடி, முருகப் பெருமானை தரிசனம் செய்வது வழக்கம். ஒரு நாள் கற்கிமுகி என்ற பூதம்  இவரை மலைக் குகையில் சிறை வைத்தது. ஏற்கெனவே 999 புலவர்களை சிறைவைத்த பூதம், நக்கீரரையும் சேர்த்து 1,000 புலவர்களை சிறையிட்டு கொன்று தின்ன எண்ணியிருந்தது. பூதத்தின் எண்ணத்தை அறிந்த நக்கீரர், முருகப் பெருமானைத் துதித்து திருமுருகாற்றுப்படை பாடினார். முருகப் பெருமான் தனது வேலாயுதத்தை ஏவி பூதத்தைக் கொன்று, குகையைப் பிளந்து நக்கீரர் உள்ளிட்ட அனைத்து புலவர்களையும் விடுவித்தார்.   

நல்லியக் கோடன்  

சிற்றரசரான நல்லியக் கோடன், பத்துப்பாட்டுள் ஒன்றாகிய சிறுபாணாற்றுப்படையின் தலைவர். சிறந்த முருக பக்தரான இவர், பெரும் கொடை வள்ளலாகத் திகழ்ந்தார். ஒரு சமயம் மூவேந்தர்கள் இவரது நாட்டின் (வேலூர், ஆமூர்) மீது படையெடுத்து வந்தனர். போரில் நல்லியக் கோடன் தோற்றார். வேலூர் சென்று முருகப் பெருமானை தரிசித்தார். கேணியில் இருந்த மலர்களைப் பறித்து தன் (முருகப் பெருமான்) பெயர் சொல்லி பகைவர் மீது வீசுமாறு நல்லியக் கோடனின் கனவில் தோன்றிய கந்தன் பணித்தார்.

அதன்படி கோடன் முருகப் பெருமானை வழிபட்டு, கேணியில் உள்ள மலர்களைப் பறித்து, சுப்ரமண்ய காயத்ரி மந்திரம் சொல்லி, பகைவர் மீது வீசினார். அம்மலர்கள் வேலாக மாறி எதிரிகளை தாக்கி ஓடச் செய்தன.  கோடன் மலர் பறித்து வீசிய ஊர் ‘வேலூர்’ எனப் பெயர் பெற்றது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in