நிறம் மாறும் அதிசய மண் பிரசாதம்

நாகராஜர் நிகழ்த்தும் அற்புதம்
நிறம் மாறும் அதிசய மண் பிரசாதம்
ஆலயத்தின் முகப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரம், தமிழகத்தின் படித்தவர்கள் நிறந்த பகுதி, தமிழ் மற்றும் மலையாளம் கலந்த பேச்சு நடை என தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து வித்தியாசப்பட்டு நிற்கும் நகரம் நாகர்கோவில். நாகர்கோவிலுக்கு இந்தப் பெயர்வரக் காரணமே இங்குள்ள நாகராஜா கோயில் தான். ஆம்! நாகராஜர் ஆலயம் இருப்பதாலேயே, நாகர்கோவில் என பெயர் பெற்று நிற்கிறது இந்த மாநகரம்.

நாகர்கோவில் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது நாகராஜா கோயில். இங்கே மூலஸ்தானத்தில் நாகராஜர் 5 தலைகளுடன் சுயம்புவாக காட்சி தருகிறார். நாகதோஷம் உள்ளவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டால், நாகதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்! அதேபோல், திருமணத் தடை அகலும் என்பதாலும் நாகராஜரை தரிசிக்க கூட்டம் அலைமோதும். ஞாயிற்றுக்கிழமைகளில் நாகராஜரை வழிபடுவது கூடுதல் சிறப்பு. இதனாலேயே ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் திரள் அதிகம் இருக்கும். அதிலும், ஆவணி ஞாயிற்றுக்கிழமையில் நாகராஜரை வழிபடுவது கூடுதல் விசேஷம். நாகராஜர் சந்நிதியின் எதிரில் உள்ள தூணில், நாகக் கன்னியும் சிற்பவடிவில் காட்சி தருகிறார். இப்போதும் இங்கு நாகங்கள் வசிப்பதாகவும், அவையே ஆலயத்தை பாதுகாப்பதாகவும் பக்தர்கள் மத்தியில் நம்பிக்கை நிலவுகிறது.

பால் ஊற்றி வழிபடும் பக்தர்கள்
பால் ஊற்றி வழிபடும் பக்தர்கள்

நாகங்கள் வசிப்பதற்கு ஏதுவாக மூலஸ்தானத்தை இன்றும் ஓலைகூரையாகவே வேய்ந்துள்ளனர். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் கூரையின் ஓலையைப் பிரித்து, புதிய ஓலையை கட்டுகின்றனர். அதையும் ஆலய அர்ச்சகர்கள் தான் செய்கிறார்கள். அதையெல்லாம் விட இங்கு சிறப்பு பெற்றது, பிரசாதம் தான்!

மூலஸ்தான நாகராஜர் இருக்குமிடம் மணல் திட்டாகவே (புற்று) காட்சி தருகிறது. இது ஒரு காலத்தில் வயல்வெளியாகவே இருந்த பகுதி என்பதால், மணலும் நீரும் சேர்ந்த மணலையே பிரசாதமாக தருகின்றனர். இந்த மணல் ஆடி முதல் மார்கழி வரை கருப்பு நிறத்திலும், தை முதல் ஆவணி வரை வெள்ளை நிறத்திலும் காட்சி தருகின்றது. அதனால், இங்கு வழங்கப்படும் மண் பிரசாதம் 6 மாதங்களுக்கு கருப்பாகவும், அடுத்த 6 மாதங்களுக்கு வெண்மையாகவும் இருக்கின்றது. தமிழகத்தில் நாக வழிபாட்டுக்கு என்று உள்ள மிகப் பெரிய ஆலயம் இதுமட்டும் தான் என்பது கூடுதல் சிறப்பு.

Related Stories

No stories found.