கணவரை கொன்று எரித்த மனைவி... நாடகமாடிய மகன்: நடத்தை சந்தேகத்தால் நடந்த விபரீதம்

கணவரை கொன்று எரித்த மனைவி... நாடகமாடிய மகன்: நடத்தை சந்தேகத்தால் நடந்த விபரீதம்
சுடுகாட்டில் போலீஸார் விசாரணை

சீர்காழி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனை அடித்து கொலைசெய்து, தீயிட்டு கொளுத்திவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவியையும், அவருக்கு உடந்தையாக இருந்த மகனையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள கீழமூவர்கரை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (45), இவருக்கும் அவரது மனைவி வசந்தாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடப்பது வழக்கம். இவர்களுக்கு ரூபன் (22), குகன் (16) என்ற இரண்டு மகன்களும், ரூபா (17) ஒரு மகளும் உள்ளனர்.

திருமணமாகி 24 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் மனைவியின் மீது சந்தேகப்படுவது சக்திவேலின் வழக்கமாக இருந்திருக்கிறது. மனைவி வசந்தாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு தினந்தோறும் மது அருந்தி விட்டு வந்து குடிபோதையில் வசந்தாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். அதேபோல் நேற்று கணவன்- மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட வசந்தா மற்றும் ரூபன்
கைது செய்யப்பட்ட வசந்தா மற்றும் ரூபன்

இந்நிலையில், சக்திவேலின் வீட்டில் இருந்து துர் நாற்றமும், புகையும் கிளம்பியுள்ளது. அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சக்திவேலின் வீட்டிற்கு வந்து என்ன ஏது என்று விசாரித்து இருக்கின்றனர். அப்போது தன்னிடம் தகராறு செய்த சக்திவேல், அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டு விட்டதாகவும், அறைக்குள் இருந்த நிலையில் தீவைத்துக் கொண்டு விட்டதாகவும் சொல்லி வசந்தா கதறி அழுதுள்ளார்.

இதனையடுத்து அறையில் பாதி எரிந்த நிலையில் இருந்த சக்திவேல் உடலை எடுத்து, அந்த உடலுக்கு இறுதி மரியாதைகளை செய்த உறவினர்கள் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் கிராம நிர்வாக அலுவலர் புகழ்வேந்தன் சக்திவேலின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக்கிற்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து அங்கு விரைந்து வந்த சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக் தலைமையிலான காவல் துறையினர் இடுகாட்டில் அடக்கம் செய்ய இருந்த சக்திவேலின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக திருவெண்காடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில், மனைவி வசந்தாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, சக்திவேல் குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி வசந்தா ,சக்திவேலை சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. சக்திவேல் உயிரிழந்த நிலையில் கொலையை மறைப்பதற்கு மகனின் உதவியால் முயற்சித்துள்ளார்.

வீட்டில் இருந்த துணிகளை இறந்த சக்திவேலின் மீது போட்டு மண்எண்ணெய் ஊற்றி கொளுத்திவிட்டு அறையின் கதவை மூடியிருக்கிறார். தாய் கொலை செய்ததை மறைத்து தந்தையின் உடலை அடக்கம் செய்ய மகன் ரூபன் முயற்சி செய்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தாய், மகன் இரண்டு பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

கணவனை அடித்து கொலை செய்த மனைவி அவரது உடலில் தீ வைத்துக் கொளுத்தியிருப்பதும், அதனை மறைத்து நாடகமாடியதும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.