மகள்களின் காதல் திருமணத்துக்குச் சம்மதிக்காத கணவர் குடும்பத்துக்கு விஷம் வைத்த பெண்!

மகள்களின் காதல் திருமணத்துக்குச் சம்மதிக்காத கணவர் குடும்பத்துக்கு விஷம் வைத்த பெண்!

உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா அருகில் உள்ள ஜுனத்பூரைச் சேர்ந்தவர் தேவேந்திரா. ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு அருந்திய பின்னர் அவரும் அவரது தாயும், இரு சகோதரர்களும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தேவேந்திராவின் மனைவி ராஜ்குமாரி (45), மகள்கள் ஜோதி (21), அர்ச்சனா (20) ஆகியோர் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. அந்த இளம் பெண்களின் காதலர்களான அபிஷேக் (23), தீபக் (22) இருவரும் தலைமறைவானதால் சந்தேகம் மேலும் வலுத்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின.

தனது மகள்களின் காதல் திருமணத்துக்கு தேவேந்திராவும் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் குடும்பத்தினரை விஷம் வைத்துக்கொள்ள ராஜ்குமாரி முடிவுசெய்தார். அவரது மகள்களும், அப்பெண்களின் காதலர்களும் இணைந்து இந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

தற்போது தேவேந்திரா உள்ளிட்ட நால்வரும் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அவர்களது உணவில் விஷம் கலந்து கொல்ல முயற்சித்த ராஜ்குமாரி உள்ளிட்ட 5 பேரும் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் 14 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in