ஜெபம் செய்வதாக கூறி பணம் பறித்ததுடன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக புதுக்கோட்டை தேவாலய ஊழியர் மீது தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர் புகார் அளித்துள்ளார்.
தூத்துக்குடியைச் சார்ந்த பெண் ஒருவர் தனக்கு பிரச்சினை வந்தபோது, புதுக்கோட்டையைச் சேர்ந்த பாதிரியார் மைக்கேல் என்பவரிடம் வந்துள்ளார். அப்படி வந்தபோது ஜோஷ்வா என்பவர் அறிமுகமாகியுள்ளார். பாதிரியாரைவிட இவர் நன்றாக பிரேயர் பண்ணுவார் என்று சொன்னதால் அவரை நம்பியுள்ளார். அவர் பெண்ணின் வீட்டுக்கு வந்து பிரேயர் செய்துள்ளார்.
அப்படி பிரார்த்தனை செய்ய அடிக்கடி வந்ததால் இருவருக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் யோகா சென்டர் வைக்கப்போவதாக பணம் கேட்டுள்ளார். பெண்ணும் கொடுத்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு கொடுத்த பணத்தை அந்த பெண் திரும்ப கேட்டுள்ளார்.
அதனால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அதிலிருந்து ஜோஷ்வா அந்த பெண்ணிடம் பேசவும் இல்லை, போனை எடுக்கவும் இல்லையாம்.
அதனால் அவரின் வீட்டுக்குச் சென்ற அந்தப் பெண் வீட்டில் அவருக்கு ஒரு மனைவி இருப்பதை தெரிந்து அதிர்ந்து போனார். இது குறித்து கேட்டபோது ஏதேதோ சொல்லி சமாளித்திருக்கிறார். ஆனால் பணத்தை மட்டும் திரும்ப தரவே இல்லை. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் கேட்டதற்கும் அவர் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அழுது புலம்பும் அந்த பெண் இதுகுறித்து ஜோஸ்வாவின் உறவினர்கள் மற்றும் ஊர்காரர்களிடம் நியாயம் கேட்டு முறையிட்டு வருகிறார். தனக்கு நடந்த அநியாயம் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என்று அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.