நள்ளிரவில் கருப்பசாமிக்கு கொள்ளையர்கள் பூஜை... நகை, பணம் அபேஸ்: அதிர்ந்துபோன நிதி நிறுவன உரிமையாளர்

நள்ளிரவில் கருப்பசாமிக்கு கொள்ளையர்கள் பூஜை... நகை, பணம் அபேஸ்: அதிர்ந்துபோன நிதி நிறுவன உரிமையாளர்

கேரளத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றைக் கொள்ளையடித்துச் சென்ற கும்பல், கொள்ளைக்கு முன்பு கருப்பசாமிக்கு படையல் போட்டு, பூஜை செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கும் சம்பவம் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தின் கொல்லம் மாவட்டம், பத்தனாபுரத்தில் பத்தனாபுரம் பேங்கர்ஸ் என்னும் தனியார் நிதி நிறுவனம் இயங்கிவருகிறது. இங்கு நகை அடகு, வட்டிக்கு சிறுதொழில்களுக்கு கடன் கொடுப்பது, ஏலச்சீட்டு உள்ளிட்ட பரிவர்த்தனைகள் நடந்துவருகிறது. இதை ராமச்சந்திரன் நாயர் என்பவர் நடத்திவருகிறார். இவர் வழக்கம்போல் தன் நிதி நிறுவனத்தை திறக்க வந்தார். கதவைத் திறந்ததும் நிதி நிறுவனத்தின் முகப்பிலேயே வெள்ளைக்குதிரையில், கையில் அரிவாளுடன் கழுத்து நிறைய மாலை சகிதம் கருப்பசாமி வரும் புகைப்படம் இருந்தது. அந்த புகைப்படத்திற்கு வேப்பிலைகளால் மாலை சூட்டப்பட்டிருந்தது. கூடவே அகல்விளக்கு ஒன்றும் ஏற்றப்பட்டு, அது அணைந்த நிலையில் இருந்தது. இதேபோல் மஞ்சள் கயிறு, சிறிய அளவிலான சூலாயுதம், அதில் குத்தப்பட்ட எலுமிச்சை பழம், இவற்றோடு கருப்பசாமிக்கு படைக்கப்பட்ட மது பாட்டிலும் இருந்தது. அந்த மதுபாட்டிலின் மூடி திறக்கப்பட்ட நிலையில் அதில் ஒரு சொட்டைக் கூட குடிக்காமல் அப்படியே இருந்தது. இதேபோல் ஒரு வெற்றிலையில், கருப்பு மையும் தடவப்பட்டிருந்தது.

கடை பூட்டப்பட்ட நள்ளிரவில் புகுந்த கும்பல் ஒன்று, கருப்பசாமிக்கு சிறப்பு பூஜை போட்டு ராமச்சந்திரன் நாயரின் நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்துச் சென்றது அதன்பின்னரே தெரியவந்தது. நிதி நிறுவனத்தின் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த 100 சவரன் நகைகள் திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதேபோல் ரொக்கப்பணம் நான்கு லட்சமும் திருடு போயிருந்தது. திருடு போன மொத்த மதிப்பு 34 லட்சம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் கொள்ளை நடந்த நிதி நிறுவனத்தில். ``நான் மிகவும் அபாயகரமானவன். என்னை பின் தொடராதே'' என்னும் வாசகங்களும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இந்த கொள்ளை சம்பவத்திற்கு முன்பு கொள்ளையர்கள் மேற்கொண்ட கருப்பசாமி பூஜையும், அந்த பூஜை முறையும் தமிழ் கலாச்சாரப்படி இருப்பதாகவும் இந்தத் திருட்டு சம்பவத்தை தமிழகத்தை சேர்ந்தவர்கள் அரங்கேற்றியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in