6 வயது மகள் பிளேடால் கழுத்து அறுத்துக் கொலை... தாய்க்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை!

6 வயது மகள் பிளேடால் கழுத்து அறுத்துக் கொலை... தாய்க்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை!

சென்னையில் 6 வயது மகளை பிளேடால் கழுத்தை அறுத்துக் கொன்ற தாய்க்கு மகளிர் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த பவித்ரா (25) என்ற பெண் மகள் தனுஷ்யாஸ்ரீ (6), மகன் பரமேஷ் (3) ஆகியோருடன் மெரினா கடற்கரைக்கு வந்தார். அவர் குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், கடற்கரை பகுதில் அவர் மகளின் கழுத்தை பிளேடால் அறுத்ததை அடுத்து, சிறுமி தனுஷ்யாஸ்ரீ உயிரிழந்தார். தொடர்ந்து மகனை கொலை செய்வதற்காக சிறுவனின் கழுத்தை பிளேடால் அறுத்தார். மேலும், தனது கழுத்தையும் பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இந்நிலையில், அந்த வழியாக வந்த குதிரை ஓட்டிகள் அவர்களை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பிறகு பவித்ராவும், அவரது மகன் பரமேஷும் உயிர் பிழைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மெரினா போலீஸார் வழக்குப்பதிவு செய்து பவித்ராவை கைது செய்தனர்.

வழக்கு விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, பவித்ரா தனது மகளை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றசெயலில் ஈடுபடவில்லை என்றும், குடும்ப பிரச்சினை மற்றும் மன அழுத்தம் காரணமாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரிகிறது என்று குறிப்பிட்டார்.

எனவே, அவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.1,500 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும், சிறுவனின் மறுவாழ்வுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in