பட்டினப் பிரவேசத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி: தருமபுரம் ஆதீனம் பேட்டி

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்திற்கு கோட்டாட்சியர் தடைவிதித்திருந்தார். இது தமிழகத்தில் கடும் பரபரப்பை உருவாக்கியிருந்தது. இந்நிலையில் தருமபுரத்தின் பட்டினப் பிரவேசத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பட்டினப் பிரவேசத்திற்கு தடைவிதித்த விவகாரம் கடும் சர்ச்சையாக வெடித்தது. பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பட்டினப் பிரவேசத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துவந்தன. பாஜக தலைவர் அண்ணாமலை, மதுரை ஆதீனம் உள்ளிட்ட பலரும் பட்டினப் பிரவேசத்தை நடத்தியே தீருவோம் எனவும் அறிவித்து இருந்தனர். இந்நிலையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமி, மயிலாடுதுறை தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். அவர்களும் தருமபுரம் ஆதீனப் பட்டினப் பிரவேசத்திற்கு அனுமதி வழங்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் தருமபுரம் ஆதீனம் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டினப் பிரவேசத்திற்கு வாய்மொழியாக அனுமதி வழங்கியுள்ளார். தொண்டர்கள் விரும்பித்தான் பல்லக்கு சுமக்கிறார்கள் ”என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in