கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தை புனரமைக்க நிதி#TNBudget2022

கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தை புனரமைக்க நிதி#TNBudget2022

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கேட்டவரம் தரும் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தை புனரமைக்க தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துவருகிறார். அதில் வரலாற்றுச்சிறப்புக்க சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்களை பழமை மாறாமல் புனரமைக்க 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறு புனித சவேரியார் ஆலயத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. சவேரியார் ஆலய விழாவுக்கு குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு சவேரியார் ஆலயத் தேர்பவனியின் போது இந்துக்களும் உப்பு வாங்கிப் போடும் பழக்கமும், தங்கள் குழந்தைகளை தூய சவேரியார் அருகே வைத்து எடுக்கும் வழக்கமும் தொடர்ந்து நடந்துவருகிறது. ஒருவகையில் குமரி மாவட்டத்தில் மதநல்லிணக்கத்தின் ஆணிவேர்களில் ஒன்றாகவும் சவேரியார் ஆலயத் திருவிழா நடந்து வருகிறது.

தூய சவேரியார் ஆலயம் தொன்மையான வரலாற்றுப் பின்னணியும் கொண்டது. குமரியில் சவேரியார் காலத்திற்கும் முன்பே தோமையாரால் கிறிஸ்தவர்கள் இருந்தனர். ஆனாலும் அவர்கள் மறைகல்வி பற்றி அறிந்திருக்கவில்லை. அவர்களுக்கு ஜெபம் செய்ய கோட்டாறு பகுதிக்கு அடிக்கடி வருவார் சவேரியார். அதேநேரத்தில் மதுரை மன்னர் ஒருவர், திருவிதாங்கூர் மன்னர் மீது படையெடுத்து வந்தார். அதை தடுத்து நிறுத்திய சவேரியாருக்கு இப்போதுள்ள பிரதான ஆலயத்தின் அருகில் ஆலயம் கட்ட திருவிதாங்கூர் மன்னர் இடம்கொடுத்தார். அதில் ஆலயம் கட்டிய சவேரியார் அவரே திருப்பலியும் செய்துவந்தார்.

கிபி 1542 முதல் 1552 வரை இங்கே மறைபணியாற்றிய சவேரியார், பின்னர் சீனாவில் இறந்தார். அவரது நினைவாகவே இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. மூவொரு இறைவன் ஆலயமாக எழுப்பபட்ட இந்த ஆலயம் 1605-ம் ஆண்டு சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தூய சவேரியார் மற்றும் தூய இஞ்ஞாசியர் திருப்பாண்டங்களும் இந்த ஆலயத்தில் உள்ளது. 1622-ம் ஆண்டு சவேரியார், புனிதராக பிரகடனப்படுத்தப்பட்டார்.

தூய சவேரியார் ஆலயத்திற்கு பழமை மாறாமல் புதுப்பிக்க நிதி ஒதுக்கி இருப்பது குமரிமாவட்ட கிறிஸ்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in