பழைய சோறும் மாவடுவும்

பழைய சோறும் மாவடுவும்

மாசி / பங்குனி மாதம் என்றாலே சிவன், பெருமாள் கோயிகளில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். ஸ்ரீரங்கம் போன்ற கோயில்களில் தினம் தினம் திருநாளாக இருக்கும்.

பங்குனி பிரம்மோற்சவத்தின்போது மூன்றாம் நாள் ஸ்ரீரங்கத்தில் சிறப்பானதாக இருக்கும். ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீரங்கத்தை விட்டு ஜீயபுரம் செல்கிறார். அங்கு அவருக்கு சவரத் தொழிலாளர்களின் மண்டகப்படி நடைபெறும்... ஸ்ரீரங்கநாதர் முன் ஒரு கண்ணாடி வைக்கப்பட்டு, அதில் தெரியும் அவரது பிம்பத்துக்கு முகத் திருத்தம் செய்வது போன்ற ஒரு நிகழ்வு நடைபெறும். அன்று அவருக்கு நைவேத்தியமாக பழைய சோறும் மாவடுவும் அளிக்கப்படுகிறது

இதற்குப் பின்னால் பெருமாளின் திருவிளையாடல் இருக்கிறது. ஓர் ஏழைப் பாட்டிக்காக பேரன் வடிவில் பெருமாள் அருள்பாலித்துள்ளார்.

ஜீயபுரம் கிராமத்தில் ஸ்ரீரங்கநாதரை வழிபடும் ஒரு பாட்டி இருந்தார். அவருக்கு ரங்கன் என்ற பேரன் உண்டு. ஸ்ரீரங்கநாதரும் ரங்கனும் எப்போதும் தன்னுடன் இருப்பதாக பாட்டி நினைத்துக் கொள்வார். எப்போதும் ‘ரங்கா’ என்ற நாமத்தை உச்சரித்து வருவார். நின்றால் ரங்கா, உட்கார்ந்தால் ரங்கா, உறங்கினால் ரங்கா, இடறி விழுந்தால் ரங்கா, காலை எழுந்தால் ரங்கா இப்படி ஸ்ரீரங்கநாதர் நினைப்பாகவே இருப்பார்.

ஒருநாள் முகத் திருத்தம் செய்து கொண்டு வருவதாக பேரன் ரங்கன் பாட்டியிடம் சொல்லிக் கொண்டு கிளம்புகிறான். அதன்படி முகத் திருத்தம் செய்து கொண்டுவிட்டு, காவிரியில் இறங்கிக் குளித்தான். அப்போது பெருகிய வெள்ளத்தால், ரங்கன் அடித்துச் செல்லப்பட்டான். ரங்கன் கிளம்பி வெகு நேரமாகியும் இன்னும் இல்லம் திரும்பவில்லையே என்று பாட்டி கவலை கொண்டார்.

ரங்கனை நினைத்து ரங்கநாதரை வேண்டினார். அதேசமயம், அம்மா மண்டபத்தருகே, ரங்கன் கரை ஒதுங்கினான். உயிர் பிழைத்ததற்கு ரங்கநாதருக்கு நன்றி கூறினான். தன்னை எண்ணி பாட்டி கவலை கொள்வாரே என்று நினைத்து ரங்கநாதரிடம் வேண்டினான்.

காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை நினைத்து பாட்டி வருந்தினார். அழுது கொண்டே இருந்தார். சில இடங்களில் தேடி அலைந்தார். ஓரிடத்தில் திரும்பிப் பார்க்கும்போது எதிரே ரங்கன் நின்று கொண்டிருந்தான்.. பேரனைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த பாட்டி, அவனை அழைத்துக் கொண்டு இல்லம் திரும்பினார். இருந்த பழைய சாதத்தையும் மாவடுவையும் சாப்பிடக் கொடுத்தார். ரங்கன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மற்றொரு ரங்கன் வந்தான். எத்தனை ரங்கன், இதில் யார் உண்மையான பேரன் ரங்கன் என்று யோசித்தார் பாட்டி. உடனே சாப்பிட்டுக் கொண்டிருந்த ரங்கன் எழுந்து, சிரித்தபடியே அந்த இடத்தைவிட்டு மறைந்தார்.

உயிர் பிழைத்த ரங்கன், இல்லம் திரும்பும் வரை, பாட்டி கவலை கொள்ளாமல் இருப்பதற்காக, ஸ்ரீரங்கநாதரே ரங்கன் வடிவம் ஏற்று அவனது இல்லத்துக்குச் சென்று பழையதையும் மாவடுவையும் உண்டிருக்கிறார்.

இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் பங்குனி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளில் ரங்கநாதர் ஜீயபுரம் செல்கிறார். முகத் திருத்தம் நிகழ்வு, பழையதையும் மாவடுவையும் நைவேத்தியம் செய்யும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

பக்தனைக் காக்க ஓடிவருவார் ஸ்ரீரங்கநாதர் என்று இதன் மூலம் அறியப்படுகிறது..

ரங்கா.. .ரங்கா…

Related Stories

No stories found.