18 மாத ஆண் குழந்தையை நரபலி கொடுத்த கர்ப்பிணி: மந்திர சடங்குகளால் நேர்ந்த விபரீதம்!

18 மாத ஆண் குழந்தையை நரபலி கொடுத்த கர்ப்பிணி: மந்திர சடங்குகளால் நேர்ந்த விபரீதம்!

உத்தர பிரதேச மாநிலத்தில் மந்திர சடங்குகள் செய்வதற்காக ஒரு கர்ப்பிணிப் பெண் 18 மாத குழந்தையை நரபலி கொடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் அடம்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மலக்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. சரோஜ் தேவி என்ற 32 வயது பெண் மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக பேசிய குழந்தையின் தந்தை ரமேஷ் குமார், "எனது மூத்த சகோதரரின் மனைவிக்கு தொடர்ச்சியாக மூன்று குழந்தைகள் பிறந்தவுடனே இறந்துவிட்டன. எனவே நான்காவது முறையாக கர்ப்பமானபோது அவர்கள் ஆலோசனைக்காக ஒரு மந்திரவாதியை நாடினர். அவரின் ஆலோசனைப்படி தங்களின் நான்காவது குழந்தையை உயிர்ப்பிழைக்க வைப்பதற்காக எனது 18 மாத கைக்குழந்தையைக் கொன்றனர்” என தெரிவித்தனர்

முன்னதாக குழந்தையின் பாட்டி கங்காதேவி மற்றும் சரோஜ் தேவி ஆகியோரிடம் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த ஆண் குழந்தை காணாமல் போனது. காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க முடியாததால், ரமேஷ் குமார் காவல்துறையில் புகார் அளித்தார். அதற்கு ஒரு நாள் கழித்து, கிராமத்திற்கு வெளியே உள்ள தனது கரும்பு தோட்டத்தில் குழந்தையின் சில உடல் உறுப்புகள் கிடப்பதாக விவசாயி ஒருவர் போலீஸில் புகார் செய்தார். தொடர்ந்து விசாரணை நடத்தியபோது வீட்டில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போன ரமேஷ் குமாரின் குழந்தையின் உடல் பாகங்கள் வயலில் இருந்து எடுக்கப்பட்டன.

இது தொடர்பாக பேசிய அம்ரோஹா காவல்துறை கண்காணிப்பாளர் ஆதித்யா லாங்கே, "பலியிடும் சடங்குகளின் போது சிறுவன் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. ஒரு மந்திரவாதியின் உத்தரவின் பேரில் தான் சிறுவனைக் கொன்றதாக குற்றவாளிகள் போலீஸிடம் ஒப்புக்கொண்டார். சரோஜ்தேவி குழந்தையின் கழுத்தை நெரித்துள்ளார். மூச்சுத் திணறலால் குழந்தை இறந்தவுடன், கால் மற்றும் பிற உடல் பாகங்களை துண்டித்துள்ளனர். குழந்தையின் தலை மற்றும் நெற்றியில் திலகம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது” என தெரிவித்தார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in