
தன் கணவரின் நண்பருடன் ஏற்பட்ட திருமணத்தை மீறிய முறை தவறிய உறவால் தன் உயிரை இழந்திருக்கிறார் இளம்பெண்.
மறைமலை நகர் ராஜிவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்(29). பிளம்பர் மற்றும் எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வரும் சுந்தரின் மனைவி தாரணி( 22 ). இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
சுந்தரும், சிங்கபெருமாள் கோவில் அடுத்த மெல்ரோசாபுரம் பகுதியைச் சேர்ந்த சுஜின்,( 30,) என்பவரும், சில ஆண்டுகளாக தொடர்ந்து ஒன்றாக வேலை செய்து வந்தனர். இதனால் இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது. அதனால் இருவரும் குடும்ப நண்பர்களாக மாறினர். ஒருவர் வீட்டுக்கு ஒருவர் சென்று வருவது வழக்கமாக இருந்தது.
இந்நிலையில் சுந்தர் வீட்டிற்கு சுஜின் அடிக்கடி சென்று வந்ததில் சுஜினுக்கும், சுந்தர் மனைவி தாரணிக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் எல்லை மீறியுள்ளனர். இது, தாரணியின் கணவர் சுந்தருக்கு தெரிய வந்த நிலையில், பலமுறை தாரணியை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்களின் நட்பு தொடர்ந்தது.
நேற்று காலை சுந்தர் வேலைக்கு சென்றதும் தாரணியை பார்க்க அவரது வீட்டிற்கு சுஜின் வந்துள்ளார். அப்போது, இருவரும் இனி பழக வேண்டாம். அதனால் இங்கு என்னைப் பார்க்க வர வேண்டாம் என்று தாரணி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுஜின், வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து தாரணியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்த தாரணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
தாரணி உயிருக்கு போராடிய அந்த நிமிடங்களை தனது செல்போனில் பதிவு செய்த சுஜின், அதை சுந்தருக்கும் அனுப்பியுள்ளார். இதைப் பார்த்து பதறிப்போன சுந்தர் வீட்டுக்கு ஓடிச் சென்று பார்த்த போது அங்கு தாரணி உயிரிழந்து கிடந்துள்ளார்.
அதன்பின், சுஜின் மறைமலை நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து, சம்பவம் நடந்த வீட்டிற்கு சுஜினை அழைத்துச் சென்று, தடயங்களைச் சேகரித்த மறைமலை நகர் போலீசார், தாரணியின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சுஜினை கைது செய்துள்ளனர்.