தன்னைக் காதலித்து திருமணம் செய்து கொள்ளவதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கியதாக ஐபிஎல் கிரிக்கெட் வீரர் ராஜகோபால் சதீஷ் மீது ஐ.டி மென்பொறியாளரான இளம்பெண் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய இளம்பெண் தனியார் ஐ.டி கம்பெனியில் மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.
அதில், தனக்குக் கடந்த 2017-ம் ஆண்டு பெருங்குடியைச் சேர்ந்த ஐபிஎல் , டிஎன்பிஎல் கிரிக்கெட் வீரரான ராஜகோபால் சதீஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு அது நெருங்கிய நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. இதனையடுத்து தன்னைக் கிரிக்கெட் வீரர் சதீஷ் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 2019-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாடுவதற்காக அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு சதீஷ் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக்கொண்டார். அதன் பிறகு என்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை உறவு கொண்டார். இதன் பின்னர் திருமணம் செய்யாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததால் சந்தேகமடைந்து இது குறித்து விசாரித்த போது சதீஷிக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து எனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறினேன். பெற்றோர் என்ன செய்வது என்று தெரியாமல் என்னை வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
திருமணமான மூன்று மாதங்களிலேயே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தேன். இதனையறிந்து கொண்ட கிரிக்கெட் வீரர் ராஜகோபால் சதீஷ் மீண்டும் என்னை சந்தித்து மன்னித்து விடுமாறு கூறியதுடன் இருவரும் சேர்ந்து வாழலாம் என நம்பிக்கை தரும் வகையில் ஆசைவார்த்தை கூறினார்.
இதனை நம்பி நான் எனது பெற்றோர் வீட்டில் இருந்து வெளியேறி மீண்டும் சதீஷுடன் மிக நெருக்கமாக பழகினேன். அதன் விளைவாக கர்ப்பம் அடைந்த என்னை சதீஷ் மற்றும் அவரது மனைவி இருவரும் மிரட்டி கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குழந்தையைக் கலைத்து விடுமாறு கூறி வற்புறுத்தினர்.
மீண்டும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கிரிக்கெட் வீரர் சதீஷ் மீது நடவடிக்கை எடுக்ககோரி தரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.
ஆனால் தரமணி ஆய்வாளர் தர்மா முறையாக விசாரணை செய்யாமல் செட்டில்மென்ட் வாங்கி தருவதாகவும், கிரிக்கெட் வீரருடன் சமாதானமாக செல்லுமாறு வற்புறுத்தி மிரட்டல் விடுத்தார். இதனால் பாதிக்கப்பட்ட எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். மேலும் என்னைக் காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக்கூறி கர்ப்பமாக்கி ஏமாற்றிய கிரிக்கெட் வீரர் சதீஷ் மற்றும் அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கேட்டுள்ளார்.
இதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் வீரர் இளம்பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.