`கணவர் இல்லாத உலகில் வாழ பிடிக்கவில்லை'- துயரம் தாங்க முடியாமல் மனைவி எடுத்த விபரீத முடிவு

`கணவர் இல்லாத உலகில் வாழ பிடிக்கவில்லை'- துயரம் தாங்க முடியாமல் மனைவி எடுத்த விபரீத முடிவு

தனது கணவன் கொலை செய்யப்பட்டு விட, அந்தத் துயரம் தாளாமல் அவரது மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் கும்பகோணம் மக்களை மிகவும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மேலக்காவிரி, விருமாண்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் தினேஷ் (எ) தினகரன் (27). இவர் கார் ஓட்டுநராக பணி புரிந்து வந்தார். பணிக்காக கடந்த 31-ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் அன்றைய தினம் வீடு திரும்பவில்லை. அன்றைய தினம் பெருமாண்டி, பத்மநாதபுரம் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் தினகரன் உயிரிழந்து கிடந்துள்ளார்.

தகவலறிந்து சென்ற கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸார், சடலத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் கொலை தொடர்பாக, 6 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை கேரளாவில் நேற்று கைது செய்த நிலையில் தலைமறைவாகியுள்ள மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை கொலையான தினகரன் மனைவி செல்வக்குமாரி (28), தனது வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் கணவன் இறந்த துயரம் தாங்காமல் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருவரும் மிகுந்த அந்நியோன்யமான தம்பதிகளாக இருந்து வந்திருக்கின்றனர். அந்த நாள் கணவன் கொலையான செய்தி கேட்டு மயங்கி விழுந்த செல்வகுமாரி அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார். தினகரன் கொலையான அன்றைய தினமே, துக்கம் தாங்காமல் உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றவரை உறவினர்கள் காப்பாற்றியுள்ளனர். ஆனாலும் கணவர் இல்லாத உலகில் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்று தொடர்ந்து அழுது கொண்டே இருந்திருக்கிறார்.

இந்நிலையில் அறையில் தனிமையில் இருந்த அவர், அதனைப் பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அவரது உறவினர்கள் மற்றும் கும்பகோணம் மக்களை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in