இந்து கோயில்களை தமிழக அரசு ஆக்கிரமித்துள்ளதாக பிரதமர் சொல்வது உண்மை: பொன்.மாணிக்கவேல் பரபரப்பு!

பொன் மாணிக்கவேல்
பொன் மாணிக்கவேல்

இந்து கோவில் சொத்துகள் தமிழ்நாடு அரசால் அபகரிக்கப்படுவதாக பிரதமர் மோடி சொல்வது உண்மை, நான் சத்தியம் கூட செய்கிறேன். முதல்வர் ஸ்டாலின் சொல்வது பச்சைப் பொய் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் சமீபத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தென் மாநிலங்களில் இந்து கோயில்களை மாநில அரசாங்கம் வலுக்கட்டாயமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளது என்றும், கோயில் சொத்துகளையும், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறது என்றும் பேசினார் மோடி.

மேலும், இந்து கோவில்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாநில அரசு, சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் மீது கை வைப்பதில்லை. அவற்றின் கட்டுப்பாட்டை தன்வசம் எடுத்துக்கொள்வதில்லை. சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் அனைத்தையும் தெற்கில் உங்கள் கூட்டாளிகள் கைப்பற்றுவார்களா? என காங்கிரஸ் கட்சிக்கு கேள்வி எழுப்பினார் பிரதமர் மோடி. பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு பெரும் விவாதங்களைக் கிளப்பியது.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று சென்னையில் நடைபெற்ற வள்ளலார் 200 நிறைவு விழாவில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு சரமாரியாக பதிலடி கொடுத்தார். கோவில் சொத்துகள் மற்றும் வருமானங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்று பகிரங்கமாக பிரதமர் மோடி கூறியிருக்கும் குற்றச்சாட்டை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன் எனத் தெரிவித்தார் ஸ்டாலின்.

மேலும், பிரதமர் பார்வையில் தான் தவறு இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் 1,000 கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தி இருக்கிறோம். இது தவறா? வரலாற்று சிறப்புமிக்க 112 கோயில்களை சீர்செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்தது தவறா? 2 ஆண்டுகளில் ரூ.350 கோடி மதிப்பிலான கோயில்கள் மீட்கப்பட்டுள்ளன. பொறுப்பு வாய்ந்த இந்திய நாட்டின் பிரதமர் தவறான, அவதூறு செய்தியை சொல்வது சரியா?" என சரமாரியாக கேள்வி எழுப்பினார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் இன்று திருப்பூர் அருகே உள்ள சுக்ரீஸ்வரர் கோவில் சாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களை தமிழக அரசு ஆக்கிரமித்து வைத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியது நூற்றுக்கு 2 லட்சம் சதவீதம் உண்மை. முதல்வர் ஸ்டாலின் சொல்வது பச்சைப் பொய்.

இப்போது நான் சிவன் கோவில் முன்பாக நின்று பேசிக்கொண்டிருக்கிறேன். சத்தியம் கூட செய்கிறேன். நான் கூறுவது பொய்யாக இருந்தால் இன்று இரவே நான் இறந்து போய்விய்டுவேன். என்ன அநியாயம் இது? திமுக என்கிற குடும்பம்தான், இங்கு எல்லா சொத்துகளையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பிரதமர் மோடி சொல்றது பொய் என ஸ்டாலின் சொல்லியிருக்கிறர். சும்மா வாய் வார்த்தையாக எல்லாம் பேசக்கூடாது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

நான் ஆதாரத்தை எடுத்து வருகிறேன். பிரதமர் மோடி கூறியது பொய் என்று நிரூபிக்க ஸ்டாலின் என்னுடன் விவாதிக்கத் தயாரா? நான் சொல்வது பொய்யாக இருந்தால் என்னை தமிழ்நாட்டை விட்டே வெளியே அனுப்பிவிடுங்கள். நான் பச்சையாக கேட்கிறேன். உங்க அப்பா, தாத்தாவா கோயில்களை கட்டினார்கள்? இல்லை திராவிட மாடல் கட்டியதா?

கோவில் சொத்துகளை சூறையாடுவது தமிழ்நாடு அரசு தான். திருப்பூர் கலெக்டர் அலுவலகமும், நீதிமன்றமும் அமைந்துள்ள இடமே கோவிலுக்கு சொந்தமானது தான். பிரதமர் கூறியது எல்லாம் உண்மை. பணியில் இருந்தபோதும் கடுமையாக உழைத்தேன். இப்போதும் உழைக்கிறேன். கோவில் சொத்துகளை பாதுகாப்பதற்காக என்னை யாராலும் தடுக்க முடியாது." என ஆவேசமாக பேசியுள்ளார்

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... துப்பாக்கியால் சுட்டு ஆசிரியரை பதற வைத்த மாணவர்கள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

டெம்போவில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள்

விசித்ரா கூட ஒரே பெட்ல படுக்கணும்... பிரதீப் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!

கவின் திருமணம் குறித்து முதல்முறையாக மனம் திறந்த லாஸ்லியா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in