பக்தி

பக்தி

சூர்தாசருக்கு பிறந்ததில் இருந்தே கண் பார்வை இல்லை. இதைக் காரணம் காட்டி குடும்பத்தினர் அவரை ஒதுக்கி வந்தனர். ஒரு சமயம் அவர் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தபோது, சிலர் கிருஷ்ண கானம் பாடிக் கொண்டு சென்றனர். பாடல்களால் ஈர்க்கப்பட்ட சூர்தாசர், ஒருவரை அழைத்து இப்பாடல்கள் யார் மீது பாடப்பட்டது என்று வினவினார்.

இவை கிருஷ்ணரைப் போற்றி பாடப்படும் பாடல்கள் என்று அந்த நபர் கூறியதைக் கேட்டதும், அவர் எப்படி இருப்பார் என்று ஆர்வத்துடன் கேட்டார்.

அந்த நபரும், கிருஷ்ணர் கருமை நிறத்தவர், குழல் வைத்திருப்பார். அவரது வேணுகானத்தைக் கேட்டு உலகமே சொக்கிப் போகும் என்று கூறினார்.

இதைக் கேட்ட சூர்தாசர், கிருஷ்ணரை மனதில் பதித்துக் கொண்டார். அவரது உருவத்தை நினைத்தபடி, ஆற்றங்கரையில் அமர்ந்து பல பாடல்கள் பாடினார்.

அன்று முதல் சூர்தாசரின் பாடல்களைக் கேட்க மக்கள் வந்தனர். வந்தவர்களில் சிலர் சூர்தாசரின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி வந்தனர்.

ஒருசமயம் துளசிதாசர், சூர்தாசர் பாடிக் கொண்டிருக்கும்போது அந்த வழியாகச் சென்றார். சூர்தாசரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட துளசிதாசர், இனி இருவரும் சேர்ந்து கண்ணனைப் போற்றி மகிழ்வோம் என்கிறார்.

தினமும் இருவரும் கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்று பல பாடல்களைப் பாடி வந்தனர். அப்படி ஒருநாள் இருவரும் கோயிலுக்குச் செல்லும்போது, மத யானை தங்களைத் துரத்துவதாக மக்கள் தலை தெறிக்க ஓடி வந்தனர்.

பாதுகாப்பாக இருக்கவும் என்று கூறிவிட்டு அவர்கள் சென்றனர். துளசிதாசர், சூர்தாசரைப் பார்த்து, கண்ணன் நம்முள் இருப்பதால் நமக்கொன்றும் கவலை இல்லை என்று கூறி, கண்ணனை நினைத்து தியானம் செய்கிறார்.

துளசிதாசர் அருகே வந்த யானை, துளசிதாசரை வணங்கிவிட்டுச் சென்றது. வியப்பில் ஆழ்ந்த மக்கள், யானை சென்றதும் அவரிடம் வந்து நடந்தவற்றைக் கூறினர். துளசிதாசர் மகிழ்ச்சி அடைந்தார். அவரது கண்கள் சூர்தாசரைத் தேடின.

ஓர் ஓரமாக, தன் கைகளை நெஞ்சில் வைத்தபடி, சூர்தாசர் நிற்பதைக் காண்கிறார்.

சூர்தாசரை அழைத்து, “ஏன் ஓரமாக நடுங்கிக் கொண்டு நிற்கிறீர்கள்? நீங்களும் கிருஷ்ண பக்தர்தானே.. யானை உங்களை என்ன செய்துவிடும்?” என்று கேட்டார் துளசிதாசர்.

அதற்கு சூர்தாசர், “உங்கள் கண்ணன் பெரியவன். யானையை விரட்டி விடுவான். ஆனால் என் கண்ணன் சிறிய பாலகன். அவனை நினைத்துத்தான் பல பாடல்கள் பாடினேன். அவனை யானை ஏதாவது செய்துவிடும் என்பதால் என் ரெண்டு கைகளால் அவனை மறைத்து வைத்திருந்தேன்” என்றார்.

சூர்தாசரின் பக்தியைக் கண்டு துளசிதாசர், மகிழ்ச்சி அடைந்து, “இனி எந்தப் பிறவியிலும் நாம் இருவரும் நண்பர்களாகவே இருக்க வேண்டும்” என்றார்.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in