கடன் தொல்லைத் தீர அமாவாசையன்று இதைச் செய்து பாருங்க... நிச்சயம் பலன் கிடைக்கும்!

அன்னதானம்
அன்னதானம்

பொதுவாகவே அமாவாசை தினங்கள் முன்னோர்களை வழிபட ஏற்ற நாளாக இருந்தாலும், ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை தினங்கள் கூடுதல் சிறப்பு வாய்ந்தவை. அமாவாசை நாளில், முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்யவேண்டும். இதனால் நமக்கும் நம் சந்ததியினருக்கும் பித்ருக்களின் ஆசீர்வாதம் முழுமையாகக் கிடைக்கும். கடன் முதலான தொல்லைகளில் இருந்து விடுபடலாம்; கல்வி கேள்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்.

அமாவாசை தினம் என்பது பித்ருக்களுக்கான நாள். பித்ருக்கள், நம்மை ஆசீர்வதிப்பதற்காக, பித்ருலோகத்திலிருந்து பூவுலகிற்கு வரும் நாள் என்றெல்லாம் விவரிக்கிறது சாஸ்திரம்.

உத்தராயன புண்ய காலம், தட்சிணாயன புண்ய காலம் என்பார்கள். தை மாதம் என்பது உத்தராயன புண்ய காலத்தின் தொடக்கம். அதேபோல், தட்சிணாயன புண்ய காலம் என்பது ஆடி மாதத்தில் தொடங்குகிறது. இந்தப் புண்ய காலங்களின் தொடக்க அமாவாசை, மிகுந்த விசேஷத்துக்கு உரியதாகப் போற்றப்படுகிறது. மேலும், மகாளயபட்ச காலம் என்று சொல்லப்படும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை, மகாளய பட்ச அமாவாசை என்று சொல்லுவார்கள். அதனால் தான் இந்த மூன்று அமாவாசைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய நாட்களில், நாம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்து ஆத்மார்த்தமாகப் பிரார்த்தனை செய்து வழிபட்டால், 12 வருடங்கள் தர்ப்பணம் செய்யாமல் இருந்த பாவங்கள் நீங்கும் என அறிவுறுத்துகிறது தர்ம சாஸ்திரம்.

காகத்தை சனீஸ்வர வாகனமாகவும் பார்க்கிற அதேவேளையில், நம் முன்னோர்களின் வடிவமாகவும் பார்க்கச் சொல்கிறது சாஸ்திரம். எனவே, தினமும் காகத்துக்கு சாதம் வைப்பது நற்பலன்களைக் கொடுக்கவல்லது. முக்கியமாக, அமாவாசை நாளில், காகத்துக்கு சாதமிடுவது முன்னோர்களின் பரிபூரண ஆசியை வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

மனிதர்களின் மிக முக்கியக் கடமையாக, பித்ருக்களுக்குச் செய்கிற கடமையையும் பிறருக்குச் செய்கிற தானங்களையும் ஞானநூல்கள் விவரிக்கின்றன. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து, எள்ளும் தண்ணீரும் அர்க்யம் செய்து வேண்டிக்கொள்கிற அதேவேளையில், நம்மால் முடிந்த அளவுக்கு நான்குபேருக்கேனும் அன்னதானம் செய்தால், மகா புண்ணியம் கிடைக்கப் பெறுவோம். தனம், தானியம் குறைவின்றிப் பெறலாம். சகல ஐஸ்வர்யங்களும் கிடைத்து, இல்லத்தில் நிம்மதியும் ஆனந்தமும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம்.

ஆடி அமாவாசை நாளில், பித்ருக்களுக்கான ஆராதனைகளை முறையே செய்து, நான்கு பேருக்கேனும் அன்னதானம் வழங்குவோம். தயிர் சாதப் பொட்டலம் வழங்கினாலும் அது புண்ணியமாக வந்து, நம்மையும், நம் சந்ததியினரையும் காக்கும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in