146 அடி உயரத்தில் முருகன் சிலை வடிவமைப்பு: மலேசியாவை விஞ்சியது சேலம்

தந்தையின் கனவை நனவாக்கிய தனயன்!
146 அடி உயரத்தில் முருகன் சிலை வடிவமைப்பு: மலேசியாவை விஞ்சியது சேலம்

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என பழமொழி உள்ளது. தந்தையின் அறிவுரை எப்போதும் குழந்தையின் வளர்ச்சிக்காகவும், நன்மைக்காவும் மட்டுமே என்பது பழமொழியின் விளக்கம். அந்த வகையில் தந்தை கனவில் கண்டதை மகன் நனவாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் முத்து நடராஜன். முருக பக்தரான இவர் மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயிலுக்கு சென்று வந்துள்ளார். அங்கு சென்று வந்த சிறிது நாளில் அவரது கனவில் முருகக்கடவுள் தோன்றியுள்ளார். இதையடுத்து மலேசியாவில் உள்ள முருகன் சிலை போல் நிறுவ முடிவு செய்துள்ளார். இதற்காக ஆத்தூர் அருகே புத்திர கவுண்டன்பாளையம் முத்துமலை அடிவாரத்தில் உள்ள தனது சொந்த இடத்தில் 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலையை வடிவமைக்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு சிலை வடிவமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

மலேசியாவில் உள்ள கோயிலை வடிவமைத்த ஸ்தபதியான திருவாரூர் தியாகராஜன் தலைமையிலான குழுவினரிடம் சிலையை வடிவமைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 6 ஆண்டுகளாக சிலை வடிவமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இடையில் கடந்த 2018-ம் ஆண்டு முத்து நடராஜன் இயற்கை எய்தினார். தந்தை விட்டுச் சென்ற பணியை தொடங்கிய அவரது மூன்றாவது மகன் ஸ்ரீதர், முருகன் சிலை வடிவமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் அப்பணி நிறைவடைந்தது. இதையடுத்து ஏப்ரல் 6-ம் தேதி கோயில் கும்பாபிஷேம் கோலாகலமாக நடத்தப்பட்டது. ஹெலிகாப்டர் வைத்து சுவாமிக்கு மலர் தூவப்பட்டது.

இதுகுறித்து முத்து நடராஜன் மகன் ஸ்ரீதர் கூறுகையில், "எங்களது வீட்டில் இரு மகன், ஒரு மகள் உள்ளனர். திரையரங்கம் நடத்தி வருகிறோம். எனது தந்தை முத்து நடராஜன் தனது கனவில் முருகக் கடவுள் வந்து சென்றதாக கூறினார். இதையடுத்து ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டம்பாளையம் முத்துமலை அடிவாரத்தில் முருகன் சிலை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது தான் மலேசியாவில் உள்ள சிலை போன்றே இங்கும் வடிவமைத்தால் என்ன என எண்ணத் தோன்றியது.

மலேசியாவில் உள்ள சிலை பீடத்தில் இருந்து 108 அடி. அதன் மொத்த உயரம் 140 அடி. அந்த சிலைதான் உலக அளவில் அதிக உயரம் கொண்ட முருகன் சிலை. அதேபோல் கட்ட நினைக்கவில்லை. ஆனால் மலேசியாவில் உள்ள சிலையைக் காட்டிலும் 6 அடி உயரமாக 146 அடியில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலை முழுமுழுக்க சிமென்ட் கான்கிரீட்டால் வடிவமைக்கப்பட்டது. சுவாமி சிலை வடிமைக்க ஆகிய செலவை கணக்கில் வைத்துக் கொள்ளவில்லை. ஆயிரக்கணக்கான பேர் சிலை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அனைவரும் கோயிலில் வழிபடலாம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in