ஒடிசாவில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் இளம் மருத்துவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.
ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பரிபாடாவில் பண்டிட் ரகுநாத் முர்மு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இங்கு கியோஞ்சரைச் சேர்ந்த சச்சின் மருத்துவப் படிப்பை முடித்துள்ளார். இதன் பின் மருத்துவக் கல்லூரியில் ஹவுஸ் சர்ஜனாக பணிபுரிந்து வந்தார்.
மருத்துவக் கல்லூரி விடுதிக்குச் சென்ற சச்சின் நீண்ட நேரமாகியும் நேற்று அறையை விட்டு வெளியே வரவில்லை. அவரது நண்பர்கள் கதவை தட்டியும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.
அவர்கள் ஜன்னல் வழியே பார்த்த போது, சச்சின் தூக்கில் தொங்கிய நிலையில் இருநதார். உடனடியாக கதவை உடைத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், முழுமையான விசாரணைக்கு பிறகே சரியான காரணம் கண்டறியப்படும் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.