காக்கும் கார்த்திகைச் செல்வன் - 14

கந்தனின் திருத்தலங்கள்: 6 - கைத்தமலை வேலாயுத சுவாமி கோயில்
கைத்தமலை வேலாயுத சுவாமி
கைத்தமலை வேலாயுத சுவாமி

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் அமைந்துள்ள கைத்தமலை கதிர்த்தமலை என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள வேலாயுத சுவாமி கோயிலில் முருகப் பெருமான் தனி சந்நிதியிலும், வள்ளி, தெய்வானை தனி சந்நிதியிலும் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. திருப்பூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

தல வரலாறு

கந்தன் மீது மிகுந்த பக்தி கொண்ட அகத்திய முனிவர், அவர் குடி கொண்ட தலங்களுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருடன் நாரதரும், பிற தேவர்களும் செல்வது வழக்கம். அப்படி ஒருசமயம், கந்தனை தரிசிக்கச் செல்லும்போது, தாம் இருக்கும் இடத்தில் கந்தனுக்கு பூஜைகள் செய்து கொண்டிருந்தார். அப்போது நைவேத்தியம் செய்ய நீரின்றி தவித்தார். மேலும், அதிக தாகம் எடுத்ததால், மிகுந்த சிரமத்துக்கு ஆளானார் அகத்தியர். தன்னை அச்சூழலில் இருந்து காக்குமாறும் முருகப் பெருமானை வேண்டினார்.

உடனே முருகப் பெருமான் அங்கு தோன்றி, தனது வேலை தரையில் குத்தி ஓர் ஊற்றை ஏற்படுத்தினார். அதிலிருந்து நீர் பெருக்கெடுத்து ஓடியது. அகத்திய முனிவர் மகிழ்ச்சி அடைந்து தனது பூஜைகளை முடித்தார்; தாகத்தையும் தீர்த்துக் கொண்டார். முருகப் பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட ஊற்று இன்று வரை கைத்தமலை வேலாயுத சாமி கோயிலில் வற்றாமல் நீரைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. குழியில் இருந்து தோன்றியதால் ‘ஊத்துக்குளி’ என்று அப்பகுதியே அழைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முருகப் பெருமானுக்கு கோயில் கட்டப்பட்டது.

சுவாமி தனித்து அருள்புரிதல்

‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்’ என்பதற்கு ஏற்ப இத்தலத்தில் முருகப் பெருமான் அருள்பாலித்து வருகிறார். அருணகிரி நாதரால் பாடப்பெற்ற இத்தலம், அகத்திய முனிவர் பூஜித்த தலம் என்ற பெருமையையும் பெறுகிறது. சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்கும் இத்தலத்தில் வள்ளி, தெய்வானை இல்லாமல் வேலாயுத சுவாமி தனியாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

சூரபத்மனை வதம் செய்த பின்னர் முருகப் பெருமான் சற்று கோபத்துடன் இருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக கோபம் தணிந்தது. அவரை விரும்பிய பெண்கள் இத்தலத்துக்கு வந்து, தங்களை மணக்குமாறு முருகப் பெருமானை வேண்டினர். அவர்களின் முற்பிறவி விருப்பப்படி முருகப் பெருமானை மணப்பதற்காக இந்திரனின் மகள் தெய்வானையாகவும், நம்பிராஜனின் வளர்ப்பு மகள் வள்ளியாகவும் அவதரித்தனர். திருமணத்துக்கு முன்னர் இருக்கும் நிலை என்பதால், வள்ளியும் தெய்வானையும் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

ஞான சக்தி பெற்றவர்

மூன்று பெரும் சக்திகளாக இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவை கூறப்படுகின்றன. முருகப் பெருமானுக்கு வள்ளி இச்சா சக்தியாகவும், தெய்வானை கிரியா சக்தியாகவும், வேல் ஞான சக்தியாகவும் போற்றப்படுவது வழக்கம். இந்த சக்திகள் விருப்பம், செயல், அறிவு ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன.

பெரும்பாலான முருகன் தலங்களில் அவருக்கு இரு புறங்களிலும் இச்சா சக்தியும், கிரியா சக்தியும் இருப்பது வழக்கம். ஞான சக்தியான வேல் மட்டும் அவரது மார்பின் மீது வைக்கப்படும். எனவே, ஞான சக்தி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இச்சையும் கிரியையும் இருந்தால் மட்டுமே ஞானம் பெற முடியும் என்று கூறப்படும் நிலையில், இத்தலத்தில் மட்டும் இச்சையும் கிரியையும் இல்லாமலேயே ஞான சக்தி என்ற அபூர்வ சக்தியைப் பெற்றவராக முருகப் பெருமான் வழிபடப்படுகிறார்.

மயூரகிரி

கதித்த என்பதற்கு எழுதல், நற்கதி பெறுதல், மிகுதல், கனமான, உயர்ந்த, கோபித்த என்று பொருள் கொள்ளலாம். முருகன் தனது பெற்றோரான சிவன் - பார்வதி தேவியிடம் கோபித்துக் கொண்டு இந்த மலைக்கு வந்ததால் இம்மலை கோபித்த மலை என்றும் கதித்த மலை என்றும் அழைக்கப்படுகிறது. மயில் வடிவில் இருப்பதால் ’மயூரகிரி’ என்ற பெயரும் இம்மலைக்குக் கிட்டியது. மயூரகிரி சித்தர் இங்கு சமாதி அடைந்துள்ளார்.

கோயில் அமைப்பும் சிறப்பும்

கதித்தமலை ‘கதிர்த்தமலை’ என்று சொல்லப்படுகிறது. கதிர்த்த என்ற சொல், ‘பிரகாசித்தல், ஒளிவிடுதல்’ என பொருள் தருகிறது. பொதுவாக, மலைக் கோயில்களில், மலைக்கு கீழேதான் தேர் வலம் வருவது வழக்கம். ஆனால், இக்கோயிலில் மரச் சிற்பத்தான் செய்யப்பட்ட தேர், மலைமீது அமைந்துள்ள கோயிலைச் சுற்றி வலம் வருவது தனிச்சிறப்பு.

இக்கோயில் மூலவர் சந்நிதியின் பின்புறம் வள்ளி, தெய்வானை சந்நிதிகள் உள்ளன. பாலை மரத்தடியில் காவல் தெய்வமான சுக்குமலை ஆண்டவர் எழுந்தருளியுள்ளார். குழந்தைப் பேறு கிட்டவும், குழந்தைகளுக்கு ஏற்பட்ட கக்குவான் நோயை தீர்க்கவும் சுக்குமலை ஆண்டவருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

திருமணத் தடை நீக்கும் கோயிலாக இத்தலம் விளங்குவதால், தோஷம் உள்ளவர்கள் இத்தலத்துக்கு வந்து மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை முதலானவற்றை வைத்து வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

குன்றின் மீது 5 நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலுக்குச் செல்ல அகலமான படிக்கட்டுகள் உள்ளன. ராஜகோபுரத்தின் முன்னர் தீப ஸ்தம்பம் உள்ளது. பிரகாரத்தில் இடும்பனுக்கு தனி சந்நிதி உள்ளது. முருகப் பெருமானின் கண தலைவராக இடும்பன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முருகன் கோயிலுக்கு கீழே தென்கிழக்கு பகுதியில் பாம்புப் புற்று அமைந்துள்ளது. இது மயூரகிரி சித்தரின் சமாதியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அமாவாசை தினங்களில் இந்தப் புற்றுக்குச் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இந்தப் புற்றை பக்தர்கள் ‘சுப்பராயர்’ என்று அழைக்கின்றனர்.

தைப்பூசத் தேரோட்டம்

ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோயிலின் தைப்பூசத் தேரோட்டம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 12 நாள் விழாவாகக் கொண்டாடப்படும் தைப்பூச விழாவில் தைப்பூசத்தன்று தேர்த் திருவிழா நடைபெறும். தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். அதற்கு முதல்நாள் காலையில் கணபதி ஹோமம், மாலையில் கிராம சாந்தி நடைபெறும். கோடியேற்ற தினத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.

ஊத்துக்குளியில் உள்ள கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என 4 ரத வீதிகளின் வழியாக சுவாமி தினமும் வீதியுலா வருவார். திருவிழாவின் 5-ம் நாளில் மயில் வாகன காட்சி திருவீதியுலா நடைபெறும். 8-ம் நாளில் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். தைப்பூச தினத்தில் காலை 3 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சுவாமி புறப்பாடு, தேரில் எழுந்தருளல், திருத்தேரோட்டம், மாலையில் திருத்தேர் நிலை சேர்த்தல் (கீழ்த் தேரோட்டம்) ஆகியவை நடைபெறும்.

10-ம் நாள் வைபவத்தில் பரிவேட்டை நடைபெறும். 11-ம் நாள் விழாவில் காலையில் கதித்தமலை ஆண்டவருக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை, கதித்தமலையாண்டவர், குழந்தை வேலாயுதசுவாமி தேரில் எழுந்தருள்தல், மலை தேர்வடம் பிடித்தல் (மேல் தேரோட்டம்) நடைபெறும். தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நிலைக்கு கொண்டு செல்வர். இரவு 8 மணி அளவில் மகா தரிசனம். சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை பல்லக்கில் எழுந்தருளி திருவீதியுலா நடைபெறும். 11-ம் நாள் இரவு கைலாச நாதர் கோயில் முன்புறம் அமைந்துள்ள தெப்பத்தில் சுவாமி எழுந்தருளல் நடைபெறும். மஞ்சள் நீராட்டு விழாவுடன் தைப்பூசத் திருவிழா நிறைவுபெறும்.

தமிழகத்தில் மலை மீது மரச் சிற்பங்களால் ஆன தேரோட்டம் நிகழ்வது ஊத்துக்குளி கதித்தமலையில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

திருவிழாக்கள்

தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி விழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதற்காக, பக்தர்கள் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கின்றனர். மேலும், வழக்கமான மொட்டை போடுதல், காவடி எடுத்தல், பால் குடம் எடுத்தல் ஆகியவற்றையும் பக்தர்கள் செய்து பிரார்த்தனைகளை நிறைவு செய்கின்றனர்.

மாதந்தோறும் சஷ்டி, கிருத்திகை நாட்கள், செவ்வாய்க் கிழமைகள், அமாவாசை, பௌர்ணமி, தை மாதப்பிறப்பு நாட்களில் இக்கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். பக்தர்கள் ஒன்று கூடி திருப்புகழ் பாடி வழிபாடு செய்வதும் உண்டு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in