ஆர்யன் வழக்கின் சாட்சி மரணம்: நடந்தது என்ன?

பிரபாகர் செய்ல்
பிரபாகர் செய்ல்

நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கின் சாட்சியாக இருந்த பிரபாகர் செய்ல், நேற்று மாலை மரணமடைந்தார். 37 வயதான பிரபாகர், மும்பை செம்பூரில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் காட்கோபார் பகுதியில் உள்ள ராஜவாடி மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியதாகவும் அவரது வழக்கறிஞர் துஷார் கண்டாரே தெரிவித்திருக்கிறார்.

கடந்த அக்டோபர் மாதம், மும்பையில் சொகுசுக் கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தொன்றில், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை உபயோகித்ததாக ஆர்யன் கான் உள்ளிட்ட 20 பேர் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் இருவர் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர். மற்றவர்கள் ஜாமீனில் வெளிவந்துவிட்டனர். இந்த வழக்கின் இன்னொரு சாட்சியான கிரண் கோசாவியின் பாதுகாவலராக இருந்தவர் பிரபாகர்.

மிக முக்கியமான வழக்கின் சாட்சியாக இருந்த அவர் திடீரென மரணமடைந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. “திடகாத்திரமாக இருந்த மனிதர் திடீரென மரணமடைந்தது எப்படி?” என்று மகாராஷ்டிர உள் துறை அமைச்சர் திலீப் வால்ஸே பாட்டீல் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். எனினும், பிரபாகரின் மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த வழக்கிலிருந்து வெளிவர, ஆர்யன் கானுடன் கிரண் கோசாவி 25 கோடி ரூபாய் பேரம் பேசியதாக பிரபாகர் சாட்சியம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in