விருத்தாசலம் கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட 3 கலசங்கள் மாயம்

கலசங்கள் திருடு போயுள்ள அம்பாள் சன்னதி கோபுரம்
கலசங்கள் திருடு போயுள்ள அம்பாள் சன்னதி கோபுரம்

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள மிகப் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோயிலில் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் நேற்று இரவு திருடு போய் உள்ளன.

திருமுதுகுன்றம் என புராண காலத்திலிருந்து போற்றப்படும் விருத்தாசலத்தில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கடந்த பிப்ரவரி 6ம் தேதியன்று வெகு விமரிசையாக குடமுழுக்கு விழா நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவிற்காக விருத்தகிரீஸ்வரர் சன்னதி கோபுரத்தின் மேலுள்ள ஒரு கலசம் மற்றும் விருத்தாம்பிகை சன்னதிக்கு கோபுரத்தின் மேலுள்ள மூன்று கலசங்கள் என மொத்தம் நான்கு கலகங்களுக்கும் தலா 100 கிராம் வீதம் தங்க முலாம் பூசப்பட்டிருந்தது. அதற்கு முதலில் அறநிலையத் துறை அனுமதி வழங்காத பட்சத்தில் பக்தர்களின் ஏகோபித்த வேண்டுகோளை ஏற்று பின்னர் அறநிலையத் துறை அனுமதி வழங்கியிருந்தது.

தங்க முலாம் பூசுவதற்கான தங்கம் முழுமையும் குறிச்சிக்குளம் நாட்டார் வகையறாவினர் தங்கள் சொந்த செலவில் செய்து கொடுத்திருந்தனர். குடமுழுக்கு விழாவிற்கு பின்னர் நான்கு கலசங்களும் தங்க முலாம் பூசப்பட்டிருப்பதைக் காண அதிக அளவில் பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு அம்பாள் சன்னதிக்கு மேல் இருந்த மூன்று கலசங்களும் திருடப்பட்டிருக்கின்றன.

இன்று காலை கோயிலுக்கு வந்தவர்கள் இதை கவனித்து விட்டு சொன்னதும்தான் அனைவருக்கும் தெரியவந்திருக்கிறது. கோயிலுக்கு இரவு காவலர் என்று தனியாக யாரும் இல்லை. ஊர்க்காவல் படையை சேர்ந்த இருவர் மட்டும் கோயிலில் பாதுகாப்பு பணியில் இருந்திருக்கின்றனர். அவர்களிடமும் சிசிடிவி காட்சிகளை அடிப்படையிலும் விருத்தாசலம் போலீஸார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் மற்றும் விருத்தாசலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அஞ்சித் ஜெயின் ஆகியோர் கோயிலில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடயங்கள் மற்றும் கைரேகைகளை சேகரிப்பதற்காக அம்பாள் சன்னதி அருகே மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப் படவில்லை. மற்றபடி வழக்கம் போல பக்தர்களின் தரிசனத்திற்காக கோவில் திறந்திருக்கிறது. 300 கிராம் மதிப்பிலான தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் திருடு போயிருப்பது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in