காக்கும் கார்த்திகைச் செல்வன் - 15

கந்தனின் திருத்தலங்கள் - 7. திருச்செங்கோடு வேலவர் கோயில்
திருச்செங்கோடு வேலவர்
திருச்செங்கோடு வேலவர்

சைவம் போற்றும் 63 அடியார்களுள் ஒருவரான விறன்மிண்ட நாயனாரின் அவதாரத் தலமாகப் போற்றப்படும் திருச்செங்கோடு, பல சிறப்புகளைக் கொண்டது. திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தேவாரத் தலங்களுள் ஒன்றான இத்தலம் கொங்கு நாட்டில் அமைந்துள்ளது. 274 சிவாலயங்கள் வரிசையில் இத்தலம் 208-வது தேவாரத் தலமாகும்.

மூலவர் அர்த்தநாரீஸ்வரர், அம்பாள் பாகம்பிரியாள், செங்கோட்டு வேலவர் (முருகப் பெருமான்) ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் அமைந்துள்ளன. இக்கோயில் அமைந்துள்ள மலை, ஒருபுறம் பார்க்கும்போது ஆணாகவும், வேறு இடத்தில் இருந்து பார்க்குபோது பெண் போலவும் தோற்றம் அளிக்கிறது.

தல வரலாறு

பிருங்கி முனிவர், சிவபெருமானை தரிசிக்க அவ்வப்போது கையிலை மலைக்கு வருவது வழக்கம். அச்சமயங்களில், சிவபெருமானை மட்டுமே வழிபடுவார். அவர் அருகில் இருக்கும் பார்வதி தேவியை வழிபடுவதை தவிர்த்து விடுவார். சிவபெருமானும் பார்வதி தேவியும் அருகருகே அமர்ந்திருந்தாலும், பிருங்கி முனிவர் வண்டு வடிவம் எடுத்து சிவபெருமானை மட்டும் வலம் வருவார். பிருங்கி முனிவரின் இச்செயல் பார்வத் தேவிக்கு கோபத்தை வரவழைத்தது.

கோபத்துடன் பிருங்கி முனிவரை நோக்கிய பார்வதி தேவி, “முனிவரே! சக்தியாகிய என்னை அவமதித்ததால், நீர் சக்தி இழந்து காணப்படுவீர்” என்று சாபமிட்டார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிவபெருமான், “நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லாமல் சிவம் இல்லை” என்று கூறி பார்வதிதேவிக்கு தன் இடப்பாகத்தில் இடம் அளித்தார். அம்மையும் அப்பனும் இணைந்த உருவம் ‘அர்த்தநாரீ’ என்று அழைக்கப்பட்டது. இதே வடிவத்தில் பூவுலகில் பல இடங்களில் சிவபெருமான் கோயில்கொண்டார். திருச்செங்கோடு தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. ஒருவரது இடது பாகத்தில் இதயம் உள்ளது. மனைவி என்பவர் இதயத்தில் இருக்க வேண்டியவர் என்பதை உணர்த்துவதற்காகவே இச்சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

அர்த்தநாரீ

திருச்செங்கோடு

அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலையாகவும், செங்குத்தான மலையாகவும் இருப்பதால் இம்மலை திருச்செங்கோடு என்று அழைக்கப்படுகிறது. மேலும், மலையின் பெயரே ஊருக்கும் நிலைத்துவிட்டது.

ஒருசமயம் ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் வாக்குவாதம் எழுந்தது. அப்போது தங்களில் யார் பெரியவர் என்ற விவாதமும் எழுந்தது. இதற்காக ஒரு பந்தயம் கட்டப்பட்டது. ஆதிசேஷன் மேரு மலையை அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்றும், வாயு பகவான் தன் பலத்தால் மலையை விடுவிக்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் வெற்றி பெறுபவர், பலம் பொருந்தியவர் என்று அறிவிக்கப்படுவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

வாயு பகவான் தன் பலத்தைப் பயன்படுத்தி காற்றை வேகமாக வீச, மலையின் சில பகுதிகள் பறந்து, பூமியின் பல இடங்களில் விழுந்தன. அதில் ஒன்று திருச்செங்கோட்டு மலை. ஆதிசேஷன் மலையைப் பிடித்துக் கொண்டிருக்கும்போது, ஏற்பட்ட காயத்தில் இருந்து குருதி வழிந்து, மலை செந்நிறமானதாக கூறப்படுகிறது. செங்கோடு, உரசகிரி, தெய்வத் திருமலை, நாகமலை, நாககிரி, வாயுமலை என்றும் திருச்செங்கோட்டு மலை அழைக்கப்படுகிறது.

கோயில் சிறப்பு

திருச்செங்கோடு மலையே லிங்கமாக கருதப்படுவதால், மலைக்கு எதிரே பெரிய நந்தி உள்ளது. இம்மலையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஆதிகேசவப் பெருமாள், செங்கோட்டு வேலவர் எழுந்தருளியுள்ளனர்.

பௌர்ணமி தினத்தில் இம்மலையை வலம் வந்தால் கயிலாயம் மற்றும் வைகுண்டத்தை வலம் வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். தம்பதிகள் ஒற்றுமைக்காக இத்தலத்தில் கேதார கௌரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் தொடங்கி 21 நாட்களுக்கு இந்த விரதம் மேற்கொள்ளப்படும். கேதார கௌரி, இங்குள்ள மரகத லிங்கத்தை வழிபட்டு, சிவபெருமானின் இடது பாகத்தைப் பெற்றதாக கூறப்படுகிறது.

திருஞானசம்பந்தர், தனது கொங்கு நாட்டு தல யாத்திரையில், முதலில் இத்தலத்தை தரிசித்துவிட்டு பல தலங்களை தரிசிக்கச் சென்றார். மீண்டும் இத்தலத்துக்கு வந்தபோது, அவருடன் வந்த அடியார்களுக்கு ‘நளிர்சுரம்’ வந்து அவதிப்பட்டனர். உடனே திருஞானசம்பந்தர் ‘அவ்வினைக் கிவ்வினை’ என்ற பதிகத்தைப் பாடினார். ‘தீவினை வந்து எம்மைத் தீண்டப் பெற திருநீலகண்டம்’ என்று சிவபெருமானை வழிபட்டு, அனைவரது பிணியையும் தீர்த்தார் என்று பெரிய புராண வரலாறு உரைக்கிறது.

நாக சிலை

திருச்செங்கோடு கோயில் படிக்கட்டு அருகே 60 அடி நீளத்தில் 5 தலை நாகத்தின் சிலை அமைந்துள்ளது. நாகத்தின் அருகே அமைந்துள்ள 60 படிக்கட்டுகள் சத்தியப்படிக்கட்டு என்று அழைக்கப்படுகிறது. இந்தப் படியில் பல வழக்குகளுக்கு தீர்வு காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த படிக்கட்டுகளில் நின்று சத்தியம் செய்தால், அது நீதிமன்றத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நிலை ஒருகாலத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. ராகு தோஷம், காலசர்ப்ப தோஷம், களத்திர தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாக சிலைக்கு வழிபாடு செய்வது வழக்கம்.

திருச்செங்கோட்டு வேலவர்

திருச்செங்கோடு மாநகரின் பெருமையை உலகறியச் செய்வதற்காக, திருச்செங்கோட்டு வேலவர் திருவிளையாடல் புரிந்ததாகக் கூறப்படுகிறது. இத்தலத்தில் தனி சந்நிதியில் அருள்பாலிக்கும் திருச்செங்கோட்டு வேலவர் மீது தீராத பக்தி கொண்டு, குணசீலர் என்ற புலவர் வாழ்ந்து வந்தார். பல தலங்களை தரிசித்துவிட்டு, இத்தலத்துக்கு பாண்டிப் புலவரேறு என்ற அறிஞர் வந்தார். பல தலங்களிலும், பல புலவர்களுடன் வாதப் போர் செய்து வெற்றி பெற்ற நிலையில்தான் பாண்டிப் புலவரேறு இத்தலத்துக்கு வந்துள்ளார். கல்வியில் இமயம் என்று புகழப்படும் அப்புலவர் குறித்து குணசீலரும் அறிந்துள்ளார்.

ஒருநாள் குணசீலரும் பாண்டிப் புலவரேறுவும் சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர்களுக்குள் எழுந்த வாதம், தீர்க்கப்படாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து, மறுநாளும் குணசீலரைப் போட்டிக்கு அழைத்தார் பாண்டிப் புலவரேறு. ‘இது என்ன சோதனை?’ என்று நினைத்த குணசீலர், தனக்கு உதவி புரியும்படி முருகப் பெருமானை வேண்டினார்.

மறுநாள் காலை, போட்டிக்காக பாண்டிப் புலவரேறு மலையின் மீது ஏறிக் கொண்டிருந்தார். நாகமலை என்று அழைக்கப்படுவதால், ஏன் இந்த மலை படம் எடுத்து ஆடவில்லை என்ற பொருள் வருமாறு, பாடிக் கொண்டே மலை ஏறினார். ‘சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்ப சைலம் எனில் அமரிற்படம் விரித்து ஆடாததென்னே?’ என்று பாடலைத் தொடங்கிவிட்ட பாண்டிப் புலவரேறுவால், பாடலை நிறைவு செய்ய இயலவில்லை. அடுத்த பாடல்வரியைப் பாட முயற்சித்தும், அவருக்கு ஏதும் வார்த்தைகள் கிடைக்கவில்லை.

அப்போது அவர் இருந்த இடத்துக்கு அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன், ‘அது, குமரன் திருமருகன் முருகன் மயில் வாகனம் கொத்தும் என்றே’ என்று பாடி அப்பாடல் வரியை நிறைவு செய்தான். ஆடு மேய்க்கும் சிறுவனுக்கு இத்தனை அறிவா என்று வியந்த பாண்டிப் புலவரேறு, அவனைப் பற்றி கேட்டார். உடனே அச்சிறுவன், தான் குணசீலரின் கடை மாணாக்கன் என்று பதிலளித்தான்.

தன் முன்னர் நின்று கொண்டிருப்பது முருகப் பெருமான் என்பதை உணர்ந்த பாண்டிப் புலவரேறு, முருகனின் அருள் பெற்ற குணசீலரை எதிர்ப்பது நல்லதல்ல என்ற முடிவுக்கு வருகிறார். குணசீலரிடம் மன்னிப்புக் கோரிய பாண்டிப் புலவரேறு, செங்கோட்டு வேலவரை வணங்கி விடைபெற்றார்.

மலை அடிவாரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில் இன்றும் வைகாசிப் பெருவிழாவில் இச்சம்பவம் நடைபெறுவது வழக்கம். குணசீலர் தன்னைக் காக்கும்படி செங்கோட்டு வேலவரை வேண்டியதும், உடனே ‘யாமிருக்க பயமேன்’ என்று வேலவர் கூறியதாக அறியப்படுகிறது. அந்த வார்த்தை உண்மையான ஒன்று என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

முருகன் தலம்

சிவத்தலமாக இருந்தாலும், திருச்செங்கோடு முருகப் பெருமானுக்கு உகந்த தலமாகக் கருதப்படுகிறது. இத்தலத்தை அடைய 1,200 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். ஓரிடத்தில் நீளமான (20 அடி) பாம்பு வடிவத்திலேயே ஏறும்வழி அமைந்துள்ளது. இத்தலம் பற்றிய குறிப்புகள், சிலப்பதிகாரம், தேவாரம், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம், திருப்புகழ் ஆகியவற்றில் காணப்படுகின்றன.

வடக்கு வாசல் ராஜ கோபுரம் 84.5 அடி உயரத்துடன் 5 நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் அர்த்தநாரீஸ்வரர் சந்நிதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. சந்நிதிக்கு முன் வாயில் இல்லை. மாறாக 9 துவாரங்கள் கொண்ட கல்லால் ஆன பலகணி (சாளரம்) உள்ளது. முன்மண்டபத்தில் ஆமை மண்டபம் உள்ளது. அனைத்து தூண்கள், மண்டபச் சுவர்களில் சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. இக்கோயிலில் செங்கோட்டு வேலவர் சந்நிதி, நாரிகணபதி சந்நிதி, நாகேஸ்வரர் சந்நிதி, திருமகள், நிலமகள் உடனுறை ஆதிகேசவப் பெருமாள் சந்நிதிகளும் காணப்படுகின்றன.

திருவிழாக்கள்

சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மாசி மகம், பங்குனி உத்திர தினங்களை ஒட்டி இத்தலத்தில் திருவிழாக்கள் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக் கடன் செலுத்தி, அர்த்தநாரீஸ்வரரையும், செங்கோட்டு வேலவரையும் தரிசனம் செய்வதுண்டு. தம்பதி ஒற்றுமை ஓங்கவும், நாக தோஷம், ராகு தோஷம், காள சர்ப்ப தோஷம், களத்திர தோஷங்கள் நீங்கவும் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in