அதிர்ச்சி... போலீஸாருக்கு பயந்து ஹெராயின் பாக்கெட்டை விழுங்கிய இளம்பெண்!

எண்டோஸ்கோபி செய்முறை
எண்டோஸ்கோபி செய்முறை

சிம்லாவில் போலீஸ் சோதனையிலிருந்து தப்பிக்க ஹெராயின் போதைப்பொருளை பாக்கெட்டோடு விழுங்கிய இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பெண் விழுங்கிய ஹெராயின் பாக்கெட்டை மீட்க, போலீஸார் பின்னர் மருத்துவ உதவியை நாடினர்.

கனமழை, மேக வெடிப்பு, நிலச்சரிவு என இயற்கைப் பேரிடரால் தவித்து வரும் வடகிழக்கு மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஹெராயின் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக சிம்லா மாவட்ட போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, சஞ்சௌலி பகுதியில் போலீஸார் திடீர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரே காரில் பயணித்த 4 இளைஞர்கள், ஒரு இளம்பெண் ஆகியோரை மடக்கி விசாரணை மேற்கொண்டபோது, அதனை அவர்கள் எதிர்கொண்ட விதம் போலீஸாருக்கு பொறிதட்டச் செய்தது. இதனையடுத்து அவர்களை காவல் நிலையத்துக்கு அள்ளிப்போய் முறைப்படி விசாரித்தனர். அப்போது அந்த உண்மை அவர்களிடமிருந்து வெளிப்பட்டது.

போதைப்பொருள்
போதைப்பொருள்

போலீஸார் தங்கள் வாகனத்தை மறித்ததும், காரில் வந்த ஷாஹின் சுல்தான் என்ற 26 வயது பெண் தன் வசமிருந்த ஹெராயின் போதைப்பொருளை பாக்கெட்டோடு விழுங்கி இருக்கிறார் என்ற தகவல் தெரிய வந்தது.

போதைப்பொருள் கடத்தல் மட்டுமன்றி, உயிருக்கு ஆபத்தான ஹெராயின் போதைப்பொருளை பாக்கெட்டோடு ஒரு பெண் விழுங்கியிருப்பது போலீஸாரை அதிரச் செய்தது.

இளம்பெண் வயிற்றில் வில்லங்கம் நேர்வதற்குள் அவரைக் காப்பாற்றவும், போதைப்பொருளை மீட்கவும் முடிவு செய்த போலீஸார், இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உதவியை நாடினர். அங்கே இளம்பெண் வயிற்றை ஸ்கேன் எடுத்துப் பார்த்த மருத்துவர்கள், ஹெராயின் பாக்கெட் இருப்பை உறுதி செய்தனர்.

பின்னர் எண்டோஸ்கோப்பி உபாயம் மூலம் பெண்ணின் வயிற்றில் பதுங்கியிருந்த ஹெராயின் பாக்கெட்டை மருத்துவர்கள் மீட்டனர். இதனையடுத்து, ஹெராயின் பாக்கெட்டை விழுங்கிய ஷாஹின் மட்டுமன்றி உடன் பயணித்த முகுல் சர்மா, ஹேப்பி சந்தேல், சுவரவ் பன்வார், ஹர்ஷ் என 4 இளைஞர்களையும் சேர்த்து கைது செய்தனர்.

அவர்கள் மீது போதைப்பொருள் உபயோகம், கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிம்லா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in