பக்தி பரவசத்துடன் நடந்த 11 கருட சேவை... நாங்கூரில் சந்தித்த பெருமாள்கள்!

ஒரே இடத்தில் கூடியிருக்கும் பெருமாள்கள்
ஒரே இடத்தில் கூடியிருக்கும் பெருமாள்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாங்கூரில் ஒரே நேரத்தில் கூடும் 11 பெருமாள்களின் கருடசேவை உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி  அருகே நாங்கூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில்  மொத்தம் 11 பெருமாள் கோயில்கள்  உள்ளன. இக்கோயில்களில் அருள்பாலிக்கும் பெருமாள்கள் ஆண்டுதோறும் மணிமாடக் கோயில் என அழைக்கப்படும் நாங்கூர் நாராயண பெருமாள் கோயிலில் ஒரேநேரத்தில் எழுந்தருளி கருட சேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான கருடசேவை நேற்று விமரிசையாக நடைபெற்றது. நேற்று நண்பகல் முதல் ஒவ்வொரு பெருமாளாக நாராயண பெருமாள் கோயிலுக்கு வந்தனர். அப்போது, திருமங்கை ஆழ்வார் ஒவ்வொரு பெருமாளையும் வரவேற்றார். தொடர்ந்து, அனைத்து பெருமாள்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

அதையடுத்து பெருமாள்களுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, கோயிலின் வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் அனைத்து பெருமாள்களும் இரவு ஒன்பது மணி அளவில் எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து, திருமங்கை ஆழ்வார் தனது சீடர் மணவாள மாமுனிகளுடன் பெருமாள்களை வலம் வந்தார். அத்துடன் திருமங்கை ஆழ்வார்  பாடிய பாசுரங்களை பட்டாச்சாரியார்கள் பாடி, ஒரே நேரத்தில் அனைத்து பெருமாள்களுக்கும்  தீபாராதனை காட்டப்பட்டது. 

அப்போது, அங்கு கூடியிருந்த பக்தா்கள் 'நாராயணா, நாராயணா' என பக்தி பரவசத்தில் திளைத்தனர். இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி முருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in