
கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த வாலிபர் 250 அடி பள்ளத்தாக்கில் தவறி விழுந்த நிலையில் தீயணைப்பு துறையினர் அவரை போராடி மீட்டனர்.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சங்கர் என்பவர் தனது நண்பருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளார். கொடைக்கானல் சென்றுவிட்டு திரும்பும் வழியில் பேருந்தி இருந்து இறங்கிய சங்கரும் அவரது நண்பரும் மலைச்சாலையின் வழியாக நடந்து வந்துள்ளனர்.
டம் டம் பாறை அருகே உள்ள 5வது கொண்டை ஊசி வளைவின் வந்த அவர்கள் அப்பகுதியில் உள்ள சாலையோர தடுப்பு சுவரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சங்கர் எதிர்பாராத விதமாக அங்கிருந்த பள்ளத்தாக்கில் தவறி விழுந்துள்ளார்.
இது குறித்து வத்தலக்குண்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த அவர்கள் பள்ளத்தாக்கில் விழுந்த சங்கரை இரவு முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று காலை மீண்டும் மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் பாலகிருஷ்ணன், அருண்குமார் ஆகியோர் 250 அடி பள்ளத்தாக்கின் பாறை இடுக்குகளின் இடையே உள்ள முட்புதரில் மயங்கிய நிலையில் கிடந்த சங்கரை மீட்டனர்.
இதன்பின் அவருக்கு முதலுதவி செய்த அளித்து கயிறு மூலம் பள்ளத்தாக்கில் இருந்து மீட்டனர். தொடர் சிகிச்சைக்காக சங்கர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். 250 அடி பள்ளத்தாக்கில் இரவு முழுவதும் மயங்கி கிடந்த வாலிபரை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை வீரர்களின் பணியை பலரும் பாராட்டினர்.