'என் கையால அவிய்ங்களுக்கு துன்னூரு தர மாட்டேன்'
ஆ.கொக்குளம் கருப்பசாமி கோயில்

'என் கையால அவிய்ங்களுக்கு துன்னூரு தர மாட்டேன்'

ஆ.கொக்குளம் பூசாரியைக் கைது செய்யக் கோரி பட்டியலின மக்கள் மனு

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே உள்ள ஆ.கொக்குளம் கிராமத்தில் புகழ்பெற்ற பேக்காமன் கருப்பசாமி கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலில் 21 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழாவும் உசிலம்பட்டி வட்டாரத்தில் பிரபலம். இந்தக் கோயிலில் பட்டியலின மக்கள் வழிபட, அங்கு பெரும்பான்மையாக வாழும் பிரமலைக் கள்ளர் சமூகத்தினர் தடை ஏற்படுத்தி வருவதாகப் பிரச்சினை எழுந்தது. இதுதொடர்பாக ஒரு பக்கம் போராட்டமும், இன்னொரு பக்கம் சட்டப் போராட்டமும் நடத்தினார்கள் பட்டியலின மக்கள்.

இந்தக் கோயிலின் புரவியெடுப்பு, பன்றி குத்து உள்ளிட்ட நிகழ்வுகளில் பட்டியலினத்தினர் பங்கெடுத்தாலும், அங்கு தங்கள் சமூகத்தினர் பூசாரியாகவே இருந்தாலும், கோயிலுக்குள் சென்று வழிபட மட்டும் எங்களை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று அச்சமூகத்தினர் முறையிட்டனர். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க அறநிலையத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டது.

‘இது தனிப்பட்ட யாருக்கும் சொந்தமான கோயில் அல்ல என்பதால், அனைத்து சாதியினரும் வழிபட உரிமை உண்டு’ என்ற அதிகாரிகளின் சமரசத்தை, பிரமலைக் கள்ளர் சமூகத்தில் ஒரு பகுதியினர் ஏற்காததால் பிரச்சினை உருவானது. பல்வேறு கட்ட சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கடந்த ஜூலை 30-ம் தேதி போலீஸ் பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் கோயிலில் வழிபாடு நடத்தினார்கள்.

போராட்டம் நடத்திய பிரமலைக் கள்ளர் சமூகத்தினர்
போராட்டம் நடத்திய பிரமலைக் கள்ளர் சமூகத்தினர்

அதன் பிறகு பிரச்சினை வேறு மாதிரி வெடித்தது. "நாங்கள் இந்துக்கள் அல்ல. குலதெய்வ வழிபாடு செய்யும் பிரிவினர். எனவே, எங்கள் கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும், அந்தக் கோயிலுக்கும் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த வட்டாரக் கோயில்களுக்கும் கிராமத்தின் பெயரிலேயே பட்டா வழங்க வேண்டும்" என்றும் கோரி போராட்டம் நடத்தினார்கள் பிரமலைக் கள்ளர் சமூகத்தினர். அந்தக் கோயிலில் பூசாரியாக இருக்கிற பட்டியலின பூசாரியும் கூட, பிரமலைக் கள்ளர் சமூகத்தினருக்கு ஆதரவாகப் போராட்டத்தில் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆ.கொக்குளம் கருப்பசாமி கோயில்
ஆ.கொக்குளம் கருப்பசாமி கோயில்

இந்தச் சூழலில் பட்டியலின மக்கள் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து ஒரு மனு அளித்துள்ளனர். அதில், "ஆ.கொக்குளம் கோயில் பூசாரி க.முத்தையா சமீபத்தில் பிபிசிக்கு அளித்த பேட்டியில், ‘நான் எனது கையால் அவிய்ங்களுக்கு (பட்டியலின மக்களுக்கு) துன்னூரு (விபூதி) தர மாட்டேன்’ என்று கூறியிருக்கிறார். இப்படி பூசாரியே ஒரு தரப்பினருக்கு ஆதரவாகச் செயல்படுவதுடன், இன்னொரு தரப்பினரை அவமதிப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. எனவே, தற்போதைய பூசாரியை மாற்றிவிட்டு புதிய பூசாரியை அரசே நியமிக்க வேண்டும். ஆ.கொக்குளம் கோயிலுக்கென அறநிலையத் துறை சார்பில் தனி அதிகாரியை நியமிப்பதுடன், ஏற்கெனவே அறநிலையத் துறை பட்டியலில் உள்ள ஆ.கொக்குளம் மூலக்கரை முத்தையா கோயில், வடக்குவாச் செல்லியம்மன் கோயில், மந்தையம்மன் கோயில், அய்யனார் கோயில், செக்கானூரணி விநாயகர் கோயில் ஆகியவற்றையும் அவற்றின் சொத்துக்களையும் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். அரசுக்குச் சொந்தமான, அனைவரும் வழிபடும் நிலையில் உள்ள ஆ.கொக்குளம் கருப்பசாமி கோயிலை கைப்பற்றும் பொருட்டு சாதி வெறியைத் தூண்டும்விதமாக நடந்துகொள்ளும் ‘கிராமக் கோயில்கள் பூசாரிகள் சங்கம்’ என்ற ஆர்.எஸ்.எஸ். பரிவார அமைப்பைத் தடை செய்ய வேண்டும். அரசுக்கு எதிராகப் போராடும் பூசாரிகளையும் கைது செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் விரைவில் விசாரணையை மேற்கொள்ளும் என்று கூறப்படுவதால், மீண்டும் ஆ.கொக்குளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in