கணவரை கொல்பவருக்கு ரூ.50,000 பரிசு... வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வைத்த மனைவி மீது போலீஸ் வழக்கு

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்
வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்

’கணவரைக் கொல்வோருக்கு ரூ.50,000 வெகுமதி’ என்ற அறிவிப்பை வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸாக வைத்த மனைவி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காதல் சின்னமான தாஜ்மகால் அமைந்திருக்கும் ஆக்ராவில், அதற்கு சற்றும் பொருந்தாத விநோதமும், விபரீதமும் கலந்த இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ‘எனது கணவரைக் கொன்றால் ரூ.50,000 பரிசு தருகிறேன்’ என்று வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்த மனைவி குறித்து, அதே வாட்ஸ் ஆப்பில் வைரலானது.

மத்திய பிரதேசத்தின் பிந்த் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை, உத்தரபிரதேசம் ஆக்ராவை சேர்ந்த இளைஞர் 2 ஆண்டுகள் முன்னர் மணம் புரிந்தார். ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே தம்பதியர் இடையே முரண்பாடுகள் அதிகரித்தன.

வாட்ஸ் ஆப்
வாட்ஸ் ஆப்

இருவரும் அடிக்கடி குடும்பத் தகராறில் முட்டிக்கொள்வதும் பின்னர் சமாதானம் ஆவதுமாக சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வந்தன. மண வாழ்க்கையில் இனியும் மகிழ்ச்சிக்கு வாய்ப்பில்லை என உணர்ந்த அந்தப் பெண், 2022 மத்தியில் கணவரை விட்டுப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வர ஆரம்பித்தார்.

மேலும், கணவரை விட்டுப் பிரிந்து வாழ்வதால், முறையான விவாகரத்து கிடைக்கும் வரை தனக்கான பராமரிப்பு தொகையை கணவர் வழங்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் மனைவி புகாரும் செய்திருக்கிறார். விவாகரத்து முடிவு காரணமாக மனைவி வீட்டாருடனும் கணவருக்கான விரோதம் அதிகரித்தது.

இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்னர் வழக்கம்போல சமாதானத்தூதுக்காக மனைவி வீட்டுக்கு சென்றபோது, நிலைமை முற்றிலுமாக மாறி இருப்பதை கணவர் கண்டறிந்தார். அங்கிருந்து நேராக காவல் நிலையம் சென்றவர் மனைவியும் அவரது வீட்டாரும் தன்னை கொல்ல முயல்வதாக புகார் தெரிவித்திருக்கிறார்.

அது மட்டுமன்றி, மனைவி தனது பக்கத்து வீட்டு நபருடன் தகாத உறவு வைத்திருப்பதாகவும், அதுவே ஆரம்பம் முதல் தம்பதி இடையிலான தகராறுக்கு காரணம் என்றும் அவர் புகார் தெரிவித்திருக்கிறார். கணவரின் போலீஸ் புகார் குறித்த தகவலை அறிந்ததும் மனைவி உக்கிரமடைந்தார்.

வாட்ஸ் ஆப்
வாட்ஸ் ஆப்

அதிலும் தகாத உறவு குற்றச்சாட்டால் ஆவேசமான அந்த மனைவி, அதே கோபத்தில் ‘கணவரை கொல்பவருக்கு ரூ50 ஆயிரம் பரிசுத்தொகை’ என்று வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைத்தார். இந்த விவரம் கணவர் பார்வைக்கு வந்ததும், அது குறித்து இன்னொரு புகாருடன் காவல் நிலையத்தில் முறையிட்டார். இம்முறை பிரச்சினையின் வீரியம் புரிந்த போலீஸார், மனைவி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இளம் கணவன் - மனைவி இடையிலான பிரச்சினை சமரசத்துக்கும் வாய்ப்பிருப்பதால், தம்பதி குறித்த கூதல் தகவல்களை போலீஸார் தற்போதைக்கு வெளியிடவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in