
சென்னையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை கொளத்தூர் லட்சுமிபுரம் சப்தகிரி நகரைச் சேர்ந்தவர் முருகன்.இவர் அண்ணா நகரில் உள்ள சிக்கன் கடை ஒன்று வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (47). நேற்று காலை முருகன் வழக்கம்போல் வேலைக்கு சென்று நிலையில் அவரது மனைவி லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. இரவு வேலை முடிந்து முருகன் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்து அவரது மனைவி பலத்த காயங்களுடன் மயங்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தனது மனைவியை மீட்டு ரெட்டேரியில் உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். பின்னர் மருத்துவர்கள் அறிவுத்தலின்படி அவரை மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது அங்கு அவரை பரிசோதித்து மருத்துவர்கள், லட்சுமி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து முருகன் , புழல் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். இதன் பேரில் புழல் போலீஸார் லட்சுமி உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் கணவன் வேலைக்குச் சென்ற பின்னர் மனைவி வீட்டில் படுத்திருந்த போது எதிர்பாராத விதமாக வீட்டின் மேற்கூரை இடிந்து லட்சுமி மீது விழுந்தது தெரியவந்தது. இவ்விபத்து குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.