தீபாவளி நாளில் சோகம்... குடிக்கப் பணம் கேட்ட கணவன்... அடித்துக் கொலை செய்த மனைவி!

கல்யாணி
கல்யாணி

தீபாவளி அன்று குடிக்கப் பணம் கேட்டு துன்புறுத்திய கணவனை மனைவி அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

கும்பகோணத்தை அடுத்துள்ள திருப்பனந்தாள் முட்டுக்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் கிட்டு மகன் அன்பழகன் (62). இவரது மனைவி கல்யாணி (58). அன்பழகனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.  நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலையிலிருந்து அன்பழகன் குடித்து வந்துள்ளார். 

நேற்று இரவு போதை தெளிந்த அன்பழகன்,  மேலும் குடிக்க பணம் வேண்டும் என்று கேட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.  பணம் தர மறுத்ததால் மனைவியை அடித்து உதைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி கல்யாணி கோபத்தில் வீட்டில் இருந்த  கட்டிங் மிஷினை எடுத்து கணவரை திருப்பி தாக்கியுள்ளார். இதில் அன்பழகன் தலையில்  பலமான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்  ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். 

அன்பழகன்
அன்பழகன்

சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் அன்பழகனை மீட்டு திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு  முதலுதவி செய்யப்பட்டது.  அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம்  தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள்  அன்பழகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த திருப்பனந்தாள் போலீஸார்,  அன்பழகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன்  மனைவி கல்யாணியை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி நாளில் கணவனை மனைவி அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் திருப்பனந்தாள் பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in