வாட்ஸ் அப் வீடியோவில் ஏடாகூடம்; சாம்பாரில் தூக்க மாத்திரை: கர்நாடகத்தில் மதமாற்ற நாடகம்?

ஃபயஸ் அஹமது
ஃபயஸ் அஹமது

மதமாற்ற தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

குஜராத், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆட்சி மாநிலங்களில் அமலில் உள்ள கட்டாய மதமாற்ற தடுப்பு சட்டம், பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் கர்நாடகாவிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழான நடவடிக்கையாக ஃபயஸ் அஹமது என்ற இளைஞர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்து மதத்தை சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக போக்சோ பிரிவின் கீழும் அவர் மீது வழக்கு சேர்க்கப்பட்டுள்ளது.

நாகமங்கலா பகுதியில் வசித்தபோது சிறுமியுடன் பழக்கமான ஃபயஸ், சிறுமியின் குடும்பத்தார் அங்கிருந்து இடம்பெயர்ந்த பின்னரும் பின்தொடர்ந்துள்ளார். சிறுமிக்கு அவர் பெற்றோர் அறியாது ஸ்மார்ட் போன் அளித்த ஃபயஸ், அதில் பலதும் பேசி நெருக்கம் வளர்த்துள்ளார். வாட்ஸ் அப் வீடியோ கால் வாயிலாக சிறுமியை நிர்வாணமாக தோன்ற வற்புறுத்தியதுடன், பின்னர் அதனை பதிவு செய்து தனது ஆசைக்கு இணங்கும்படியும் கட்டாயப்படுத்தி இருக்கிறார். இதற்கு தோதாக குடும்பத்தினர் இரவு உணவின்போது சாம்பாரில் கலந்துவிடுமாறு தூக்க மாத்திரைகளையும் சிறுமிக்கு அனுப்பி உள்ளார். மேலும் சிறுமி தனது பாட்டி வீட்டுக்கு சென்றிருந்தபோது, நேரில் சந்தித்தும் பாலியல்ரீதியிலான துன்புறுத்தல்களை தந்திருக்கிறார். இறுதியாக மதம் மாறினால் மணந்துகொள்ளலாம் என்று சிறுமியை வறுபுத்தியும் இருக்கிறார்.

மகள் சில தினங்களாக மன அழுத்தத்தில் இருப்பதையும், தனியாக அமர்ந்தபடி அழுவதையும் சிறுமியின் பெற்றோர் கவனித்திருக்கின்றனர். மகளுக்கான அரவணைப்பை தொடர்ந்ததன் வாயிலாக சிறுமிக்கு ஃபயஸ் தந்த அச்சுறுத்தல்களையும் கேட்டறிந்தனர். தொடர்ந்து சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து ஃபயஸ் அஹமது கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ள கட்டாய மதமாற்ற தடை சட்டம் மட்டுமன்றி போக்சோ பிரிவின் கீழும் ஃபயஸ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிறுமி - ஃபயஸ் இடையிலான விவகாரங்கள் மற்றும் விவரிப்புகள் அனைத்தும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டவை. பாஜக ஆளும் மாநிலங்களின் முன்னெடுக்கப்படும் கட்டாய மதமாற்ற தடைசட்டம், ஃபயஸ் கைதின் வாயிலாக கர்நாடகத்திலும் வேகம் பிடித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in