கேடிஎம் பைக் வேண்டும்... வாங்கித் தர முடியாத ஏழைத்தாய்; வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய மகன்

செளந்தர்ராஜன்
செளந்தர்ராஜன்

திருப்பூரில் உயர்ரக பைக் வாங்கித் தர, தாய் மறுத்ததால் 19 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் சித்தம்பலம் பகுதியில் வசித்து வருபவர் சிவகாமி. இவரது கணவர் ராஜா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்ட நிலையில் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். மகன் சௌந்தர்ராஜன் (வயது 19) கூலி வேலைக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த சில நாட்களாக சௌந்தர்ராஜன் அவரது அம்மா மற்றும் அக்காவிடம் தொடர்ந்து விலை உயர்ந்த பைக்கான கேடிஎம் வாங்கித் தர வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று காலை வழக்கம்போல் விலை உயர்ந்த பைக் வேண்டுமென்று வீட்டில் சண்டையிட்டு விட்டு வெளியில் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று மாலை பல்லடம் உடுமலை சாலையில் உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தொங்கிக் கொண்டு இருப்பதாக பல்லடம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த பல்லடம் போலீஸார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தூக்கில் தொங்கிய வாலிபர் சித்தம்பலம் பகுதியை சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பது தெரியவந்தது. மேலும் பல்லடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பைக் வாங்கி தராததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in