காக்கும் கார்த்திகைச் செல்வன் - 47 

கந்தனின் திருத்தலங்கள் – 39.ருத்ரபிரயாக் கார்த்திக் சுவாமி கோயில் 
ருத்ரபிரயாக் கார்த்திக் சுவாமி
ருத்ரபிரயாக் கார்த்திக் சுவாமி

உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ள கார்த்திக் சுவாமி கோயில் வட இந்தியாவில் புகழ் பெற்ற முருகப் பெருமான் தலமாக விளங்குகிறது. காட்டு நிலப்பரப்பில்  அமைந்துள்ள கிரௌஞ்ச மலை குறித்து  ராமாயணம், மகாபாரதம், மேக தூதம் உள்ளிட்ட காவியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இமயமலையின் எழிலைக் காண, மலையேற்றத்தை விரும்பும் பக்தர்கள் மற்றும் பயணிகள் வந்திருந்து இனிய அனுபவத்தைப் பெறுவது குறிப்பிடத்தக்கது. பந்தர் பஞ்சில் இருந்து தொடங்கும் பயணத்தில் கேதார்நாத் தாம், சௌகம்பா சிகரம், நீலகண்ட பர்வதம், துரோணகிரி, நந்தா குண்ட், திரிசூல், நந்தா தேவி, மேரு - சுமேரு பர்வதம் ஆகியவற்றைக் காணலாம். 

தல வரலாறு 

கைலாய மலையில் ஒருசமயம் பார்வதி தேவியும், சிவபெருமானும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் விநாயகப் பெருமானும், முருகப் பெருமானும் அமர்ந்திருந்து ஏதோ விஷயம் தொடர்பாக விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது சிவபெருமான் தனது இரு மகன்களையும் அழைத்து அவர்களுக்கு ஒரு போட்டி வைக்கப் போவதாக அறிவிக்கிறார். மகன்கள் இருவரும் போட்டி குறித்து அறிய ஆவலாக இருந்தனர். இருவரில் யார் உலகத்தை ஏழு சுற்று சுற்றிவிட்டு முதலில் வருகிறார்களோ, அவர்களுக்கு சிறப்பு வெகுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கிறார் சிவபெருமான்.

சிவபெருமான் சொல்லி முடித்ததும், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல், தனது வாகனமான மயிலில் ஏறி உலகை வலம் வரக் கிளம்புகிறார் முருகப்பெருமான். எதற்கும் கவலை கொள்ளாத விநாயகப்பெருமான், தனக்கு தாய் - தந்தையரே உலகம் என்று கூறி சிவபெருமான் - பார்வதியை வலம் வருகிறார்.

விநாயகரின் செயலில் மகிழ்ந்த சிவபெருமான், அவரைப் பாராட்டி, அவருக்கே அனைத்து இடங்களிலும், அனைத்து பூஜைகளிலும் முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்று அறிவிக்கிறார். அதனாலேயே எந்த வழிபாடு நடைபெற்றாலும், முதலில் விநாயகருக்கே முதல் பூஜை நடைபெறுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது.  

பிறகு வந்த முருகப்பெருமான் நடந்தவற்றை அறிந்து சினம் கொள்கிறார். வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை உலகுக்கு உணர்த்த  எண்ணுகிறார். உடனே சிவபெருமானுக்காக தனது உடல் மற்றும் எலும்புகளை அர்ப்பணிக்கத் துணிகிறார்.  

வெண்ணிற எலும்புகள் அனைத்தும் ஒன்றாகி சுயம்பு வடிவ கார்த்திக் சுவாமியாக தேவர்களுக்கு காட்சி அருளினார். சிவபெருமானும் கார்த்திக் சுவாமியின் திருவிளையாடலைப் புரிந்துகொண்டு அவ்விடத்திலேயே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும் என்று அவரைக் கேட்டுக் கொண்டார். பார்வதி தேவியும் அதற்கு தனது சம்மதத்தைத் தெரிவித்தார். 

தந்தையுடன் இருந்துவந்த கைலாச மலையை விட்டு வெளியேறி, கிரௌஞ்ச மலைக்கு வந்து கார்த்திக் சுவாமி தவம் இயற்றுகிறார். இதன் காரணமாக, இத்தல முருகனுக்கு வழக்கமான வடிவம் இருக்காது.  

கார்த்திக் சுவாமியின் சுயம்புத் திருமேனி வெண்மை நிறத்தை சித்தரித்து மனத் தூய்மையை பிரதிபலிக்கிறது.  போர் மற்றும் வெற்றிக்கான கடவுளாகப் போற்றப்படும் கார்த்திக் சுவாமி, இத்தலத்தில் வெண்பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளார். சௌகம்பா சிகரத்தின் பின்னணியில் கார்த்திக் சுவாமி சக்தி வாய்ந்த பெருமானாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.  

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் இந்த இடத்தில் நடைபெற்றதால், ருத்ரபிரயாக் கார்த்திக் சுவாமி கோயில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. குளிர்காலத்தில் பனியால் மூடப்பட்டிருக்கும் இக்கோயில், மழைக் காலத்தில் மேகங்களில் இருந்து எழுவது போல் காட்சி அளிக்கும்.  கார்த்திக் சுவாமி, ஸ்கந்தன், கந்தன், வேலன், சுப்பிரமணியன், சரவணன் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். 

கிரௌஞ்ச மலையின் சிறப்புகள் 

கார்த்திக் சுவாமி கிரௌஞ்ச பர்வதத்தின் மீது கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். இந்த கிரௌஞ்ச மலை குறித்து பண்டைய கால இலக்கிய படைப்புகளிலும், புராண காப்பியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

மகா சிவபுராணத்தின் துரித்ய சம்ஹிதை சதுர்த்தி காண்டத்தில் (குமார காண்டம்) கார்த்திகேயனின் அவதாரம் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. அதில், சிவபெருமானிடம் இருந்து அக்னிப் பிழம்பு வெளிப்பட்டதும், அது ஆறுமுகங்களைக் கொண்ட  குழந்தையாக மாறி, பத்ரிநாத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார்த்திகைப் பெண்களின் கைகளில் தவழ்ந்ததும்  குறிப்பிடப்பட்டுள்ளது.  

சிவபுராணத்தின் 28-வது ஸ்லோகத்தின்படி , இச்சம்பவங்கள் கைலாச பர்வதம், கங்கை நதி அருகே நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த ஸ்லோகத்தில் கார்த்திகைப் பெண்கள் பத்ரிகாஸ்ரமத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.  

மேலும், கார்த்திக் சுவாமி அவதாரம் தொடர்பான சம்பவங்கள் தற்போதைய உத்தராகண்ட் மாநிலத்தில்  (கர்வால் மற்றும் குமாயோன் பகுதிகள்) நடைபெற்றுள்ளது உறுதியாகிறது. ஸ்கந்த புராணத்தின் மற்றொரு பதிப்பும் இதுதொடர்பாக குறிப்பிட்டுள்ளது.    

சதயுகத்தின் ஏழு தீவுகளில் ஒன்றாகக் கருதப்படும் கிரௌஞ்ச  தீவில் கிரௌஞ்ச மலை தொடர்பான குறிப்பு காணப்படுகிறது. சிவமகா புராணத்தின்படி கிரௌஞ்ச மலை, தன்னை பாணாசுரனிடம் இருந்து காக்குமாறு கார்த்திகேய பெருமானை வேண்டியதாகக் கூறப்படுகிறது. கிரௌஞ்ச் என்பவன் பார்வதி தேவி மற்றும் பாணாசுரனின் சகோதரன் ஆவான். ஹிமவான் (இமயம்) மகன். கார்த்திக் சுவாமிக்கு தாய்வழி மாமா. கிரௌஞ்ச் பர்வதத்தில் இருந்து கைலாய மலை வரை நிறைய அறியப்படாத இடங்கள்  உள்ளன.  

மகாபாரத்தில் ‘கிரௌஞ்ச மலை’ குறித்த தகவல்கள் காணப்படுகின்றன. இதில் கிரௌஞ்ச மலை இமயமலையின் ஒரு பகுதியாகக் குறிப்பிடப்படுகிறது. பரசுராமர் தனது வில்வித்தையை முடித்துவிட்டு திரும்பும்போது, இமயமலை வழியாகச் செல்வதற்காக ஒரு பாதையை உருவாக்கும் பொருட்டு, அம்பு எய்துகிறார். அப்போது மானசரோவரில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் அன்னப்பறவைகள் இந்த வழியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தப் பாதை ‘கிரௌஞ்ச் ரந்த்ரா’ என்று அழைக்கப்படுகிறது. 

வால்மீகி ராமாயணத்தில், கிஷ்கிந்தா காண்டத்திலும் கிரௌஞ்ச மலை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.  சீதா பிராட்டியைத் தேடி வடக்குப் பகுதியில் செல்ல சுக்ரீவன், வானரப் படைக்கு அறிவுறுத்துகிறான். அப்போது கிரௌஞ்ச மலையைக் குறிப்பிட்டு, அதில் உள்ள சில பகுதிகளில் தேடுதல் வேட்டையைத் தொடங்க அவர்களைப் பணிக்கிறான்.   

கிரௌஞ்ச மலைக்குச் செல்லும்போது, அங்கு எச்சரிக்கையுடன்  நுழைய வேண்டும். அந்தப் பாதை கடினமானதாக இருக்கும். கிரௌஞ்ச மலையில் மற்ற குகைகள், சிகரங்கள், பள்ளத்தாக்குகளையும் ஆராய வேண்டும். கிரௌஞ்ச மலைக்கு அடுத்தபடியாக உள்ள மைநாக மலையிலும் தேட வேண்டும். க்ரௌஞ்சம் கிரிம் அதிக்ரம்ய மைநாகோ நாம பர்வத: என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   

காளிதாசனின் காவியப் படைப்பான மேகதூதத்திலும் (உத்தர மேக் - 59) கிரௌஞ்ச ரந்த்ரா குறித்த தகவல்கள் காணப்படுகின்றன. இமயமலை  பகுதியில் கிரௌஞ்ச் ரந்த்ரா என்ற பள்ளத்தாக்கு (பாதை) உள்ளது. இப்பாதை பரசுராமரால் ஏற்படுத்தப்பட்டது. அன்னப்பறவைகள் இப்பாதையைப் பயன்படுத்துகின்றன. இப்படைப்பின் 30 ஸ்லோகம் கைலாய மலையைப் பற்றி குறிப்பிடுகிறது.   

வால்மீகி முனிவர் மற்றும் மகாகவி காளிதாஸ் இருவரும்  கைலாய மலை அருகே இருக்கும் கிரௌஞ்ச மலை மற்றும் கிரௌஞ்ச் ரந்த்ரா குறித்து குறிப்பிட்டுள்ளனர். இவை அனைத்தும் கார்த்திக் சுவாமி தொடர்பான இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

ருத்ரப் பிரயாகையின் சிறப்புகள் 

நந்தப் பிரயாகை, தேவப் பிரயாகை, ருத்ரப் பிரயாகை, கர்ணப் பிரயாகை, விஷ்ணு பிரயாகை ஆகிய ஐந்து இடங்கள் பஞ்சப் பிரயாகை என்று அழைக்கப்படுகின்றன. அலக்நந்தா நதியும் மந்தாகினி நதியும் சங்கமமாகும் இடம் ருத்ரப் பிரயாகை என்று அழைக்கப்படுகிறது.  

பஸ்மாசுரன் யார் தலையில் கை வைத்தாலும், அவர்கள் சாம்பலாகி விடுவர் என்ற வரத்தை அவனுக்கு அளிக்கிறார் சிவபெருமான். வரம் கிடைத்த ஆணவத்தில் அனைவரது தலையிலும் தன் கையை வைத்து அவர்களை சாம்பலாக்குகிறான் பஸ்மாசுரன். கடைசியாக சிவபெருமானின் தலையில் கை வைக்க முயற்சி செய்யும் சமயத்தில், சிவபெருமான் அவனிடம் இருந்து தப்பிக்க, பல்வேறு இடங்களுக்குச் சென்று ஒளிந்து கொள்கிறார்.

நிறைவாக ருத்ரப் பிரயாகையில் உள்ள ஒரு குகைக்குள் சென்று, சில காலம் அங்கு தங்கியிருந்து தவம் இயற்றுகிறார் சிவபெருமான். இந்த இடத்தில் கோயில் எழுப்பப்பட்டு, பக்தர்கள் வழிபடும் கோடேஸ்வரர் கோயிலாக தற்போது பிரபலம் அடைந்துள்ளது. கல்வியில் சிறக்க, குழந்தை பாக்கியம் பெற, வியாபாரம் செழிக்க இங்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இங்குள்ள அலக்நந்தா ஆற்றங்கரையில் சுவாமி ஹரிதாஸ் கிரி ஜல சமாதி அடைந்தார். 

அலக்நந்தா ஆறும் மந்தாகினி ஆறும் சங்கமிக்கும் இடத்தில்  சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடியதாகக் கூறப்படுகிறது. இந்த இடத்தில் நாரத முனிவர் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். நாரத முனிவரின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவருக்கு மகதி என்ற வீணையை பரிசாக அளித்து, அதை மீட்டவும் உபதேசம் செய்தார். நாரத முனிவர் தவம் செய்ததற்கு அடையாளமான பாறை ஒன்று, கோயிலில் கீழ் பகுதியில் அமைந்துள்ளது. இப்பாறை ‘நாரதர் சீலா’ என்று அழைக்கப்படுகிறது. இந்த இடம் பத்ரிநாத்துக்கும் கேதார்நாத்துக்கும் செல்லும் பாதை பிரியும் இடமாகும். 

ஆக்கிரோஷமாக ஓடும் அலக்நந்தா ஆறும், மெதுவாக ஓடும் மந்தாகினி ஆறும் சங்கமிக்கும் இந்த இடத்தில், தங்கள் முன் ஜென்ம பாவங்கள் தீர பக்தர்கள்  புனித நீராடுவது வழக்கம். இந்த இடத்தில் அமைந்துள்ள காளி (பூர்ணாகிரி மாதா) மற்றும் ஈஸ்வர் கோயில் (ருத்ரநாத் ஜி) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோயிலுக்குள் கங்கா தேவி, முதலை மீது நிற்பது போன்ற சிலை உள்ளது.  

கோயில் அமைவிடம் 

உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ள கார்த்திக் சுவாமி கோயில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,050 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.  

டேராடூன் ரயில் நிலையத்தில் இருந்து சாலை வழியாக 220 கி.மீ தொலைவில் உள்ள ருத்ரபிரயாக் நகரத்துக்கு பயணித்து, அங்கிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள கனக் சௌரி கிராமத்தை அடைய வேண்டும். அங்கிருக்கும் ஒரு நுழைவாயிலை அடைந்ததும், அங்கிருந்து 3 கி.மீ தூரம் மலைப் பாதையில் மேலே நடந்து செல்ல வேண்டும். அங்கிருந்து அரை கி.மீ தூரத்துக்கு சுமார் 400 செங்குத்தான படிக்கட்டுகளில் நடந்து சென்றால் கார்த்திக் சுவாமி கோயிலை அடையலாம்.

மலைப்பாதையில் இடையிடையே இளைப்பாறுவதற்கு சில நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி  செல்வதால், மலையேறுவதில் எந்த சிரமமும் தெரிவதில்லை. ஆங்காங்கு புதுப் புது பறவை இனங்களும் காணப்படுகின்றன. மலையின் மீது இருந்து சூரிய அஸ்தமனம், சூரிய உதயம், 150-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் (தங்கக் கழுகு, கருப்பு கழுகு, புல்வெளி கழுகு, தாடி கழுகு, ஹிமாலயன் ஸ்னோகாக், மோனல்), கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மலைகள் என்று இயற்கைக் காட்சிகளை ரசிக்கவும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை புரிகின்றனர். மலைப் பாதையில் செல்ல டோலி அல்லது குதிரையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

பயண திட்டம் 

அக்டோபர் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டமே இத்தலத்தை தரிசிக்க சிறந்த காலமாகும். வழக்கமாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் வரும் பௌர்ணமி தினங்கள், குறிப்பாக, கார்த்திகை பூர்ணிமா தினத்தில் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஜூன் மாதம் கைலாச யாத்திரையுடன் இத்தலத்தையும் தரிசனம் செய்ய திட்டமிடலாம்.  

சந்தியா கால ஆரத்தி 

கார்த்திக் சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான மணிகள் கட்டப்பட்டிருக்கும். கார்த்திகை பூர்ணிமா தினத்தில் இத்தலத்துக்கு வந்து மணி கட்டி சுவாமி செய்யும் பக்தர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. தினமும் மாலை நேரத்தில் இந்த மணிகளின் ஓசையுடன் சந்தியா கால ஆரத்தி நடைபெறுவது தனிச்சிறப்பு.  

சுற்றுலா  இடங்கள் 

கார்த்திக் சுவாமி கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்கள், அருகில் உள்ள பல இடங்களுக்குச் செல்வது வழக்கம். உகிமத் ஓம்காரேஷ்வர் கோயில், கேதார்நாத் கோயில், ஓக் மற்றும் ரோடோடெண்ட்ரான் மரங்களைக் கொண்டுள்ள சாரி காவ்ன் (புடவை கிராமம்), தியோரியா தால் (மரகத ஏரி), பிசூரி தால், துங்கநாத், சந்திரசிலா, உத்தராகண்டின் மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் இயற்கை எழில் கொஞ்சும் சோப்தா வனம் என்று பக்தர்கள் பயணிக்கின்றனர்.

மேலும், சௌகம்பா, துரோணகிரி, நீலகண்ட சிகரங்களையும் காண எண்ணற்ற சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். மேலும், கனக் சௌரி கிராமத்தில் உள்ள உள்ளூர் கலாசாரங்கள், பழக்க வழக்கங்கள், ஆகியவற்றையும் வெளியூர் மக்கள் ரசிக்கின்றனர்.  

108 வலம்புரி சங்கு பூஜை 

அண்மையில் உத்தராகண்ட் மாநில சுற்றுலாத் துறை சார்பில்  கார்த்திக் சுவாமி கோயிலில் 108 வலம்புரி சங்கு பூஜை, வேள்வி மற்றும் கலச ஸ்தாபனம் நடைபெற்றன. சங்குகளில் இருந்த புனித நீரால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. திருப்பரங்குன்றம் மற்றும் சுவாமிமலை முருகப் பெருமானுக்கு சாற்றிய வஸ்திரங்கள், கார்த்திக் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் 20-க்கும் மேற்பட்ட ஆதீனங்கள் பங்கேற்று சிறப்பித்தனர். 

திருவிழாக்கள் 

நவம்பரில் நடைபெறும் ‘கார்த்திகை பூர்ணிமா’  திருவிழா, ஜூன் மாதத்தில் நடைபெறும் கலச யாத்திரை உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் போது இங்கு எண்ணற்ற பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வர். இங்குள்ள தமிழர்கள், கார்த்திக் சுவாமியின் வரலாற்றை ஒருவருக்கொருவர் கூறி மகிழ்வர். மேலும்,  கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் ஆகியவற்றைப் பாடி வழிபாடு செய்வர். ஆன்மிக ரீதியாக இத்தலத்தில் ஆராய்ச்சி மேற்கொள்பவர்கள் வந்திருந்து, மாலை நேரப் பிரார்த்தனை களில் ஈடுபட்டு, மந்திரங்களை உச்சரிக்கின்றனர்.  காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கோயில் நடை திறந்திருக்கும்.

படங்கள்: கே.சுந்தரராமன், ஜார்ஜ் பிரவீன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in