
யூடியூப் சேனலில் ஆபாசமாகப் பேசி விளையாடியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் என்கிற மதன் குமார் மீதான வழக்கை 4 வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மதன்குமார் தனது ‘டாக்சிக் மதன் 18 பிளஸ்’ என்ற யூடியூப் சேனல் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாகப் பேசிக்கொண்டே விளையாடியதாகப் புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில், பெண்களை ஆபாசமாகச் சித்தரித்து பேசுதல், ஆபாசமாகப் பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் 2021 ஜூன் 18-ம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், ஜூலை 5-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பப்ஜி மதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு குறித்து தமிழக அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 8 மாதங்களாக மனுதாரர் சிறையில் இருப்பதால், மதன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘சமூகவலைதளங்களில் ஆபாசமாகப் பேசுவது மிகவும் ஆபத்தானது. அதனால் தற்போது வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது’ எனத் தெரிவித்து வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.