காக்கும் கார்த்திகைச் செல்வன் - 45

கந்தனின் திருத்தலங்கள் – 37.தெப்பம்பட்டி வேலப்பர் கோயில்
தெப்பம்பட்டி வேலப்பர்
தெப்பம்பட்டி வேலப்பர்

தேனி மாவட்டம், தெப்பம்பட்டியில் உள்ள வேலப்பர் கோயில், முருகப்பெருமான் கோயில்களுள் சிறப்பு பெற்ற நீர் ஊற்றை (மாவூற்று) கொண்டுள்ளது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு தெற்கே மாமரத்தின் அடியில் எப்போதும் வற்றாத நீர், ஊற்றாக பொங்கிக் கொண்டிருப்பது தனிச்சிறப்பு.

சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வரும் வேலப்ப சுவாமியை தரிசிக்க பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது குறிப்பிடத்தக்கது. மாவூற்று நீரில் நீராடி சுவாமி தரிசனம் செய்தால் தீராத நோய்களும் குணமடையும் என்பது ஐதீகம்.

தல வரலாறு

பல்லாண்டுகளுக்கு முன்பு தெப்பம்பட்டி (ஆண்டிபட்டி) பகுதி, மருதம் மற்றும் மாமரங்கள் நிறைந்த மலைப்பகுதியாக இருந்துள்ளது. இங்கு பழியர் இனத்தைச் சேர்ந்த பலர் வாழ்ந்து வந்தனர். இவர்கள் வள்ளிக்கிழங்கைப் பயிரிட்டு, அவற்றை தமது உணவாக உண்டு வந்தனர். ஒரு சமயம், மலைவாழ் மக்கள் ஒன்றுகூடி மலையின் ஒரு பகுதியில் விளைந்திருந்த வள்ளிக்கிழங்கை தோண்டத் தொடங்கினர்.

அதிக ஆழத்துக்கு தோண்டியும் கிழங்கு கிடைக்கவில்லை. ஆனால், அதன் வேர் மட்டும் அதிக ஆழத்துக்கு சென்றுகொண்டே இருந்தது. நிறைவாக வேரின் முடிவில் வேலப்ப சுவாமியின் சுயம்புத் திருமேனி காணப்பட்டது. இதுதொடர்பான தகவலை மலைவாழ் மக்கள், தெப்பம்பட்டி பகுதியை ஆண்ட கண்டமனூர் ஜமீன்தாரிடம் தெரிவித்தனர். பிற்காலத்தில் ஜமீன் ஏற்பாட்டில் வேலப்ப சுவாமிக்கு கோயில் எழுப்பி, வழிபாடுகள் நடைபெற்றன.

கோயில் அமைப்பும் சிறப்பும்

குன்றுதோறும் குமரன் இருப்பான் என்பதற்கு ஏற்ப, இயற்கைச் சூழல் நிறைந்த தெப்பம்பட்டி மலைப் பகுதியில் வேலப்ப சுவாமியாக குமரன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். குகைகள் நிறைந்த இம்மலையில் பல சித்தர்கள், தவ யோகிகள் இன்றும் அமர்ந்து தவம் புரிவதாக ஒரு நம்பிக்கை.

மலையடிவாரத்தில் சக்தி, கருப்பண்ணசாமி ஆகியோர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றர். 300 படிகள் மலையேறிச் சென்றால் குன்றின் மீது மாவூற்று விநாயகர், சப்த மாதாக்கள் சந்நிதிகளை தரிசிக்கலாம்.

கோயிலின் தென் பகுதியில் மாமரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதில் ஒரு மரத்தின் அடியில் எப்போதும் வற்றாத நன்னீர் ஊற்றாக பொங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம். இதனாலேயே இப்பகுதி ‘மாவூற்று’ என்று அழைக்கப்படுகிறது. இத்தல முருகன் ‘மாவூற்று வேலப்பர்’ என்று போற்றப்படுகிறார்.

கோயில் அமைந்துள்ள பகுதியில் பெரிய தீர்த்தக் குளம் அமைந்துள்ளது. கோயிலுக்கும், இந்த தெப்பக்குளத்துக்கும் சுரங்கத் தொடர்புகள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தைப்பூச கோலாகலம்

27 நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம். தை மாதத்தில் பூச நட்சத்திரம் வரும் நாள் பெரும்பாலும் பௌர்ணமி தினமாக இருக்கும். அசுரனை அழிக்க அன்னை பார்வதி தேவியிடம் இருந்து வீர வேலை வாங்கி, முருகன் தன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும்.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில், தேவர்களால் அசுரர்களை வீழ்த்த முடியவில்லை. எனவே, அவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று, தங்களுக்கு ஓர் ஆற்றல்மிக்க தலைவனை உருவாக்கித் தரவேண்டும் என்று விண்ணப்பம் வைத்தனர். தேவர்களின் முறையீட்டை ஏற்ற சிவபெருமான், தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தப்பெருமான்.

ஆண்டிக் கோலத்தில் பழநி மலையில் வீற்றிருக்கும் முருகனுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூசத் திருநாளில்தான். அந்த வேலைப் பயன்படுத்தியே முருகப்பெருமான் திருச்செந்தூரில் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காத்தருளினார்.

அசுரர்களை வதம் செய்ய முருகன் பயன்படுத்திய வேலை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம். தைப்பூச தினத்தை முன்னிட்டு, முருக பக்தர்கள் மார்கழி மாத தொடக்கத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். தினமும் முருகனை வழிபட்டு, தைப்பூச தினத்தில் பழநி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை நிறைவு செய்வர்.

அறுபடை வீடுகளிலும் முருக பக்தர்கள் பலர் பாத யாத்திரை சென்று தைப்பூச தினத்தில் முருகப்பெருமானை வழிபடுவர். பழநி மலை சென்று சுவாமி தரிசனம் செய்ய இயலாதவர்கள், தங்கள் ஊரிலோ அல்லது ஊருக்கு அருகிலோ உள்ள முருகன் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்கின்றனர்.

மாவூற்று வேலப்பர் கோயிலிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க, பக்தர்கள் இந்த நாளை தேர்ந்தெடுத்து புதிய முயற்சிகளை மேற்கொள்கின்றனர். தைப்பூச நாளில் பக்தர்கள் குழந்தைகளுக்கு காது குத்துதல், ஏடு தொடங்குதல் போன்றவற்றை செய்வது வழக்கம்.

இங்கே தைப்பூசத் திருநாளை முன்னிட்டு வேலப்ப சுவாமிக்கு 21 வகையான சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் தெப்பத்தில் நீராடி, முருகனை வணங்கினால், முன்னோர் நன்மைகள் செய்வார்கள் என்பது ஐதீகம். காலம் காலமாக மலைவாழ் மக்கள் வேலப்ப சுவாமியிடம் அருள்வாக்கு கேட்டு, புதிய பணிகளைத் தொடங்குவது வழக்கம். இங்குள்ள பூசாரியும் அருள்வாக்கு வழங்குவது உண்டு.

திருவிழாக்கள்

சித்திரைத் திருவிழா, கந்த சஷ்டி பெருவிழா, தைப்பூசத் திருவிழா, பங்குனி உத்திரத் திருவிழா முதலியவை இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. பங்குனி உத்திரத்தின் போது நடைபெறும் தேர்த் திருவிழாவில் எண்ணற்ற பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுப்பர். அப்போது தெப்பம்பட்டி மலையே விழாக் கோலம் பூண்டு காணப்படும். கந்த சஷ்டி பெருவிழா நிறைவில் வேலப்ப சுவாமிக்கு கல்யாண உற்சவம் நடைபெறும். கல்யாண உற்சவத்தில் பக்தர்கள் பங்கேற்றால், அவர்கள் இல்லத்தில் விரைவில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது ஐதீகம்.

இங்கே சித்திரைத் திருவிழா 5 வாரங்கள் கொண்டாடப்படுகிறது. சித்திரை 1-ம் தேதி தொடங்கும் இத்திருவிழா 5-வது வாரத்துக்குப் பிறகுதான் நிறைவுபெறுகிறது. மக்களின் வேடிக்கை விளையாட்டு, பாரம்பரிய சொல்லாடல் நிகழ்ச்சிகள், தெருக் கூத்து, சிறப்பு இசை நிகழ்ச்சிகள், கந்த புராண சொற்பொழிவுகள், கந்தனின் திருவிழாக்கள் குறித்த உபன்யாசங்கள், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் இத்திருவிழாவில் நடைபெறும். சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்திருந்து இந்நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பர்.

அனைத்து அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் இங்கு வேலப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, புத்தாண்டு தினங்கள், தைப் பொங்கல், சிவராத்திரி, சஷ்டி, விசாகம், கார்த்திகை நட்சத்திர தினங்களில் வேலப்ப சுவாமி சிறப்பு புறப்பாடு கண்டருள்வார்.

புத்திர தோஷம் நீங்க, திருமணத் தடை விலக, மனக்குறைகள் தீர, வியாபாரம் கல்வியில் சிறக்க, நோய்கள் நீங்க இங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. நினைத்த செயல் நிறைவேற வேலப்ப சுவாமிக்கு பால், பஞ்சாமிர்தம், இளநீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது. பால் குடம் மற்றும் காவடி எடுத்தல், அலகு குத்துதல், முடி இறக்குதல் உள்ளிட்டவற்றை செய்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

காலை 7 முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 3 முதல் இரவு 7 மணி வரையும் இக்கோயில் நடை திறந்திருக்கும்.

அமைவிடம்: தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இருந்து 15 கி.மீ தொலைவில் தெப்பம்பட்டி என்ற சிற்றூரில் உள்ள மலை மீது அமைந்துள்ளது வேலப்பர் கோயில்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in