அயோத்தி ராமரை பொதுமக்கள் எப்போது முதல் தரிசிக்கலாம்? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்

அயோத்தி ராமர் கோயிலில் ஜன 22 ம் தேதியன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பக்தர்கள், பொதுமக்கள் ராமரை தரிசிக்க ஜனவரி 25 ம் தேதி முதல் வரலாம் என அயோத்தி ராமஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராமர் கோயில் திறக்கப்படுவதையொட்டி அயோத்தியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன. கோயில் திறப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டதாக கோட்ட ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் 'பிரான் பிரதிஷ்டை'க்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் குறித்து, கோட்ட ஆணையர் கவுரவ் தயாள் செய்தியாளர்களிடம் பேசினார். 

"கும்பாபிஷேகம் மற்றும் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை ஆகியவற்றிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன, கோயிலுக்குள் விழாவிற்கான இருக்கை திட்டத்தை இறுதி செய்து வருகிறோம். மொத்தம் 7500 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். யார் எங்கு அமர வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டு வருகிறது. வாகனங்களைப் பயன்படுத்தி மைதானத்திற்குள் விஐபிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் திறப்பு விழாவின் போது, குழந்தை ராமர் சிலையை தற்காலிக இடத்தில் இருந்து புதிய கோயிலுக்கு பிரதமர் மோடி சுமந்து செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 22ம் தேதி மதியம் 2 மணி வரை கோவில் வளாகத்தில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அயோத்தி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு கோவில் கதவுகள் மூடப்படும். அன்றைய தினம் குழந்தை ராமரை யாரும் தரிசிக்க முடியாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஜனவரி 20 ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு குழந்தை ராமரை தரிசனம் செய்ய சாதாரண மக்கள் மட்டுமின்றி விஐபிகளும் கூட தரிசிக்க முடியாது. ஜனவரி 22 ம் தேதி கும்பாபிஷேக நாளில் சிறப்பு விருந்தினர்களாக அழைப்பட்டவர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.

கும்பாபிஷேகத்திற்குப் பிறகு, ஜனவரி 24 முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை சடங்குகள் மரபுகளின்படி நடைபெறும். ஜனவரி 23 ம் தேதி முதல் கோயில் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்படும் அதேசமயம், 24ஆம் தேதி வரை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும் என்பதால் ஜனவரி 25ஆம் தேதி முதல் கோயில் கதவுகள் பொதுமக்கள் தரிசனத்துக்காக திறக்கப்படும் என  ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in