கரூரில் கந்துவட்டி கொடுமை: நடுரோட்டில் பெண் மீது தாக்குதல், பாலியல் தொல்லை!

கரூரில் கந்துவட்டி கொடுமை: நடுரோட்டில் பெண் மீது தாக்குதல், பாலியல் தொல்லை!

கரூரில் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய பெண்ணை கந்துவட்டி கும்பல் தாக்கி, பாலியல் தொல்லை கொடுத்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாளியாபட்டி பகுதியைச் சேர்ந்த நபர், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர், காமராஜபுரத்தில் இயங்கி வரும் பாலு பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் 60,000 ரூபாய் கடன் பெற்று 10 சதவீத  வட்டியும் செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு திடீரென வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. இதனால் தவணை கட்ட முடியாததால், நிதி நிறுவனத்தினர் பணம் கட்ட சொல்லி அழுத்தம் கொடுத்துள்ளனர்.

நிதி நிறுவனத்தினர் அழுத்தம் தருவதாக கடன் பெற்ற நபர், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸார் பணத்தை செலுத்த நிதி நிறுவனத்திடம் ஒரு மாத காலம் அவகாசம் பெற்றுத் தந்தனர். அந்த அவகாசமும் முடிந்ததால் நிதி நிறுவனத்தினர் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த 28-ம் தேதி நிதி நிறுவனத்தினர் கடன் வாங்கிய நபரின் மனைவி பணி முடித்து மாலை வீடு திரும்பும் போது நடுரோட்டில் கையைப் பிடித்து இழுத்து தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். நிதி நிறுவனத்தைச் சேர்ந்த இளவரசன், பாலசுப்பிரமணியன், சந்தோஷ், பொன்னுசாமி உள்ளிட்ட நான்கு பேர் இவ்வாறு செய்துள்ளனர்.

பின்னர் அந்தப் பெண்ணை ஆட்டோவில் நிதி நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று சரமாரியாகத் தாக்குதல் நடத்தி பாலியல் தொந்தரவும் செய்துள்ளனர். இரவு 9 மணிக்கு மேல் தாலி சங்கிலி, செல்போன் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு அந்தப் பெண்ணை துரத்தியுள்ளனர். வீட்டிற்கு சென்ற அவர் மயக்கம் அடைந்தார்.

இதன் பின்னர் அவர் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பாலு பைனான்ஸ் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், சந்தோஷ் ஆகிய இரண்டு பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் கரூர் நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in