
அயோத்தி ராமர் கோயில் பூஜாரி பணிக்கு 3,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பதாக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் மிக பிரம்மாண்டமான முறையில் ராமர் கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கோயிலுக்கு பூஜாரிகளைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில், 'ராமர் கோயிலின் பூஜாரி பணிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதற்காக சுமார் 3,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதி அடிப்படையில் 200 பேர் அயோத்தியில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மூன்று மூத்த ஆன்மிகத் தலைவர்கள் கொண்ட குழு நேர்காணலை நடத்தி 20 பூஜாரிகளைத் தேர்ந்தெடுப்பார்கள்.
நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்டவா்கள் 6 மாத பயிற்சிக்குப் பிறகு ராமர் கோயிலில் பணியமர்த்தப்படுவாா்கள். பயிற்சியில் ஈடுபடுபவா்களுக்கு இலவச உணவு, தங்குமிடம் வசதிகள் செய்து கொடுக்கப்படும். உதவித்தொகையாக மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.
தேர்வாகாதவா்களுக்கு நேர்காணலில் பங்கேற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். வருங்காலத்தில் ராமஜென்மபூமி கோயில் பூஜாரி பணிக்கு ஆட்கள் தேவைப்படும் சூழலில், அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என்று தெரிவித்தனர்.
அயோத்தி ராம ஜென்மபூமி கோயிலில் வரும் ஜனவரி 22-ம் தேதி மூலவர் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது.