கணவர், குழந்தைகளுடன் தீபாவளிக்கு ஜவுளி எடுப்பதற்காக மகிழ்ச்சியுடன் சென்ற பெண் திரும்பி வரும் வழியில் இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அடுத்த கடலங்குடி பகுதியில் வசித்து வருபவர் முத்துகிருஷ்ணன் - இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு 9 வயதில் சுகுணா என்ற பெண் குழந்தையும், 8 வயதில் முத்தழகன் என்ற ஆண் குழந்தை மற்றும் 8 மாதத்தில் முகேஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் முத்துகிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் இருசக்கர வாகனத்தில் தீபாவளிக்கு புத்தாடை எடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் காட்டுமன்னார்கோயில் பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் புத்தாடைகளை வாங்கிக்கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் கொள்ளிடம் ஆற்றில் உள்ள முட்டம் உயர் மட்ட பாலத்தில் வந்தபோது இரண்டு சாலைகள் இணைக்கும் இடத்தில் உள்ள பள்ளத்தில் எதிர்பாராத விதமாக அவர்கள் சென்ற இருசக்கர வாகனமானது இறங்கியுள்ளது. இதில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தது. அதிலிருந்த முத்துகிருஷ்ணன், அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் கீழே விழுந்துள்ளனர்.
இந்த விபத்தில் சுகந்தி தலையில் பலமாக அடிபட்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பிய நிலையில் சுகந்தி கையில் வைத்திருந்த 8 மாத குழந்தை காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சுகந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.