அதிர்ச்சி! மனைவியை ஓடஓட விரட்டி கொலை செய்த கணவன்

அதிர்ச்சி! மனைவியை ஓடஓட விரட்டி கொலை செய்த கணவன்

குடும்பத் தகராறு காரணமாக தூத்துக்குடி அருகே மனைவியை கணவன் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் அருகே சர்ச் தெருவைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளியான ராஜ்குமாருக்கு, பத்து ஆண்டுகளுக்கு முன்பு மீனா (28) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு இரண்டு  மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக ராஜ்குமாருக்கும், மீனாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் நேற்று இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

தகராறு முற்றியதை அடுத்து ஆத்திரம் அடைந்த ராஜ்குமார்,  அரிவாளை எடுத்து மனைவி மீனாவை வெட்ட முயன்றார். அப்போது, மீனா அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்து வெளியே ஓடினார். ஆனால் விடாமல் துரத்தி வந்த ராஜ்குமார், அரிவாளால் மீனாவின் தலையில் வெட்டினார்.

மீனா சரிந்து விழுந்ததை அடுத்து, ராஜ்குமார் தொடர்ந்து சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் மீனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பின்னர் ராஜ்குமார் அங்கிருந்து தப்பிச் சென்றார். அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கணவர் ராஜ்குமாரைத் தேடி வருகின்றனர்.

மேலும் இந்த கொலை குடும்பத் தகராறு காரணமா நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in