காவிரியில் துலா ஸ்நானம் ஐப்பசியில் குவியும் மக்கள்

காவிரியில் துலா ஸ்நானம்
காவிரியில் துலா ஸ்நானம்

துலா ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்றும் அழைக்கிறார்கள். துலாத் தட்டுகள் இரண்டும் சமமான எடையுடன் இருப்பது போல், ஐப்பசி மாதத்தின் 30 நாட்களிலும் பகலும், இரவும் சமமான காலத்தில் இருக்கும்.

பாரத நாட்டின் தென்பகுதியில் ஓடும் காவிரி நதிக்கு தட்சிண கங்கை, பொன்னி, விதிசம்பூதை, கல்யாணி, சாமதாயினி, கல்யாண தீர்த்தரூபி, உலோபமுத்ரா, சுவாசாஸ்யாமா, கும்பசம்பவ வல்லவை, விண்டுமாயை, கோனிமாதா, தக்கணபதசாவணி என பல பெயர்கள் உள்ளன. அகத்திய முனிவரால் தென்னகத்துக்கு கொண்டு வரப்பட்ட காவிரி நதி, கர்நாடகத்தில் குடகு மலையில் உள்ள தலைக்காவிரியில் உற்பத்தியாகி, பூம்புகாரில் வங்கக்கடலில் சங்கமிக்கிறது.

காவிரியில் துலா ஸ்நானம்
காவிரியில் துலா ஸ்நானம்

பூவுலகிலும், மற்ற லோகங்களிலும் உள்ள புண்ணிய தீர்த்தங்கள் அனைத்தும், இந்த துலா மாதத்தில் காவிரியில் சங்கமிக்கின்றன என்பது நம்பிக்கை. இதனால், துலா மாதம் எனப்படும் ஐப்பசியில் காவிரியில் நீராடுவது புனிதமாகக் கருதப்படுகிறது. இதற்கு துலா ஸ்நானம் என்று பெயர்.

நடப்பாண்டு துலா ஸ்நானம் (ஐப்பசி மாதத்தின் 1-வது நாள்) - 18 அக்டோபர் 2023 (புதன்கிழமை) அன்று தொடங்கியது. துலா மாதத்தில் வரும் அமாவாசை அன்று நீராடுவதும் புனிதமாகக் கருதப்படுகிறது. 16 நவம்பர் 2023 (வியாழன்) அன்று துலா ஸ்நானம் முடிவடைகிறது. இந்நாள் கடை முழங்கு என உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது.

ஐப்பசி முதல் தேதி திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பராய்த்துறையிலும், இரண்டாவது நீராடலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையிலும், கடைசி தேதியன்று மயிலாடுதுறை நந்திக் கட்டத்திலும் முழுக்குப் போட வேண்டும் என்பது ஐதீகம்.

தலைக்காவிரி, ராமபுரம், ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, திருவானைக்காவல், சப்தஸ்தானம், திருவையாறு, புஷ்பாரண்யம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர் முதலிய காவிரி நீர்த்துறைகள் துலா மாதத்தில் நீராட சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

காவிரி மகாத்மியம்

காவிரி நதியின் பெருமையை விளக்கும் நூல் காவிரி மகாத்மியம். வியாச முனிவரால் எழுதப்பட்ட நூல் இது. இந்நூலில் கூறப்பட்டிருப்பதாவது:

துலாக் காவிரியின் நீர்த்திவலைகள் ஒவ்வொன்றும் புண்ணிய தீர்த்தங்கள் என புராணங்கள் கூறுகின்றன. அதிலுள்ள மணல்கள் எல்லாம் தேவதைகள். அதனால்தான் உலகிலுள்ள புனித நதிகள் அனைத்தும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி, மக்கள் தங்களிடம் கரைத்த பாவக் கறைகளைக் கழுவி புனிதமடைகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையன்று கங்காதேவியானவள் காவிரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களையெல்லாம் போக்கிக் கொள்கிறாள்.

காவிரி நீராடல்
காவிரி நீராடல்

துலா மாதத்தில் காவிரியில் நீராடுபவர்கள், தங்கள் குடும்பத்தினரையும் சேர்த்து, மூன்று கோடி உறவினர்களையும் கடைத்தேற்றுகிறார்கள். நம்முடைய எல்லாவிதமான விருப்பங்களும் நிறைவேறும். இறுதிக்காலத்தில் எமவாதனையின்றி முக்தியும் அடையலாம். மேலும் துலா மாதத்தில் காவிரியில் நீராடி, முன்னோர்களுக்கு பிதுர்பூஜை செய்து அன்னதானம், வஸ்திர தானம் செய்தால் நம்முடைய பித்ருக்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள்.

ஐப்பசியில் காவிரியில் நீராடினால், அழகு, ஆயுள், ஆரோக்கியம் கூடும். முகத்தில் தேஜஸ் அதிகரிக்கும். வாக்கு பலிதம் ஏற்படும். கல்வியில் சிறந்து விளங்கலாம், வாழ்வில் சகல பாக்கியங்களையும் பெறலாம். இவ்வாறு காவிரி மகாத்மியம் கூறுகிறது.

காவிரி நீராடல்
காவிரி நீராடல்

சந்தனு, அர்ஜுனன்

ஐப்பசியில் காவிரியில் நீராடி, பலன்களையும் புண்ணியங்களையும் பெற்றவர்கள் ஏராளம். காவிரியில் துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதரை வழிபட்டதன் பலனாக சந்தனு மகாராஜா பீஷ்மரை புத்திரனாக அடைந்தார்.

அர்ஜுனன், துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதப் பெருமாளை தரிசித்து சுபத்ராவை மணம் புரிந்தான் என்கிறது புராணம்.

ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராட பல்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் காவிரிக்கரையோர கோயில்களில் குவிகிறார்கள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in