மேட்டுப்பாளையம் அருகே முள்ளி-மஞ்சூர் சாலையில் குட்டிகளுடன் காட்டு யானை கூட்டம் உலா வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காடு பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல மாற்று பாதை உள்ளது. பில்லூர் அணை செல்வதற்கு பிரதான சாலையாக உள்ள இந்த சாலையின் வழியாக, நீலகிரி மாவட்டத்தின் மஞ்சூர் முதல் கெத்தை வழியாக உதகைக்கு செல்ல இந்த சாலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சாலை அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் அவ்வப்போது யானைகள், காட்டுமாடுகள், மான், சிறுத்தை மற்றும் பல்வேறு வனவிலங்குகள் சாலையை கடந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில்அந்த சாலையில் முள்ளி பகுதியில் நடமாடிய யானை கூட்டம் ஒன்று இரண்டு குட்டியுடன் சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த சுற்றுலாப் பயணிகளின் காரை காட்டு யானை கூட்டம் வழிமறித்தது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அந்த காரில் வந்தவர்கள், ஆபத்தை உணராமல் முன்னோக்கி வாகனத்தை இயக்கினர். இதனால் யானைகள் அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றன.
மலைப்பாதைகளில் விலங்குகள் நின்றிருந்தால், அவை வனப்பகுதிக்குள் செல்லும் வரை காத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள வனத்துறையினர், இது போன்ற செயல்களில் ஈடுபட்டு விலங்குகளை அச்சப்படுத்தி அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பளிக்க கூடாது எனவும் எச்சரித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.