
திருப்பூர் அரசு பள்ளி அருகே இருந்த தகர கொட்டகைக்குள் அழுகிய நிலையில் நிர்வாணமாக பெண் சடலம் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் தாராபுரம் சாலை கே.செட்டிபாளையம் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தற்போது இந்த பள்ளியில் புதிய வகுப்பறை மற்றும் ஆய்வு அறைகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் தங்குவதற்காக பள்ளியின் பின்புறம் தகரத்தில் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், புதிதாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து பள்ளி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது, பணியாளர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த தகரக் கொட்டகைக்குள், 35 வயது மதிக்கத்தக்க பெண் நிர்வாண நிலையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் அவரது முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சடலமாக கிடந்த பெண் உயிரிழந்து 2 நாட்களுக்கும் மேல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், ஆயுதபூஜை தொடர் விடுமுறைக்காக பள்ளி விடுமுறை விடப்பட்டிருந்த சமயத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர் இங்கேயே கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு இடத்தில் கொலை செய்து யாரேனும் இங்கு கொண்டு வந்து போட்டு சென்றனரா எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் இப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். அரசுப்பள்ளி வளாகத்தில் பெண் சடலம் நிர்வாணமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வில்வித்தை போட்டியில் கை இல்லாத இந்திய வீராங்கனை ஷீத்தல் தங்கம் வென்று சாதனை
நீட் விலக்கு மசோதா... நேரடியாக குடியரசுத் தலைவரிடமே முதல்வர் வலியுறுத்தல்!
3 அடி உயரம்... 250 கிலோ எடை... ரஜினிக்கு சிலை அமைத்து குடும்பத்துடன் வழிபடும் ரசிகர்!
5 வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கும் பிரபல இயக்குநரின் மனைவி... கண்டுகொள்ளாத திரையுலகம்!
நவம்பர் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... பணிகளை முன்பே திட்டமிடுங்க!