ஆடி செவ்வாயில் துர்கை தரிசனம்

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம்
ஆடி செவ்வாயில் துர்கை தரிசனம்

ஆடி மாதத்தில்தான் பெரும்பான்மையான அம்மன் கோயில்களில், விழாக்கள் நடைபெறும். பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்துவதற்கு குடும்பமாக வருவார்கள். அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுவதும் பொங்கல் படையலிட்டுப் பிரார்த்தனை செய்வதும் நடைபெறும்.

பொதுவாகவே செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்பிகைக்கு உகந்த நாட்களாகப் போற்றப்படுகிறது. குறிப்பாக, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளின் ராகுகால வேளையில் துர்கை வழிபாடு என்பது ரொம்பவே சாந்நித்தியம் தந்தருளக்கூடியது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

செவ்வாய்க்கிழமையில் ராகுகாலம் என்பது மாலை 3 முதல் 4.30 மணி வரை. அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், செவ்வாய்க்கிழமையில், ராகுகால வேளையில், அம்மன் கோயிலில், சிவாலயங்களில், பெருமாள் கோயில்களில் குடிகொண்டிருக்கும் துர்கையை தரிசிப்பதும் வணங்கிப் பிரார்த்திப்பதும் எண்ணற்ற பலன்களைத் தரும் என்பது ஐதீகம்.

ஆடி செவ்வாயில், அருகிலுள்ள துர்கை குடிகொண்டிருக்கும் கோயிலுக்குச் சென்று, துர்கைக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடுங்கள். எலுமிச்சை மாலை சார்த்தி வேண்டிக்கொள்வது இல்லத்திலும் உள்ளத்திலும் இருக்கிற துக்கங்களையும் கவலைகளையும் போக்கியருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். நம் வாழ்வின் சிக்கல்களையெல்லாம் தீர்த்துவைப்பாள் தேவி.

ராகுகால வேளையில், துர்கையை தரிசிப்போம். துக்கமெல்லாம் போக்கியருளுவாள் துர்காதேவி. ஆடி மாதத்தில், ஏதேனும் ஒருநாளில், ராகுகால வேளையில், கும்பகோணம் பட்டீஸ்வரம் துர்கையை வணங்கி வேண்டிக்கொள்வது இன்னும் இன்னுமான பலன்களைத் தந்தருளும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in