காக்கும் கார்த்திகைச் செல்வன் - 11

கந்தனின் திருத்தலங்கள்; 3 - கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில்
கழுகாசல மூர்த்தி
கழுகாசல மூர்த்திகழுகுமலை கந்தன் கோயில்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி - சங்கரன்கோவில் சாலையில் கோயில்பட்டியில் இருந்து 22 கி.மீ தொலைவில் கழுகுமலையில் அமைந்துள்ள கழுகாசலமூர்த்தி கோயில் முருகப் பெருமானைப் போற்றும் குடைவரைக் கோயிலாகும்.

வள்ளி, தெய்வயானையுடன் முருகப் பெருமான் அருள்பாலிக்கும் இத்தலத்தில் மூலவர் முருகப் பெருமான் (கழுகாசலமூர்த்தி) மேற்கு நோக்கியும், வள்ளி தெற்கு நோக்கியும், தெய்வயானை வடக்கு நோக்கியும் அமர்ந்த நிலையில் இருப்பது தனிச்சிறப்பு. 4 அடி உயரத்தில் பெரிய திருமேனியாக விக்கிரகங்கள் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.

தல வரலாறு

ராமபிரான் சீதாபிராட்டியுடன் வனவாசத்தில் இருக்கும்போது, சீதையை தனியே விட்டுவிட்டு வேட்டையாடச் செல்வது வழக்கம். அப்போதெல்லாம் சீதைக்கு துணையாக இருந்தவர் ஜடாயு என்ற கழுகு. இவர் கருட பகவானின் தம்பி அருணனின் மகனாவார். இலங்கை வேந்தன் ராவணன் சீதையை சிறைபிடித்துச் செல்லும்போது, அவனுடன் சண்டையிட்டு ஜடாயு காயமடைகிறார். ராமபிரான் காட்டில் இருந்து வந்தவுடன் நடந்ததைக் கூறிவிட்டு இறந்து விடுகிறார்.

இதைத் தொடர்ந்து ராமபிரான் அவருக்கு இறுதி காரியங்கள் செய்தார். இத்தகவலை அனுமார் மூலம் அறிந்த ஜடாயுவின் தம்பி (கழுகு முனிவர்) சம்பாதி, தன்னால் தன் சகோதரனுக்கு ஈமக்கிரியைகள் செய்ய இயலவில்லையே என்று ராமபிரானிடம் கூறி வருத்தப்பட்டார். இதனால் ஏற்பட்ட பாவத்தை எவ்விதம் களைவது? என்று ராமபிரானிடம் வினவினார் சம்பாதி.

ராமபிரான் சம்பாதியை நோக்கி, “கஜமுக பர்வதத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி பூஜைகள் செய்து வந்தால் அதற்கான விடை கிடைக்கும்” என்று கூறினார். அதன்படி சம்பாதியும் கஜமுக பர்வதத்தில் தங்கி பூஜைகள் செய்தார். இவ்வாறு பல ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன.

ஒருசமயம் முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்யும்பொருட்டு, கஜமுக பர்வதம் வழியாக வந்தார். அப்போது சூரபத்மனின் சகோதரன் தாரகாசுரன், முனிவர்களுக்கும் மக்களுக்கும் இன்னல்கள் விளைவித்து வருவதை அறிகிறார் முருகப் பெருமான். ஐப்பசி மாதம் பஞ்சமி தினத்தில் தாரகாசுரனை வதம் செய்த முருகப் பெருமான் பின்னர், கஜமுக பர்வதத்துக்கு ஓய்வெடுப்பதற்காக வருகிறார்.

முருகப் பெருமான் தங்குவதற்கு உண்டான ஏற்பாடுகளை சம்பாதி செய்து தருகிறார். மேலும், சூரபத்மன் இருக்கும் இடத்தையும் முருகப் பெருமானிடம் தெரிவிக்கிறார். இதில் மகிழ்ந்த முருகப் பெருமான், சம்பாதி முனிவருக்கு முக்தி அளிக்கிறார். இதன் காரணமாக, சம்பாதி தன் சகோதரனுக்கு ஈமக்கிரியைகள் செய்ய முடியாத பாவம் நீங்கியது. கழுகு முனிவரான சம்பாதி தங்கியிருந்த கஜமுக பர்வதமே அவரது பெயரால் ‘கழுகுமலை’ என்று பெயர் பெற்றது.

கழுகாசல மூர்த்தி

கந்த புராணத்தின் ஆசிரியர் கச்சியப்பர், முருகப் பெருமான் மேற்கு முகமாக வீற்றிருக்கும் தலங்கள் மூன்று (பழநி, பேரூர், கழுகுமலை) என்று தெரிவித்துள்ளார். அவற்றில் ராஜபோகமாக முருகப் பெருமான் வீற்றிருப்பது கழுகுமலையில்தான் என்று குறிப்பிட்டுள்ளார். மலையைக் குடைந்து கோயிலை மலைக்குள் அமைத்திருப்பது, இக்கோயிலின் சிறப்பு அம்சமாகும். மலையே இந்த குடவரைக் கோயிலுக்கு கோபுரமாக அமைந்துள்ளது. இக்கோயிலை வலம் வர வேண்டும் என்றால், இந்த மலையையே சுற்றி வர வேண்டும்.

கழுகுமலையில் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புநாதீஸ்வரர் கோயிலில் முருகப் பெருமான் எழுந்தருளியிருக்கிறார். இத்தலத்தில் வீற்றிருக்கும் கழுகாசல மூர்த்தி ஒரு முகம், 6 கரங்களுடனும், இடது காலை மயிலின் கழுத்திலும், வலது காலை தொங்கவிட்டபடியும் கையில் கதிர்வேல் கொண்டு அருள்பாலிக்கிறார்.

குரு மங்கல தலம்

கழுகாசல மூர்த்தி கோயிலில் குருவும் (தட்சிணாமூர்த்தி) முருகப் பெருமானும் (செவ்வாய்) இருப்பதால், குரு மங்கல தலம் என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. இத்தல மூர்த்தியை அகத்திய முனிவர் தினமும் பூஜிப்பதாக ஐதீகம். மற்ற கோயில்களில் அசுரன் மயிலாக மாறியிருப்பதைக் காணலாம். அதன்படி மயிலின் முகம் முருகப் பெருமானுக்கு வலது புறத்தில் இருக்கும். ஆனால் இத்தலத்தில், இந்திரனே மயிலாக இருப்பதால் மயிலின் முகம் முருகப் பெருமானுக்கு இடது புறத்தில் இருக்கிறது. இதன் காரணமாக, சூரசம்ஹார நாட்களில் மயிலின் முகம் மூடப்பட்டிருக்கும். இத்தலத்தில் முருகப் பெருமானுக்கும் தனி பள்ளியறை அமைந்துள்ளது.

கோயில் சிறப்பு

ராமாயண கால தொடர்புடையதால், இத்தலம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இக்கோயில் அருகே கழுகுமலை வேட்டுவான் கோயில் மற்றும் கழுகுமலை சமணர் படுகைகள் உள்ளன. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கலைநயம் மிக்க கோயில் என்று பெயர் பெற்ற இக்கோயில் பாண்டிய மன்னர்களால் 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கோயில் முழுவதும் நிறைய சிற்பங்கள் காணப்படுகின்றன. கோயில் முழுவதும் கட்டி முடிக்கப்படவில்லை என்றாலும் பிற்காலத்தில் விநாயகர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

வெட்டுவான் கோயில் எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயிலைப் போன்ற அமைப்பில் உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள இக்கோயிலில் பணிகள் நிறைவடையாமல் உள்ளன. சிகரம் மட்டும் முற்றுப் பெற்றுள்ளது. கருவறையும் அர்த்த மண்டபமும் உள்ளன. உமா மகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மதேவர் சிற்பங்கள் சிற்பக்கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றன. விமான மேற்பகுதியில் நரசிம்மரும், வடக்குப் பகுதியில் பிரம்மதேவரும் அருள்பாலிக்கின்றனர்.

சமணர் படுகைகளில் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. சமணர்கள் தங்கள் குருநாதர், தாய், தந்தை, மகள் நினைவாக தீர்த்தங்கரர் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட இந்தச் சிற்பங்கள் மூலம் சமண சித்தாந்தம் அறியப்படுகிறது. முருகன் மேற்கு முகமாக இருக்கும் சந்நிதியை உடைய மலை ‘சிவன் ரூபம்' என்றும்; கிழக்கு முகமாக இருக்கும் மலை ‘சக்தி ரூபம்' என்றும் வேதாகம நூல்களில் கூறப்பட்டுள்ளது.

நிறைவடையாத சிற்பங்கள்

பாண்டிய நாட்டில் சிற்பக்கலையில் மிகவும் தேர்ச்சி பெற்ற சிற்பி ஒருவன் வாழ்ந்து வந்தான். அனைவரும் அவன் சிலைகள் செய்யும் அழகையும் கை வண்ணத்தையும் போற்றி வந்தனர். அவன் தேவ சிற்பியான மயனாக இருப்பானோ என்று அவ்வூர் மக்கள் சிற்பியைப் புகழ்ந்து வந்தனர். அந்த சிற்பிக்கு ஒரு மகன் இருந்தான்.

ஒருசமயம் தந்தையும் மகனும் சேர்ந்து ஊர் திருவிழாவுக்குச் சென்றனர். அங்கு மகன் காணாமல் போனான். மகனைத் தேடித் தேடி அலைந்த சிற்பி, கால் போன போக்கில் நடந்து கழுகுமலைக்கு வந்தான். சமணத் துறவிகளின் சிலைகள் செதுக்கிக் கொண்டு கழுகுமலையில் தங்கிவிட்டான். பல ஆண்டு காலம் கழித்து மலையின் கீழ்ப் பகுதியில் இருந்து கல் செதுக்கும் ஒலி கேட்டது. அங்கு ஓர் இளம் சிற்பி சிலைகளை செதுக்கிக் கொண்டிருந்தான். மலையின் கீழ்ப்பகுதியில் இருந்து மேலே வந்தவர்கள், பெரிய சிற்பியின் காதுபட, இளம் சிற்பியின் கை வண்ணம் பற்றியும், உயிரோவியமாகக் காட்சியளிக்கும் சிற்பங்கள் குறித்தும் புகழ்ந்தனர்.

அனைவரும் இளம் சிற்பியைப் புகழ்வதைக் கேட்ட பெரிய சிற்பிக்கு, இளம் சிற்பியின் மீது வெறுப்பு உண்டானது. ஏற்கெனவே மகனைத் தொலைத்த வருத்தத்தில் இருந்த பெரிய சிற்பிக்கு அளவு கடந்த கோபம் ஏற்பட்டது. செய்வதறியாது, தன் கையில் இருந்த உளியை எடுத்து, இளம் சிற்பி இருக்கும் திசையை நோக்கி வீசி எறிந்தான்.

உடனே அந்த இளம் சிற்பியிடம் இருந்து ‘அப்பா’ என்ற அலறல் சத்தம் கேட்டது. பெரிய சிற்பி ஓடிச் சென்று பார்த்தபோது, அங்கு இளம் சிற்பி விழுந்து கிடந்தான். இளம் வயதில் காணாமல் போன மகன் அவன் தான் என்பதை அறிந்து பெரிதும் வருந்தினான். சுற்றும் முற்றும் பார்த்தபோது தன்னுடைய மகன் செதுக்கிய சிற்பங்கள் தென்பட்டன. அவற்றைப் பார்த்து மலைத்து நின்றான். மகனின் இழப்பை நினைத்து வருந்தி மனம் போன போக்கில் நடக்கத் தொடங்கினான். இதனால்தான் கழுகுமலை கோயிலும், அதில் உள்ள சிற்பங்களும் முழுமையடையாமல் அறைகுறையாக பாதியில் நிற்கின்றன என்று கர்ண பரம்பரைக் கதைகள் உரைக்கின்றன.

கழுகுமலை, தென்பழநி, கழுகாசலம், உவணகிரி, கஜமுக பர்வதம், சம்பாதி ஷேத்திரம் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் இம்மலை அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகும். சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார், மகாகவி சுப்பிரமணிய பாரதியார், முத்துசுவாமி தீட்சிதர், சிதம்பர கவிராயர் உள்ளிட்டோர் இத்தல முருகப் பெருமானை தரிசனம் செய்துள்ளனர்.

மிளகாய் சித்தர்

பல அதிசயங்கள் நிகழ்த்திய ஸ்ரீ மிளகாய் சித்த பரதேசி சுவாமிகளின் ஜீவசமாதி இங்கு உள்ளது. ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சித்தர் இவ்விடத்தில் சமாதி ஆனார் என்று கூறப்படுகிறது. இந்த சித்தர் இன்றும் இங்கு நடமாடுவதாகவும், கிரிவலம் வருவதாகவும் நம்பப்படுகிறது.

திருமண வரம் கிடைக்க முருகப் பெருமானுக்கு ரோஜா மாலை அணிவித்து, மிளகாய் சித்தர் பீடத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்யப்படுகிறது. குழந்தை வரம் கிட்ட சமாதி பீடத்தில் எலுமிச்சை பழம் வைத்து நைவேத்தியம் செய்து, பின்பு அதை எலுமிச்சை சாதமாக தயாரித்து மிளகாய் வற்றலோடு சேர்த்து உண்ண வேண்டும் என்பது ஐதீகம்.

திருவிழாக்கள்

வைகாசி விசாகம் வசந்தத் திருவிழா (10 நாள்), கந்த சஷ்டி பெருவிழா (13 நாள்), கார்த்திகை தீபத் திருவிழா, தைப்பூசத் திருவிழா (10 நாள்), பங்குனி உத்திர உற்சவம் (13 நாள்) ஆகியவை இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. மற்ற நாட்களிலும் பக்தர்கள் இங்கு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். திருமணத் தடை நீங்க, புத்திர பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க இத்தல முருகப் பெருமான் அருள்பாலிப்பார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in